
ஸ்வாமி சரணம், ஐயப்ப சரணம், ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க, சபரிமலை நடை நவ.16 சனிக்கிழமை நேற்று மாலை திறக்கப்பட்டது. நவ.17 கார்த்திகை முதல் தேதி இன்று முதல் மண்டல பூஜைக்கான காலம் தொடங்குகிறது.
இன்று முதல் வரும் 41 நாட்கள் சபரிமலையில் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். இதை முன்னிட்டு பக்தர்கள் மண்டல பூஜை நேரத்தில் ஸ்வாமி ஐயப்பனை தரிசிக்க பெருமளவில் வருவர்.

சபரிமலையில் நடைபெறும் 41 நாள் மண்டல பூஜைக்காக சனிக்கிழமை நேற்று 5 மணி அளவில் சபரிமலை மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரண கோஷம் முழங்க நடையைத் திறந்து வைத்து, விளக்கு ஏற்றினார்.
தொடர்ந்து குண்டத்தில் அக்னி மூட்டி மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

ஞாயிறு இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றி மண்டல கால பூஜையை முறைப்படி தொடங்கி வைத்தார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை தொடங்க, கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.