
இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் இஸ்லாமியா்கள் மசூதிகளில் ஜும்மா தொழுகை நடைபெற்றபோது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தலைமை இமாம் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள புறநகர் பகுதியான பகிட்டா கோட் பகுதியில் உள்ள தக்வா மசூதியில் இன்று பகல் ஜூம்மா எனப்படும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சுமார் 1.20 மணியளவில் இந்த மசூதிக்குள் பலத்த சப்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற இஸ்லாமிய மத போதகரான ’இமாம்’ மவுலவி சமியுல்லா ரைஹான் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மற்றும் 16 பேர் படுகாயமடைந்தனா்.
இதேபோல், பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவுக்கு உட்பட்ட பஷ்துனாபாத் பகுதியில் உள்ள ரெஹ்மானியா மசூதியிலும் இன்று ஜும்மா தொழுகையின்போது குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 10 க்கும் மேற்பட்டவா்கள் படுகாயமடைந்தனா்.
இவ்விரு தாக்குதல்களிலும் படுகாயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



