சுபாஷிதம்: வீழ்ச்சிக்கான காரணங்கள்!

ஆன்மிகக் கட்டுரைகள் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

18. வீழ்ச்சிக்கு காரணங்கள்!

செய்யுள்:

ஆலஸ்யோபஹதா வித்யா பரஹஸ்த கதம் தனம் !
அல்பபீஜ ஹதம் க்ஷேத்ரம் ஹதம் ஸைன்யமநாயகம் !!

— சாணக்கிய நீதி -5.7

பொருள்: சோம்பலால் கல்வி அழிகிறது. பிறர் கையில் சேர்வதால் செல்வம் அழிகிறது. விதை சரியின்றி பயிர் அழிகிறது. சரியான தலைவன் இல்லாததால் படை அழிகிறது.

விளக்கம்: கல்வி, செல்வம், பயிர், படை இவற்றைப் பாதுகாப்பதற்கு தேவையான முயற்சி செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கும் சுலோகம் இது.

‘ஆலஸஸ்ய குதோ வித்யா’ – சோம்பேறிக்கு கல்வியறிவு பிடிபடாது. அதனால் சோம்பலை விட்டுவிட்டு கல்வி அறிவைப் பெற வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வி தேவை. பிறரிடம் சென்று விடாமல் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். நல்ல விதையால் நல்ல பயிர் விளையும். விளைநிலத்தை குறை கூறக்கூடாது. போலி விதைகள் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாகின்றன.

அதேபோல் எந்த நிறுவனமானாலும், படையானாலும் சரியான தலைவன் இருந்தால்தான் வெற்றி கிட்டும். தலைவன் இல்லாத படை தைரியத்தை இழந்து தோல்வி அடைந்த வரலாறுகள் உள்ளன.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இறுதி அரசர் ராமராயரை எதிரிகள் மிகக் கொடூரமாக தலையை வெட்டி சூலத்தில் குத்தி காட்சிக்கு வைத்த பயங்கரமான சம்பவத்தை பார்த்த ராயரின் படை சிதறி ஓடியது. போர்க்களத்தை விட்டோடி எதிரிகளின் வெற்றிக்கு காரணமானது.

இப்ரஹிம் லோடி லட்சக்கணக்கான படை வீரர்கள் இருந்தும் முதலாம் பானிபட் யுத்தத்தில் பத்தாயிரம் படை வீரர்கள் கூட இல்லாத பாபரின் கைகளில் தோற்றான். வரலாற்றில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் சிறந்த தலைவனின் அவசியத்தைக் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.