லண்டன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.
இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். மற்றவர்களும், காங்கிரஸ் ஜிந்தாபாத் என கோஷம் போட்டனர். உடனடியாக வந்த போலீசார், காலிஸ்தான் ஆதரவாளரகளை ராகுல் வருவதற்கு முன்னர் வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியப் படுகொலை குறித்துப் பேசினார். அப்போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என்பதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்பதை ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவம் பின்னர் கலவரமாக மாறியது என்று கூறினார். அவரது பேச்சுக்கு சீக்கிய அமைப்புகள், சீக்கிய சமுதாயத்தினர் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அவர் பேச்சுக்கு சீக்கிய காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு கோஷம் எழுப்ப முயன்றனர்.




