ஒரு கப்பல் நிறைய அரிசி மூட்டைகள் அடுக்கி இருக்கின்றன. அதை சாப்பிட வருகிறது ஒரு காகம். தன்னை மறந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் சமயத்தில் கப்பல் புறப்பட்டு நடுக்கடலுக்கு சென்று விடுகிறது.
இதை உணர்ந்த காகம் கரைக்குத் திரும்பி விடலாம் என்று எண்ணி கிழக்கு திக்காகப் பறக்கிறது. நெடுந்தூரம் பறந்தும் அதன் கண்ணுக்கு கரை தென்படவில்லை, இனிமேல் பறக்க சக்தி இல்லை என்று கப்பலுக்கு திரும்புகிறது, காகம் சற்றைக்கெல்லாம் திரும்பவும் பறக்கிறது – மேற்கு திக்கு நோக்கி மீண்டும் திரும்புகிறது. இப்படியே நாலா திக்கிலும் பறந்து பறந்து ஓய்ந்து சோர்ந்து கப்பலுக்கே திரும்பி விடுகிறது.
நாம் அந்த காகம் மாதிரி தான். பரமாத்மா அந்த கப்பல் மாதிரி ‘நீ எங்க தான் போவே…எங்க போனாலும் இங்க தானே வரணும்…’ என்று நாம் போவதைப் பார்த்து கொண்டு வாய் மூடி மந்தஹாச புன்சிரிப்புடன் இருக்கிறான்!
ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, ‘விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்’ என்று சொல்லப்படவில்லை. ‘ராமனிருக்கும் இடம் வந்தான்’ என்றுதான் சொல்லி இருக்கிறது.
இதற்கு என்ன அர்த்தம்…? வர வேண்டிய இடத்திற்கு அவன் வந்து சேர்ந்து விட்டான் என்று அர்த்தம்.
நாமும் அப்படித்தான் பகவானை விட்டு சென்றவர்களாக இருக்கிறோம். அவனிடத்தில் சேர வழி அனைத்தையும் அவனே தான் காட்டிக் கொடுக்கிறான்… இதையே ‘அகலில் அகலும் அணுகில் அணுகும்’ என்கிறார் நம்மாழ்வார்….
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம் லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்…
எந்தத் துன்பத்தையும் விலக்குபவரும் எல்லாவித சம்பத்துக்களையும் தருகிறவரும் உலகின் பேரழகனான ஸ்ரீராமரை நித்தமும் வணங்குகிறேன்,
ஆர்த்தானாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதிநாஸனம், த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்
துயருற்றவர்களின் வேதனைகளையும்
மிரண்டவர்களின் பயத்தையும் நாசம் செய்பவரும் சத்ருக்களுக்கு யமதண்டமாயிருப்பவருமான ஸ்ரீராமரை வணங்குகிறேன்.
இன்றைக்கு உலகம் கொரானா என்கிற கொடிய வைரஸால் அல்லலுற்றுக் கொண்டு இருக்கிறது. உலக நன்மைக்காகவும் உங்கள் நன்மைக்காகவும் மேலே உள்ள இரண்டு ஸ்லோகத்தை முடிந்தவரை சொல்லவும். இது ஹனுமனால் துதிக்கப்பட்டது. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ராமநாமம் சொல்பவரை ஆசிர்வதிக்க வந்து விடுகிறார் அஞ்சனை மைந்தன்.
- கே.ஜி.ராமலிங்கம்