சென்னை:
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த தலைவர் குறித்து பேசப்பட்டது. அதில், ஸ்டாலினை தேர்வு செய்ய முடிவு செய்யப் பட்டது. அடுத்து வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசிபெற்றனர். பின்னர், மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று தங்களது வேட்புமனுவை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து வேட்புமனுவை கலைஞர் படத்தின் அருகே வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தயாளு அம்மாளிடம் இருவரும் ஆசி பெற்றனர். அப்போது தயாளு அம்மாள் இருவருக்கும் நெற்றியில் திருநீறு இட்டு ஆசி அளித்தார். பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். திமுக.,வைச் சேர்ந்த 65 மாவட்டச் செயலாளர்கள் வேட்பு மனுவை முன்மொழிந்தனர்.
இன்று மாலை 4 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிவடைந்தது. அப்போது, ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனை திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். எனவே, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு 28ஆம் தேதி முறையாக வெளியாகும் என்றார் ஆர்.எஸ்.பாரதி. பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு செய்யவில்லை. எனவே அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.





