நாத்திக கம்யூனிஸ்ட்களின் நன்றிக்குரிய ‘கடவுள்’… மு.க.ஸ்டாலின்!

Published:

kerala magazine cartoon - 2026

நாத்திக கம்யூனிஸ்ட் கட்சியின் நன்றிக்குரிய கடவுளாகத் திகழ்பவர் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்! இதைச் சொல்பவை கேரள பத்திரிகைகள்! அடுத்து, ரஷ்ய ஸ்டாலின் படத்தை தூக்கி எறிந்துவிட்டு, கம்யூனிஸ்ட்கள் தங்கள் தலைவராக மு.க.ஸ்டாலின் படத்தை மாட்டிக் கொள்ளலாம்.. இதுவும் கேரள பத்திரிகைகளின் கருத்துதான்!

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு 4 இடங்களைத் தூக்கிக் கொடுத்து அவர்களின் வெற்றிக்கு உதவியவர் திமுக., தலைவர் ஸ்டாலின்!

வெறும் 2 இடங்கள் கூடப் பெறுவதற்கு லாயக்கு இல்லாத இரு கம்யூனிஸ்ட்களுக்கும் ஆளுக்கு இரண்டாக நான்கு சீட்களைக் கொடுத்து, தங்களது வெற்றி வாய்ப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்ட புத்திசாலியும் திமுக., தலைவர் ஸ்டாலினே!

இவ்வாறு கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு உதவிய ஸ்டாலின் தான் கடவுள் அல்லது தலைவர் என்பது போன்ற கருத்துச் சித்திரங்களை கேரள பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன..

கம்யூனிஸ்ட் சித்தாந்தம் முற்றிலும் துடைத்து எறியப்படும் என்றும், பேசாமல் திமுகவில்  கம்யூனிஸ்ட் கட்சியை இணைத்து விடலாம் என்றும் சில பத்திரிகைகளில் கருத்துகள் வெளியிடப் பட்டு வருகின்றன.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காரணம், கேரளத்தில் எல்டிஎஃப் கூட்டணி முற்றிலும் துடைத்து எறியப் பட்டுவிட்டது தான்! அங்கே மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அடுத்து மேற்குவங்கம் தொடங்கி, திரிபுரா வரை அதன் பழைய இடத்தை முற்றிலும் தொலைத்துவிட்டு, தமிழகத்தில் மட்டும் தஞ்சம் புகுந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சிஸ்டுக்கும் தலா இரு இடங்களை திடீரென தாரை வார்த்து, இரண்டுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் திமுக., தலைவர் ஸ்டாலின்! கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இருந்து இப்போது திடீரென ஒட்டிக் கொண்ட திருமாவளவன் மற்றும் இரு கம்யூனிஸ்ட்களுக்கும் திமுக., தலைவராக இருந்த கருணாநிதியாக இருந்திருந்தால், நிலையை நன்கு கணித்து, தலா ஒரு சீட்டு மட்டும் கொடுத்து, பாரிவேந்தர், கொமுக. ஈஸ்வரன் ஆகியோருக்கு இதயத்தில் இடம் மட்டும் கொடுத்திருப்பார்.

அதன் மூலம், கடந்த தேர்தலில் அதிமுக.,வுக்கு வாக்கு, இந்த தேர்தலில் திமுக.,வுக்கு வாக்கு என்று மாறி மாறி வாக்களிக்கும் தமிழக வாக்காளர் மனநிலையை நாடி பிடித்துப் பார்த்து, 30 இடங்களுக்கு மேல் திமுக., போட்டியிட்டு, காங்கிரஸுக்கு வெறும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுத்திருப்பார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மு.க.ஸ்டாலின் நினைத்த  அளவுக்கு காங்கிரஸுக்கு எந்த செல்வாக்கும் தமிழகத்தில் கிடையாது என்பதை கருணாநிதி கணித்திருப்பார். அப்படி ஒரு வேளை கருணாநிதியின் பாணியில் ஸ்டாலின் கணக்கிட்டிருப்பாரே ஆனால், இந்நேரம் காங்கிரஸ் 40 இடங்களுக்குள் முடங்கிக் கிடந்திருக்கும், அல்லது அதை விடக் குறைவான இடங்களையே பெற்றிருக்கும்! நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக திமுக., இடம் பெற்றிருப்பதற்கும் வாய்ப்பு அமைந்திருக்கும்! இதனால்தான் ஸ்டாலினுக்கு முதிர்ச்சியும் அனுபவமும் போதாது என்கின்றனர் தமிழக அரசியல் நோக்கர்கள்.

இப்போது வெற்றி பெற்றவர்கள் பட்டியலில், 3 தொகுதிகளுடன் மார்க்சிஸ்டும், 2 தொகுதிகளுடன் இந்திய கம்யூனிஸ்டும் இடம் பெற்றிருப்பதற்கு திமுக., தலைவர் ஸ்டாலினே காரணம் என்பதால், கேரள பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் இவ்வாறு களை கட்டுகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img