சுபாஷிதம்: அழுமூஞ்சிகள்!

ஆன்மிகக் கட்டுரைகள் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

25. அழுமூஞ்சிகள்!

செய்யுள்:

ஈர்ஷ்யீ க்ருணீ த்வசந்துஷ்ட: க்ரோதனோ நித்ய சங்கித: |
பரபோக்யோபஜீவீ ச ஷடேதே நித்ய து:கிதா: ||

–மகாபாரதம்

பொருள்:

எப்போதும் துயரத்தில் இருக்கும் அழுமூஞ்சிகள் ஆறு பேர் என்று இந்த சுபாஷிதம் கணக்கிடுகிறது. பொறாமை கொண்டவர், அதிகமாக இரக்கப்படுபவர் அல்லது அதிகமாக வெறுப்பவர், திருப்தியற்றவர், முன்கோபி, சந்தேகப் பிராணி,  பிறரை அண்டிப் பிழைப்பவர்.

விளக்கம்:

திருதிராஷ்டிரனுக்கு விதுரர் கூறிய பல நல்ல அறிவுரைகளில் இந்த சுலோகமும் ஒன்று. எப்போதும் சோகத்தில் இருப்பவர்களின் பட்டியல் இங்கே கொடுக்கிறார்.

தீய குணங்களை விட்டு விலகினால்தான் மனித வாழ்க்கையில் சுகம் கிடைக்கும் என்று கூறுவதற்கு இங்கு அத்தகைய தீய குணங்களை ஓரிடத்தில் சேர்த்துக் காட்டுகிறார் மகரிஷி. இந்த துர்குணங்கள் அனைத்தும் இயல்பாகவே ஏற்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை விட்டு விலகினால்தான் துயரம் நம்மை விட்டு நீங்கும். உன் துன்பத்திற்கு பிறர் யாரும் பொறுப்பல்ல என்ற உட்பொருள் இந்த செய்யுளில் உள்ளது. உன்னை நீயே உய்வித்துக்கொள் என்ற அறிவுரை கூட இதில் உள்ளது.

துன்பத்தை விலக்கிக் கொள்ளும் உபாயம் நம் கையில்தான் உள்ளது என்பதை அறியலாம். நான் நினைத்தால் துன்பத்திலிருந்து நீங்கி சுகப்பட முடியும் என்பதற்கு இது உதாரணம்.

மானுடனின் இச்சா சக்தியின் முன்னால் ப்ரக்ருதி கூட தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதே என்றார் சுவாமி விவேகானந்தர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.