கடலை சுத்தப்படுத்தும் ‘பைட்டோபிளாங்க்டான்’

 

 
 
நிலத்தில் எப்படி மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறதோ அதே போல் கடலுக்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்கிக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு கடலை மாசுபடாமல் இருக்க வைக்கிறது. ‘பைட்டோபிளாங்க்டான்’ என்ற நுண் பாசிகள் கொண்ட மிதக்கும் தாவரம்.
 
‘பைட்டோபிளாங்க்டான்’
கடலில் மிக அதிக அளவில் காணப்படும் மிதக்கும் தாவரம் இதுதான். இந்த பைட்டோ பிளாங்க்டானுக்கும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கும் ஏகப்பட்ட நேரடித் தொடர்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுப்பது என்பது சாதாரண காரியமில்லை. அப்படி கணக்கெடுப்பது கடற்கரை மணலை எண்ணுவது போன்றது. அதனாலேயே இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுக்க யாரும் முன் வரவில்லை. ஆனால் நாசாவோ, வானத்தில் கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களையே ஆராய்ந்து சொல்லி விடுகிறோம். கடலில் கண்ணுக்கு எதிரில் இருக்கும் இந்த தாவரத்தை கணக்கிடுவதா முடியாத காரியம் என்று பைட்டோபிளாங்க்டானை கணக்கில் எடுக்க களத்தில் இல்லையில்லை கடலில் குதித்து விட்டது. நாசாவிற்கு உதவியாக நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனும் கணக்கெடுப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளது.
 
இதுவரை வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் எதிலும் பைட்டோபிளாங்க்டானை அளவிடும் தொழில்நுட்பம் இல்லை நொடிக்கு நொடி பிரம்மாண்டமாக பெருகி வளரும் பைட்டோபிளாங்க்டானை கனக்கெடுப்பது கஷ்டம்தான். ஆனால் பெருகிய அதே வேகத்தில் பிற உயிரினங்களால் இந்த நுண் பாசி உணவாக உண்ணப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன.
 
பிரமாண்ட வளர்ச்சி
அப்படியிருந்தும் குத்து மதிப்பாக கடலுக்குள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 கோடி டன் கணக்கில் இந்த பைட்டோபிளாங்க்டான் இருக்கும் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். கடலில் அபரிமிதமாக அதிகரிக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மையை இந்த பைட்டோபிளாங்க்டான் பெற்றிருப்பதால் சுற்றுச்சூழல் காரணியில் முக்கியமானதாக திகழ்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ‘குளோபல் பயோஜியோ கெமிக்கல் சைக்கிள்’ என்று சொல்லப்படுகிற பிரபஞ்சத்தின் உயிரியல், புவியியல், வேதியியல் சுழற்சிகள் என்கிற கருத்து தற்போது ஐரோப்பிய விஞ்ஞானிகளிடம் அதிகமாக ஆராயப்பட்டு வருகிறது. எப்படியோ பைட்டோபிளாங்க்டானை அதிகமாக வளர்த்தால் நன்மை, நமது சுற்றுச்சூழலுக்குத்தான். இதை தாமதமாக புரிந்து கொண்டாலும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய நாசாவையும் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனையும் பாராட்டியே ஆக வேண்டும்.