மதமாற்றத்தை கண்டித்து மதுரை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை, பறவை, சத்தியமூர்த்தி நகரில் சிலர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி அங்குள்ள கிறிஸ்தவ பிரச்சார மதக்கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது, அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் செய்து மதக் கூடத்தை மூடுவதாக உறுதி கூறினர். அப்போது பொதுமக்களின் போராட்டத்தால் மதப் பிரசாரம் அங்கு நடைபெறாது என்றும் கூடம் மூடப் படுவதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதால் போராட்டத்தை மக்கள் கைவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த மதக்கூடத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி ஹிந்துக்கள், அங்கே அதிகாரிகள் உறுதிமொழியையும் மீறி மதமாற்ற முயற்சி நடப்பதாக புகார் கூறி, அப்பகுதியில் திரண்டனர்.
ஆனால், நீதிமன்ற அனுமதி பெற்று மதக் கூடத்தில் பிறந்தநாள் விழா மட்டுமே நடந்ததாக போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் கூறினர். இதை அடுத்து ஹிந்துக்கள் கலைந்து சென்றனர்.
ஆயினும், பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.