பர்மிங்காமில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா.
இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. பர்மிங்காமில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. முஸ்தபிஜுர் பந்தில் ரோகித் அடித்த பந்தை தமிம் இக்பால் கோட்டை விட, 9 ரன்னில் தப்பினார். இதன் பின் சுதாரித்துக் கொண்ட ரோகித், 90 பந்துகளில் ரோகித் சதம் அடித்தார். இதன் மூலம், இத்தொடரில் நான்காவது சதத்தையும் எட்டிய அவர் 104 ரன்னுக்கு அவுட்டானார்.
ஒருநாள் அரங்கில் அவருக்கு இது 26வது சதமாகும். மேலும் இந்த தொடரில் தென் ஆப்ரிக்கா (122), பாகிஸ்தான் (140), இங்கிலாந்து (102) அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
ஒரு உலககோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்களில் இலங்கையின் சங்ககரா (4 சதம், 2015) சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா. இது தவிர , உலக கோப்பை தொடரில், 7 போட்டிகளில் 500 ரன்களையும் கடந்தார். இதையடுத்து ஒரு உலக கோப்பை தொடரில் சச்சினுக்கு அடுத்து 500 ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஆனார்.



