
மும்பை விமான நிலையத்தில் நடந்த வழக்கமான பயணிகள் சோதனையின்போது பொறுமை இழந்து, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று சத்தம்போட்ட பயணியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பையில் உள்ள டிராவல் கம்பெனி ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வருபவர் அகுல் பட்டேல் (36).
சம்பவத்தன்று தொழில்நிமித்தமாக விமானத்தில் நார்வே செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளார். .
விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அகுல் பட்டேலும் சோதனையிடப்பட்டார். அப்போது அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
. திடீரென, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று அகுல் பட்டேல் சத்தம் போட்டதாக தெரிகிறது.
இதைக் கேட்டு அதிகாரிகள் மட்டுமின்றி வரிசையில் நின்று கொண்டிருந்த மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் பின்னர் அகுல் பட்டேலை கண்டித்ததுடன் அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.
இதற்கிடையே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேலதிகாரிகளுடன் தொடர்புக் கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அகுல் பட்டேல் விமானத்தில் ஏறுவதை தடுத்து நிறுத்தி அவருடைய டிக்கெட்டை ரத்து செய்ததுடன் சகார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அகுல் பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் (மேற்கு மண்டலம்) டாக்டர் மனோஜ் குமார் சர்மா கூறினார்.
அகுல் பட்டேல் அந்த வார்த்தையை சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நார்வேயில் இருந்திருப்பார். ஆனால் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அவருடைய பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



