வாழும் போது ஒரு மனிதன் எத்தனையோ ஆசைகளைச் சுமந்திருப்பான். அவற்றில் சில நிறைவேறியிருக்கும். சில நிறைவேறாது போயிருக்கும். ஆனால் தான் மரித்த பிறகும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு… அந்த ஆசை நிறைவேறாது போனால்…
அப்படி ஒரு நிலை கருணாநிதிக்கு வந்திருக்கிறது. உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்டு மரணிப்பதை பரிசாகக் கொடுப்பார்கள் தண்டனை கொடுப்பவர்கள்! தான் வாழும் போது செய்த கர்ம வினைதான் கருணாநிதிக்கு தண்டனையாகக் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிப்போர்.
அண்ணாத்துரை மரணித்த போது கருணாநிதி ஒரு கவிதை எழுதினார். அண்ணா ஒரு புதிர்! என்று அண்ணாவின் மறைவிற்கு கருணாநிதியின் கவிதாஞ்சலியில்
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத்
தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா…
நான் வரும் போது கையோடு
கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா.
– என்று அண்ணாவின் அருகே தம்பியாய் தானிக்க ஆசைப்பட்டார் கருணாநிதி. அது கட்சியின் உயர் மட்டக்குழுவிலாகட்டும், அமைச்சரவையில் ஆகட்டும், அதுவும் சமாதியில் கூட ஆகட்டும் … தானும் அந்த அண்ணாவின் அருகே சமாதியினுள் துயில் கொள்வோம் என்று கருதினார்.
ஆனால் விதி என்று சொன்னால் அது கருணாநிதியின் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பொருந்தாமல் போகும். அதற்கு தனக்குத்தானே இட்ட கட்டளை என்று சொல்லலாம்.
கர்மவீரர் காமராஜரின் மறைவின் போது, கருணாநிதி முதல்வராக இருந்ததும், காமராஜரின் சமாதியை கடற்கரையில் அமைக்க இடம் கேட்டபோது, முதல்வராகப் பதவி வகிக்கும் போது உயிரிழந்தவருக்கு தான் அந்த இடம் என்று கருணாநிதி கறாராக மறுத்ததையும், இந்த 40 ஆண்டுகளாகச் சொல்லிச் சொல்லி வருகிறது தமிழ் உலகம்.
தான் விதித்த அந்த விதிமுறையை இப்போது தனக்காக மீறக் கூடாது என்ற காரணத்தால் தான், எப்படியும் வெற்றி பெற்று முதல்வராகி, பதவியில் இருக்கும் போதே மரணத்தைத் தழுவிட வேண்டும் எனும் ஆசை அவருக்குள் இருந்தது போலும்! கடந்த முறை சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 2016ல் திமுக.,வில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா அழகிரியா என்று போட்டி வந்து, ஸ்டாலினை முன்னிறுத்துங்கள் என்று கட்சியில் சொன்னதாகவும், அதற்கு ஸ்டாலினை முன்னிறுத்தி அதனால் கட்சிக்குள் பிளவு வந்து விடக் கூடாதென்ற எண்ணத்தால், தானே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தல் போலும் கருணாநிதி ஒரு கருத்தைச் சொன்னார்…
எனக்காக இயற்கையாக ஏதாவது ஆனால்தான், ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர முடியும் என்பது! அந்த அளவுக்கு முதல்வர் பதவியில் கண்ணாக இருந்தது, கருணாநிதிக்கு மெரினாவில் இடம்தேடித்தான் என்று விமர்சித்தவர்கள் பலர். ஆனால் இப்போது அதுவே அவருக்கு சிக்கலாகி இருக்கிறது.
கருணாநிதியின் உடல் நிலை குறித்து அடுத்த அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, நிலவரத்தை எடுத்துக் கூறியுள்ளனர் திமுக.,வினர். ஸ்டாலின் தலைமையில் சென்ற அவர் குடும்பத்தினர், கட்சிக்காரர்கள் அனைவரும், முதல்வரிடம் வைத்த கோரிக்கை மெரினா குறித்தானது என்று கூறப்படுகிறது. ஆனால், அதிமுக.,வினர் கறாராக, அதனை மறுத்துவிட்டனராம்!
சொல்லப் போனால், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இந்த அளவுக்கு அதிமுக.,வினர் எவரும் திமுக.,வினருடன் நெருங்கியிருக்கவோ, அல்லது பேசியிருக்கவோ முடியாது. அதே போல்தான் திமுக.,வினரும். ஜெயலலிதா இல்லாத நிலையில், அதுவரை தாமும் உயிர்பிடித்து உலவி வந்த கருணாநிதி, ஜெயலலிதா மரணித்த நாள் முதல் திடீரென மௌனியானார். அது அவரும் இதற்காகக் காத்திருந்தது போலவே வெளிப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு காவேரி மருத்துவமனை தனது அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப் பட்டிருக்கிறது.! அதுவரை அனுமானங்களும் விவாதங்களும் ஓடிக் கொண்டுதானிருக்கும்!




