மதுரை: இன்று திமுக., தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இது குறித்துக் கூறுகையில், திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. இடைத் தேர்தல் வந்தால், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றார்.
வரும் ஆக.28ம் தேதி திமுக., பொதுக் குழுவில் ஸ்டாலின் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதி சமாதி நோக்கி பேரணியை நடத்தவுள்ள அழகிரி, அதை லைவ்வாக ஒளிபரப்ப அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.
கருணாநிதி காலமான நிலையில், கட்சி ரீதியிலான பிரச்னையை கிளப்பினார் அழகிரி. கட்சி நிதி குறித்து அவர் கூறிய கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், தன் பின்னால் திமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் வரை இருப்பதாக அவர் கூறினார்.மேலும் தான் திமுகவுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதியின் சமாதி உள்ள மெரினா கடற்கரைக்கு பேரணி செல்கிறார். தன்னுடன் ஒரு லட்சம் பேர் அதில் பங்கேற்பர் என்று கூறிய அழகிரி, தனது நடை பயணம் திமுகவில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
அழகிரியின் இந்தப் பேச்சால் திமுக நிர்வாகிகள் சற்று கலக்கம் அடைந்தனர். அழகிரியின் நடைபயணத்தை சன் டிவியோ அல்லது கலைஞர் டிவியோ நேரடி ஒளிப்பரப்பு செய்யாது. இது அழகிரிக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே தெரியும்.
இதனால் தனது நடைப் பயணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்து திமுக மத்தியில் சலசலப்பை உண்டாக்க ஒரு வியூகத்தை அழகிரி வகுத்து வருகிறார். அதன்படி மற்ற செய்தி சேனல்களிடம் தனது பேரணியை செப்டம்பர் 5ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது முயற்சி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!




