
கோடி சூரியப் பிரகாசம் பொங்கும் திருக்கயிலையில் ஒரு தினம். மாலை நேரத்தில், நவரத்தின மணி பீடத்தில் சிவபெருமான் சர்வலோகநாயகியான உமையம்மையுடன் எழுந்தருளியிருந்தார். த்ரிலோக சஞ்சாரியாகிய நாரத மாமுனி அச்சமையம் அவ்விடம் மகர யாழ் மீட்டியவண்ணம் வந்து, அம்மையப்பரைத் துதித்து நின்றார். கருணைக்கடலான ஈசன் நாரதரைத் தன் கருணைபொங்கும் கனிவான விழிகளால் நோக்கி அருள்பாலித்தார். அருள்தேவியாகிய பார்வதியும் நாரதரை ஆசீர்வதித்து, வந்த விடயம் வினவினாள். அதற்கு நாரதர் அம்மையையும் அப்பரையும் வணங்கி ” சம்போ மகாதேவா ! பூலோகத்தில் பக்தர்களிடையே தூய அன்பும், பக்தியும், மந்திர ஜபங்களும் குறைந்து வருகிறது. வன்சொல் கூறுவோர் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனர். ஆதலால் பூவுலகில் பக்தியை வளரச் செய்து, பூலோக வாசிகளை காத்தருள வேண்டும் ” என்று விண்ணப்பித்தார்.
நாரதர் நவின்றது கேட்டு நான்மறை நாயகனாகிய பரமேசுவரன் ” நாரதா ! அச்சத்தை விடவும், இதற்குத் தகுந்த மார்க்கத்தை யாம் சொல்கிறோம். நந்திதேவர் மண்ணுலகில் பிறந்து சைவம் தழைக்க வழி செய்வார். அதற்கான சகல அதிகாரங்களையும் அவருக்கு அளிப்போம். பூவுலகில் தோன்றப் போகும் நந்திதேவர் ” அதிகாரநந்தி ” எனப் போற்றப்படுவார் ” என்றார். சிவனார் கூறியது கேட்டு நாரதரும் நந்திதேவரும் அகமகிழ்ந்தனர். ஈசன் மேலும் நந்திதேவரின் சிறப்பை கூறலானார்.
” சிவகணத்தவர்களுக்கு தலைவராக விளங்கும் நந்திதேவர், ஒப்பற்ற பெருமை உடையவர். அல்லும் பகலும் யாம் அவர் மீது எழுந்தருளுவதால் அவர் எமக்கும் ஒப்பானவரும் கூட. தர்மமே உருவானவர். ” சிவாயநம ” எனும் பஞ்சாக்ஷர வடிவானவர். ரிஷபம் எனும் சொல்லுக்கே எந்தவித குற்றமுமில்லாத தர்மமே வடிவானவர் என்று பொருள். அதன் பொருட்டே நந்திதேவரும் தூய்மையான வெண்மை நிறத்துடன் விளங்குகிறார். இவர் எம்முடைய துவாரபாலகருமாவார். எம்மை தரிசிக்க வருபவர் முதலில் நந்திதேவரிடம் அனுமதி பெற்றே உள்செல்ல முடியும். திருக்கயிலையிம் யாம் எம்பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் பொழுது, எம் சேயாகி எம்முன் காவல் புரியும் நந்திதேவரின் மூச்சுக் காற்றுப்பட்டே யாம் வீற்றிருக்கும் ஊஞ்சல் மிக அழகாக ஆடுகிறது. இதன் பொருட்டே அனைத்துச் சிவாலயங்களிலும் எம் சன்னதிக்கு முன்னர் நந்திதேவர் வீற்றிருக்கிறார் “. இவ்வாறு ஈசனாரால் பலவறு புகழ்ந்து கூறப்பட்ட நந்திதேவர், பூவுலகில் அவதரிக்கும் நேரமும் வந்தது.
பூலோகத்தில் சிலாதர் எனும் முனிவர் தம் மனைவியான சித்திரவதியுடன் சிவசேவை செய்து வாழ்ந்து வந்தார். இத்தம்பதியர் புத்திர பாக்கியம் இன்றி பெரிதும் மனம் வாடினர். அதன் பொருட்டு சிலாதர் சிவபெருமானை நோக்கி ஆயிரம் தேவ ஆண்டுகள், அன்ன ஆகாரமின்றிக் கடும் தவம் புரிந்தார். இத்தவத்தின் பயனால் திருவுள்ளம் கனிந்த திருசடைத் தம்பிரான் ஜெகஜோதியாக அவர் முன்னால் எழுந்தருளினார். சர்வேசுவரர் தம் முன் தோன்றியதைக் கண்ட சிலாதர் அவரை வலம் வந்து, வணங்கி, சிவனாரின் பாதகமலங்களை அனேக முறை வணங்கி ” மஹாதேவா ! சுயம்புவே ! உம்மைத் தஞ்சமடைந்து தவம் புரிந்த எளியவன் முன் தோன்றினீரே ! என்னே உமது கருணை ! தேவதேவா, எமக்கு உம்மை ஒத்த, உமக்கு நிகரான ஒரு மகவைத் தந்தருள வேண்டும் ! ” என்று பிரார்த்தித்தார். சிலாதர் பிரார்த்தனைக்கு செஞ்சடை வண்னர் சந்தோஷித்து, ” சிலாதரா ! நீ விரும்பிய வண்ணம் வரம் அளித்தோம் ” என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். சிலாதர் மகிழ்ச்சியுடன் தபோவனம் திரும்பினார்.
ஒரு முறை, சிலாதர் ஓர் பெரிய வேள்வியொன்றை நடத்துவதற்காக வேண்டி பூமியை உழுதார், அப்பொழுது தங்கப்பேழை ஒன்று தட்டுப்பட்டது, அதில் தங்க விக்கிரகம் போன்ற ஒரு குழந்தையைக் கண்டார். அத்தருணத்தில் பிரம்மரூபினரான ஈசன், அசரீரி வாயிலாக, சிலாதரருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ” சிலாதரா ! யாம் வரம் அளித்தாற்போல் உனக்கு இக்குழந்தையை வளர்க்கும் படியான பாக்கியத்தை அளித்தோம் ! இக்குழந்தைக்கு ” நந்தி ” என்று நாமகரணம் சூட்டுவாயாக ! ” என்று கூறியருளினார்.
ஈசுவரன் கொடுத்தருளிய குழந்தையை சிலாதர் தம் பாரியாளிடம் கொடுத்து அதைப் பெருமிதத்துடனும், பேரின்பத்துடனும் வளர்த்து வந்தார். நந்திதேவருக்கு தந்தையே குருஸ்தானத்தில் இருந்து வேதங்களையும், சாஸ்திரங்களையும், வேதாந்தங்களையும் கற்றுக் கொடுத்தார். ஏழு வயதிற்குள் நந்தி சகல வித்தைகளையும் கற்று ஞான பண்டிதராக விளங்கினார்.
ஒருமுறை தேவர்கள், முனிவர் வடிவில் சிலாதர் ஆசிரமத்திற்கு வந்தனர். சிலாதர் தம் பாரியாளுடனும், தம் மகவான நந்திதேவருடனும் தேவர்களை வரேற்று உபசரித்தார், நிலம் கிடந்து சேவித்தார். தேவர்கள், முனிகுமாரனை ஆரத்தழுவி, ” உம் புதல்வன், குருமார்களுக்குச் செய்யும் சேவையால் உயர்ந்த பதவியை அடைவான் ” என வாழ்த்தினர். தேவர்களின் வாழ்த்துக்கள் சிலாதருக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தது. எனவே அவர் தம் மனைவி மற்றும் மகவை உள்ளே அனுப்பிப் பின் தனியே தேவர்களிடம் ” அருந்தவசியர்களே ! த்ரிகால ஞானிகளே ! எம் புத்திரனை ஆயுஷ்மான்பவ என நீவிர் ஏன் வாழ்த்தவில்லை ? ” எனக் கேட்டார். அதற்குத் தேவர்கள் ” சிலாதரா ! உன் மகவுக்கு ஆயுட்காலம் இன்னும் ஓராண்டுகள் தான், எனவே தான் நாங்கள் அவனை ஆயுஷ்மான்பவ என வாழ்த்தவில்லை ” என்று கூறிப் பின் விடைபெற்றுச் சென்றனர்.
பற்றற்ற பரமஞானியாகிய சிலாதரையும் புத்திரபாசம் பற்றிக் கொண்டது. மகனின் ஆயுட்காலத்தை எண்ணி அவர் அல்லும் பகலும் வருந்தினார். நாம் பிறைசூடிய பெருமானிடம் அவருக்கு நிகரான ஒரு மகவைத்தானே கேட்டோம், அவரும் அவ்வாறே வரம் தந்ததாகக் கூறினாரே ! ஆனால் இப்பொழுது தேவர்கள் கூற்றின் படி என் மகன் இன்னும் ஒரு வருடகாலம் தானே உயிரோடிருப்பான் ! எம் தவத்தில் ஏதேனும் குறை வைத்தோமோ ! எம் சிவசேவையில் ஏதேனும் குறை வைத்தோமோ ! என்று பலவாறு அழுது புலம்பினார். தந்தையின் நிலை கண்ட நந்திதேவர் அதற்கான காரணத்தைத் தந்தையிடமே கேட்டறிந்தார்.
தந்தை மனம் வருந்துவதற்கான காரணத்தையறிந்த நந்திதேவர் ” தந்தையே ! சகல சாஸ்திரங்களிலும் வல்லவரான தாங்கள் என்னை நினைத்து இவ்வாறு வருந்தலாமா ? மிருத்யுஞ்சயரான ஸ்ரீ பரமேசுவரனைத் தியானித்து மிருத்யுவை வென்று வருவேன் ” என்று தந்தைக்கு ஆறுதல் கூறி தாம் தவம் செய்யப் புறப்பட்டார். நந்திதேவர் புவனை நதிதீரத்து மரநிழலில் அமர்ந்து, பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்து, மரனத்தை வெல்லவேண்டும் என்ற திட சிந்தனையுடன் தவத்தைத் தொடங்கினார். நந்திதேவர் ருத்திர நாமத்தை ஒரு கோடி முறை ஜபம் செய்தார். நந்திதேவரின் ஜபம் சர்வேசுவரனின் மனதைக் குளிரச் செய்தது. எம்பெருமான் நந்திதேவர் முன்னால் தோன்றி ” நந்தீ ” என்று குருணையோடு தம் திருவாய் மலர்ந்தருளினார்.
தேவாமிர்தம் செவிகளில் பாய்ந்தது போன்ற பேரின்பம் பூண்ட நந்திதேவர், தமது எதிரில் கோடி சூரிய பிரகாசத்துடன் எழுந்தருளியிருக்கும் சங்கரரைக் கண்டு சிரம் மீது கைகள் கூப்பித் தொழுதார், வலம் வந்து வணங்கினார், நிலம் கிடந்து தண்டம் சமர்ப்பித்தார். தோடுடைய செவியன் நந்திதேவரை நோக்கி ” நந்தீ ! உனக்கு என்ன வரம் வேண்டும் ” எனக் கேட்டார்.
சம்போ ! சிவசங்கரா ! கயிலாசபதையே ! மிருத்யுஞ்ஜய மூர்த்தியே ! உமது பொன்மென் சீரடிகளுக்கு இப்பாலகனின் சிரசா வந்தனங்கள். எனக்குத் தேவரீருடைய ருத்திர மந்திரத்தை மேலும் ஒரு கோடி முறை ஜபம் செய்வதற்கான பேரருளைத் தரவேண்டும் ” என்று பிரார்த்தித்தார். எம்பெருமானும் நந்திதேவருக்கு அவ்வாறே வரமளித்து மறைந்தார். நந்திதேவர் தாம் பெற்ற வரத்தின் படியே மேலும் ஒருகோடி முறை ருத்திர ஜபம் செய்து முடித்து ஈசனை வணங்கும் சமயம், மானும் மழுவும் ஏந்திய திருக்கரங்களுடன் பரம்பொருள் நந்திதேவர் முன் தோன்றி ” குழந்தாய் ! உனக்கு என்ன வரம் வேண்டும் ” எனக் கேட்டார். நந்திதேவரும் ஈசனின் திருத்தாழ் வணங்கி, தந்தையிடம் மகன் கொஞ்சும் தோரனையுடன் கூட மகேசனிடம் ” அய்யனே ! அப்பனே ! எனக்கு மேலும் ஒரு கோடி முறை ருத்திர ஜபம் செய்வதற்கான பேரருளைத் தரவேண்டும் ” என்று பிரார்த்தித்தார். எம்பெருமானும் நந்திதேவருக்கு அவ்வாறே வரமளித்து மறைந்தார்.
இவ்வாறாக நந்திதேவர் ஏழுமுறை சிவனருளைப் பெற்று ஏழு கோடி ருத்திர ஜபத்தை செய்து முடித்தார். எட்டாவது முறையும் ருத்திர ஜபம் செய்ய ஈசனிடம் பிரார்த்தித்தார். அதற்கு ஈசன் முகம் மலர ” நந்தீ ! ஏழு கோடி ருத்திர ஜபத்தின் மகிமையால் நீ பெறுவதற்கரிய பேறுகளைப் பெற்றவனானாய் ! காலனை வென்றாய் ! எட்டாவது முறையும் எமக்கு உகந்த ருத்திர ஜபத்தால் நீ பெற வேண்டிய வரம் ஏதுமில்லை. மேலும் உனக்கு வேறு ஏதாவது வரம் வேண்டுமென்றால் கேட்பாயாக ” என்றார்.
நந்திதேவர் கண்களில் நீர்மல்க சிவனை ஆராதித்து. ” சுவாமி ! எமக்கு இந்திரத்துவம், பிரம்மத்துவம் போன்ற பதவிகள் ஏதும் வேண்டாம். எமக்கு ஜனன மரன துக்கத்தை அனுபவியாதிருக்கத் தக்க மேன்மையான பதவி வேண்டும். எமது தந்தையாரின் எண்ணப்படி அவரது பிதுர் வர்க்கத்திற்கு அழியாத பதவியை அருள வேண்டும் ” என்று பிரார்த்தித்தார். ஈசனும் மனம் மகிழ்ந்து ” நந்தீ ! நீ உனது அரிய தவத்தாலும், கூரிய புத்தியாலும் காலனை வென்றாய். உன்னைத் துதிப்போர்க்கு மரணபயம் அண்டாது. பிறவாப் பெருவாழ்வு பெறுவர். நீ எனக்கு இஷ்டனாகவும், கணங்களுக்கு என்றும் தலைவனாகவும் விளங்குவதோடு எமது அணுக்கத் தொண்டனாகவும் இருப்பாயக ! அத்தோடு பூவுலகில் ” அதிகார நந்தி ” என்ற திருநாமத்துடன் இருந்து பக்தியை வளர்ப்பாயாக ! ” என்று கூறிய நந்திதேவருக்கு வெண்பட்டு வஸ்திரமும் ஆயிரம் தாமரைகளாலான தங்கமணி மாலையும் அணிவித்து மகிழ்ந்தார்.
இந்திராதி தேவர்களும், முனிவர்களும், சிவயோகியர்களும் போற்றித் துதி செய்ய, இன்னிசை மேளதாள வாத்தியங்கள் முழங்க நந்திதேவரை, சிவகணங்களுக்குத் தலைவனாக்கி மகுடாபிஷேகம் சூட்டினார் சிவபெருமான். மேலும் ஈசன் நந்திதேவரிடம் ” நந்தீ ! நீ எமது குமாரர்களில் ஒருவனாகவும் விளங்குவாயாக ! அத்துடன் கயிலை மலைக்குக் காவலனாக, அதிகார நந்தியாக சிவக்கோவில் திருவாயிலில் இருப்பாயாக ! எம்மை தரிசிக்க வருவோர் எவராக இருந்தாலும் உனது உத்தரவு பெற்றுத்தான் எமது சன்னதிக்கு வரவேண்டும் ! உனது தந்தைக்கும் சிவகணத்தவர்களில் ஒருவராக இருக்கும் படியான பதவியை அளிக்கிறேன் ! அதோடு அவரது பித்ருக்கள் எமது லோகத்தில் வாழும்படியான யோகத்தை அருளுகிறேன் ! கலியுகம் முடியும் வரையில் நீ பூவுலகில் அதிகார நந்தியாக இருந்து பக்தியை வளர்ப்பாயாக ! சைவ சமயத்தைக் காப்பாற்றி அதன் மூலம் பூவுலகவாசிகளையும் காத்தருளுவாயாக ” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
நந்திதேவர் பேரானந்தம் பொங்க சிவபெருமானைப் பலமுறை வணங்கினார். ஈசன் நந்திதேவருக்கு ” சுயஞ்சை ” எனும் பெண்ணைத் திருமணம் செய்தருளினார். எம்பெருமானின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து நந்திதேவர் உடைவாளும் பொற்பிரம்பும் ஏந்தி சிவக்கோவில் திருவாயிலில் காவல் புரியும் துவாரபாலகனாக ஏழுந்தருளினார். இப்பேற்பட்ட நந்திதேவர் மூன்று திருமேனி கோலம் பூண்டு, சிவபெருமானுக்கு துவாரபாலகராக விளங்குகிறார்.
அதிகாரநந்தி : – மேற்கூறிய புராணமே அதிகாரநந்தி தேவரின் புகழாகும்.
திருமால் நந்தி : – சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய எழுந்தருளிய போது, திருமால் ஈசனாருக்குப் போரில் உறுதுணையாக இருப்பதற்கு ரிஷப தேவராக திருமேனி கொண்டார். அதனால்திருமால் நந்தி எனத் திருநாமம் பூண்டார்.
தரும நந்தி : – பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளும் ஈசனிடம் ஒடுங்கி அடங்கியபோது, தருமதேவர் இறைவனுக்கு வாகனமாக இருந்தார். இவரே தரும நந்தி எனத் திருநாமம் பூண்டார்.
இப்பேற்பட்ட ஒப்பற்ற மகிமை கொண்ட நந்தி தேவரையும் சர்வலோக ரக்ஷகரான ஸ்ரீ பார்வதி சமேத பரமேசுவரனையும் போற்றிப் பணிந்து, அவர் மகிமை பாடி, அவர் அவருள் பெறுவோமாக.
” நமசிவாயவே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி இச்சையும்
நமசிவாயவே நாநவின்று ஏத்துமே நமசிவாயவே நன்னெறி காட்டுமே ! “
- ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி

