உங்கள் Sub-ordinate களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.
இரண்டு ரகம் இருப்பார்கள். உங்களைத் தொந்தரவு செய்யாமல் தானே முடிவுகளை எடுக்கிறவர்கள் ஒரு ரகம். அடிக்கடி உங்களைக் கலந்தாலோசிக்கிறவர்கள் இன்னொரு ரகம். உங்களைத் தொல்லை பண்ணாமல் தானே Manage செய்கிறவர்களைத்தான் நீங்கள் அதிகம் நேசிக்க வேண்டும்; ஆனால், உங்களைச் சார்ந்து இருக்கிற ஆசாமிகளைத்தான் நீங்கள் அதிகம் நேசிப்பீர்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. தன்னிச்சையாக இருக்கிறவனிடம் சந்தேகமில்லாமல் கொஞ்சம் அகங்காரம் இருக்கும். அந்த அகங்காரம்தான் அவனை உங்களிடமிருந்தோ அல்லது உங்களை அவனிடமிருந்தோ தொலைவில் வைக்கிறது.
நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் பிணைப்பும் இத்தகையதே.
அகங்காரம் முற்றிலுமாய் நீங்குகிற போது நமக்குக் கடவுள் கடாட்சம் முழுசாகக் கிடைக்கிறது. இதைத்தான் சரணாகதி என்பார்கள். அகங்கார நீக்கம் இருவகையாய் நடக்கிறது. நாம் வெறும் கருவிதான் என்பதை அறிவார்த்தமாய் உணர்ந்து இருப்பது ஒரு ரகம். நீதான் பார்த்துக்கணும் என்று பாதங்களில் வீழ்வது ஒரு ரகம்.
முற்றிய அகங்காரம் முற்றிலுமாய் நீங்குவதில்லை.
எப்படி அஸ்வத்தாமாவை அழிக்க முடியவில்லையோ, எப்படி அங்குலிமாலாவை அழிக்க முடியவில்லையோ அது போலவேதான் அகங்காரமும். லேசாய் திசை திருப்பி விட்டால் போதும்.
அகங்காரத்தைக் கூட அழிக்க முடியாது. ஆனால் அதை ‘என்னைக் காட்டிலும் ஈஸ்வரப் பிரேமையில் உசந்தவன் கிடையாது’ எனும் இடத்துக்கு திசை திருப்பி விடலாம். அப்போதும் சரணாகதி உண்டாகும். கடவுளின் அன்புக்குப் பாத்திரம் ஆகலாம்.
நான் மேலே சொன்னது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னதன் அடிப்படையிலானது. இதைச் சொல்லிவிட்டு நண்பரிடம் ’என்ன புரிந்தது, சொல்லு?’ என்றேன்.
‘எவ்ளோ டேலண்ட் இருந்தாலும் பாஸுக்கு ஜால்ரா அடிச்சாத்தான் பிரமோஷன்’ என்கிறான்.
By K G Jawarlal



