“வால்மீகி கிரி சம்பூதா ராம சாகர காமினீ
ஸ்ரீமத் ராமாயணீ கங்கா புனாதி புவனத்ரயம்”
கங்கா நதி மிகவும் புனிதமானது. அதில் எங்கு ஸ்நானம் செய்தாலும் பாவங்கள் தொலைந்து போகும். காசி, பிரயாகை, ஹரித்வார் போன்ற க்ஷேத்திரங்களில் உள்ள விசேஷமான ஸ்நான கட்டங்களான குளிக்கும் துறைகளில் குளிக்கும் போது சிறப்பான பலன் கிடைக்கிறது. அந்த விசேஷ படித்துறைகளில் கங்கையின் மகத்துவம் அதிகமாக விளங்குகிறது. ஸ்ரீராமாயண கங்கை கூட அப்படித்தான். ராம கதையில் அனேக சிறப்பிடங்கள் உள்ளன. ஸ்ரீராம ஜனனம், சீதா ராம கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் போன்றவை. அவற்றுள் விபீஷண சரணாகதியும் ஒரு சிறப்பான கதையம்சம். கேட்டாலும் படித்தாலும் சிறப்பான புண்ணியம் தரக் கூடியது.
விபீஷணன் எப்படிப்பட்டவன்?
ஸ்ரீராமாயணத்தில் விபீஷணனைப் பற்றிய அறிமுகம் முதன்முதலில் ஆரண்ய காண்டத்தில் வருகிறது. தண்டகாரண்யத்தில் ராமர் வனவாசம் செய்கையில் சூர்ப்பனகை ராமரிடம் தன்னைப்பற்றிக் கூறிகொள்ளும் போது தன் சகோதரர்களைப் பற்றிக் கூறுகிறாள்.
“விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷச சேஷ்டித:” …………… -(ஆரண்ய 17-25)
சூர்பனகையின் கூற்றுப்படி விபீஷணன் தர்மாத்மா. ராக்ஷச சேஷ்டைகள் அற்றவன். விபீஷணன் ராவண கும்பகர்ணர்களின் சகோதரன். அசுர குலத்தில் உதித்தவன். லங்கையில் வாழ்பவன். ஆனாலும் ராக்ஷச சுபாவம் இல்லாதவன். சத்துவ குணம் நிரம்பியவன். தர்ம மார்கத்தில் செல்வபவன்.
விபீஷணனைப் பற்றிய விவரம் இரண்டாவதாக ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் வருகிறது. சீதா தேவி ஹனுமானிடம்,
“விபீஷணேன ச ப்ராதா மம நித்யாதனம் ப்ரதி அனுநீத:
ப்ரயத்னேன ந ச தத்குருதே மதம்”…………….. -(சுந்தர 37-9)
சீதை கூறுகிறாள், “விபீஷணன் ராவணனின் தம்பி. என்னை ராமரிடம் திரும்ப ஒப்படைக்கும்படி ராவணனுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி முயற்சி செய்கிறான். ஆனால் ராவணன் அவன் பேச்சைச் கேட்பதில்லை” என்று விபீஷணன் நல்லவன் என்பதைத் தெரிவிக்கிறாள்.
விபீஷணன் நல்லவன் என்பதைக் காட்டும் மற்றொரு சந்தர்பம் சுந்தர காண்டத்திலேயே மீண்டும் வருகிறது. ராம தூதரான ஹனுமானைக் கொல்லும்படி ராவணன் கூறும்போது விபீஷணன் அவனைத் தடுக்கையில் அவனுடைய நல்ல குணம் வெளிப்படுகிறது.
“க்ஷமஸ்ய! ரோஷம் த்யஜ ராக்ஷஸேந்த்ர ப்ரசீத மே வாக்யமிதம் ஸ்ருணுஷ்வ வதம் ந குர்வந்த்தி ப்ராவரஞ்யா தூதஸ்ய சந்த்தோ வசுதாதிபேந்த்ர”
“தூதாநவத்யா சமயேஷு ராஜா சர்வேஷு சர்வத்ர வதந்தி சந்த்த:”…… -(சுந்தர 52-5,9)
“ராஜா! மன்னியுங்கள்! கோபத்தை விடுங்கள். தயைசெய்து என் பேச்சைக் கேளுங்கள்! தூதன் கொல்லத் தக்கவன் அல்லன் என்பது ஆன்றோர் வாக்கு. அறிஞர்கள் எப்போதுமே தூதனைக் கொல்வது தகாது என்றே கூறியுள்ளார்கள்”.
இவ்வார்த்தைகள் விபீஷணனின் நற்குணத்தை எடுத்துக்காட்டுகின்றன.
விபீஷணனைப் பற்றிய மற்றொரு இடம் லங்காதகனம் கட்டத்தில் ஹனுமான் விபீஷணனின் மாளிகையை மட்டும் எரிக்காமல் விட்டு விடுவதைப் பற்றிய இடத்தில் காணப்படுகிறது.
“வர்ஜயித்வா மஹாதேஜா விபீஷண க்ருஹம் ப்ரதி”…………………–(சுந்தர 54-16)
இச்செய்தியும் விபீஷணன் நல்லவன் என்பதையே தெரிவிக்கிறது.
வால்மீகி மகரிஷி பல சந்தர்பங்களில் ராமாயணத்தில் விபீஷணனைப் பற்றி கூறும் அடைமொழிகள் எல்லாம் அவன் நல்லவன் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. “கார்ய வித்யாஸ்தித:, சத்ருஜித், வாக்ய விசாரத:, உத்தம, தேச கால ஹித வாக்யஞ்ஞ:, தேச காலார்த்த சம்வாதி, தர்ம நிஸ்சய:, பீம கர்மா, மஹாத்யுதி:, வீர:, த்ருஷ்ட லோக பராவர:, ப்ராதரமா, ஆப்தேவாதினம். மஹாத்மா, யசஸ்வீ, ராஜ ஹிதானு காங்க்ஷே, தர்மார்த்த காமேஷு நிவிஷ்ட புத்தி:, சுக்லமால்யாம் பரதம் சுக்ல கந்தானுலேபன:, சஸ்த்ர ப்ருதாம் வரிஷ்ட:, ப்ருஷஸ்பதி துல்ய மதே:, ந்யாயவாதீ விபீஷண: மேரு சிகராகாரம், திவ்யாபரண பூஷித:, அனுக்ரத:, பக்த:, வராயுத தர:, வஜ்ராயுத சமப்ரப:…” இவ்விதமாக விபீஷணனுடைய உருவம், ஆடை அலங்காரம், வீரம் போன்ற அவனைப் பற்றிய குண வர்ணனை விபீஷணன் சாது சுபாவம் கொண்டவன் என்பதையே குறிப்பிடுகின்றன.
ராவணனுக்கு ஹித போதனை:-
தர்மாத்மாவும், நல்வழியில் செல்பவனுமான விபீஷணன், ராவணனுக்கு நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்கிறான். சீதையைத் திரும்பக் கொடுத்து விடும்படி, “ப்ரதீயதாம் தாசரதாம் மைதிலீ” என்று மும்முறை குறிப்பாகக் கூறுகிறான்.
வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் விபீஷணன் ராவணனுக்குச் சொல்லும் ஹித போதனை 9, 10, 11 சர்கங்களில் வருகிறது.
யுத்தத்தில் ராமனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ராவணன் ஏற்பாடு செய்த மந்திரி சபைக் கூட்டத்தில் மந்திரிகள், சேனாபதிகள், ராக்ஷச வீரர்கள் என்று 18 பேர் கலந்து கொண்டனர். அவர்களுள் இந்திரஜித்தும் விபீஷணனும் கூட இருந்தனர். ராக்ஷச வீரர்களனைவரும் ஆயுதங்கள் தரித்து, கர்வத்தோடும் மதத்தோடும் ராமனைக் கண்மூடித் திறக்கும் நேரத்தில் அழித்து விடுவோம் என்று பீற்றிக் கொண்டனர்.
அவர்களின் பேச்சைக் கேட்ட விபீஷணன், ராவணனுக்கு உண்மை நிலையை உரைக்கும் வண்ணம் ஹித போதனை செய்தான்.
முதல் ஹித போதனை:-
“தான் க்ருஹீதாயுதான் சர்வான் வாரயித்வா விபீஷண:
அப்ரவீத் ப்ராஞ்ஞலிர் வாக்யம் புன: ப்ரத்யுப வேச்யதான்”…………… (-யுத்த 9-7)
பொருள்:- ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அவர்கள் கூற்றை மறுத்து உட்காரச் செய்து கை கூப்பிக் கொண்டு தன் அபிப்பிராயத்தை வெளியிட்டான்.
“சாம, தான, பேத உபாயங்கள் மூலம் காரியத்தைச் சாதிக்க வேண்டும். அது முடியாவிட்டால் மட்டுமே தண்டோபாயத்தைக் கையில் எடுத்து நம் பராக்ரமத்தைக் காட்ட வேண்டும். ராமன் பலவான். அணுக முடியாதவர். கோபத்தை வென்றவர். போரில் வெல்ல வேண்டுமென்ற தீக்ஷை உடையவர். அவரை வெல்வது அத்தனை எளிதல்ல. அவருடைய தூதன் சமுத்திரத்தைக் தாண்டி இலங்கைக்கு வந்துள்ளான். இதை யாராவது உணர்ந்தீர்களா? யாராவது இவ்விதம் வரக் கூடுமென்று ஊகித்தீர்களா? எதிரிகளின் படை மிக பலமும் பெருமையும் கொண்டது. அவற்றைப் பற்றி குறைவாக மதிப்பிட வேண்டாம். ராமரின் மனைவியை அசுர ராஜன் காரணமின்றி ஜனஸ்தானத்திலிருந்து அபகரித்து வந்துள்ளார். ராமர் கரனை வதைத்ததில் தவறில்லை. தன்னைக் காத்துக் கொள்ள எதிரியை கொல்ல நேருகிறது. சீதையின் மூலம் ராக்ஷச வம்சத்திற்கே பெரிய ஆபத்து வரப் போகிறது. அவளை ராமரிடம் திரும்பக் கொடுப்பதே நல்லது. ராமரோடு யுத்தத்தைக் கேட்டு வாங்கிக் கொள்வது நல்லதல்ல. ராமர் இலங்கையின் அனைத்துச் செல்வங்களையும் அழிக்குமுன்பாகவே அவரிடம் சீதையை சமர்ப்பிப்பது உத்தமம்.
பயங்கரமான, பலமான வானர சேனை இலங்கையை ஆக்ரமிப்பதற்கு முன்பே சீதையை அவரிடம் அளித்து விட வேண்டும். இல்லாவிடில் இலங்கை நாசமாகி விடும். ராக்ஷசர்களனைவரும் அழிந்து போவர். நான் உறவினன் என்பதால் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். ஹிதம் கூறுகிறேன். உண்மையை உரைக்கின்றேன். சீதையை ராமரிடம் கொடுத்து விடுங்கள்”.
“வைரம் நிரர்தகம் கர்த்தும் தீயதாமஸ்ய மைதிலீ” ………… -(யுத்த 9-17)
“புரீம் தாரயதே பாணை: தீயதாமஸ்ய மைதிலீ”………… -(யுத்த 9-18)
“ஹிதம் தத்யம் த்யஹம் ப்ரூமி தீயதாமஸ்ய மைதிலீ”…………….. -(யுத்த 9-21)
“ராமர் சரத்கால சூரிய கிரணங்களையொத்த கூர்மையும் உறுதியும் படைத்த பாணங்களால் உன்னை வதைப்பார். அதற்கு முன்பாகவே சீதையை தசரத புத்திரரிடம் சேர்ப்பித்து விடு”
“ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ”…………. -(யுத்த 9-22)
“கோபத்தை விடு. தர்மத்தை அனுசரி. நாமனைவரும் பிள்ளை குட்டிகளுடன், பந்து மித்திரர்களுடன் சுகமாக வாழலாம். ராமரிடம் சீதையைக் கொடுப்பது உத்தமம்” என்று பல்வேறு விதமாக விபீஷணன் ராவணனுக்கு ஹித போதனை செய்தான்.
ஆனால் விபீஷணனின்சொற்கள் ராவணனுக்கு ருசிக்க வில்லை. அனைவரையும் அனுப்பிவிட்டு சபையைக் கலைத்து மாளிகைக்குத் திரும்பி விட்டான்.
இரண்டாவது முறையாக ஹித போதனை:-
விபீஷணன் மறுநாள் காலையிலேயே அண்ணனின் மாளிகைக்குச் சென்றான். விபீஷணன், அறம், பொருள் இவைகளில் நிச்சய புத்தியை உடையவன். பீம கர்மா= எவரும் செய்யாத செயலையுடையவன். மஹாத்யுதி = மஹா தேஜஸ் கொண்டவன். ஆசார கோவித: =மரியாதைகளில் தலை சிறந்தவன். அண்ணனைப் பார்த்ததுமே நமஸ்கரித்தான்.
“உவாச ஹிதமத்யர்தம் வசனம் ஹேது நிஸ்சிதம்”…………… -(யுத்த 10-12)
“ராவணனிடம் விபீஷணன் நிச்சயமாக நன்மை பயக்கக்கூடிய நல்மொழிகளைக் கூறினான்”.
“சீதை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது முதல் நமக்கு அனேக தீய சகுனங்கள் எதிர்ப்படுகின்றன. ஹோமங்களில் தீ நன்கு வளர்வதில்லை. புகை மூளுவதால் ஜ்வாலை மந்தமாகவே ஒளிர்கின்றது. வேத அத்யயனம் செய்யுமிடங்களில் பாம்புகள் காணப்படுகின்றன. பசுக்களிடம் பால் வற்றி விட்டது. வீடுகளின் மேல் காக்கைகளும் கழுகுகளும் கூட்டம் கூட்டமாக பறக்கின்றன. அனேக விதமான துர்நிமித்தங்கள் தென்படுகின்றன. இவற்றின் மூலம் இலங்கைக்கு விளையக் கூடிய கேடு சுட்டப் படுகிறது. எனவே,
“வைதேஹி ராகவாய ப்ரதீயதாம்”……………… -(யுத்த 10-12)
“ஹிதம் மஹார்த்தம் ம்ருது ஹேது சம்ஹிதம்
வ்யதீத காலாயதி சம்ப்ரதிக்ஷமம்
நிசஸம்ய தத்வாக்ய முபஸ்தி தஜ்வர:”………………. -(யுத்த 10-28)
ஆனால் ஹிதமான, பொருள் பொதிந்த, மிருதுவான விபீஷணனின் நல்ல வசனங்கள் ராவணனுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணின.
“பயம் ந பஸ்யாமி குதஸ்சிதப்யஹம்
ந ராகவ: ப்ராப்ஸ்யதி ஜாது மைதிலீம்”……………………… -(யுத்த 10-29)
“எனக்கொன்றும் பயமில்லை. ராமனிடம் சீதையைக் கொடுக்கும் உத்தேசமே இல்லை” என்று கூறிய ராவணன்,
“தஸாநரோ பராதரமாப்த வாதினம்
விசர்ஜயா மாஸ ததா விபீஷணம்” …………………….. -(யுத்த 10-30)
நல்மொழி பகர்ந்த விபீஷணனை அனுப்பி விட்டான்.
மூன்றாவது முறையாக விபீஷணன் கூறிய உபதேசம்:-
ராவணன் மீண்டுமொருமுறை மந்திரிகள் நண்பர்களுடன் போர் பற்றிய சபையைக் கூட்டினான்.
“ததோ மஹாத்மா விபுலம் ஸுயுக்யம்
வரம் ரதம் ஹேம விசித்ரி தாங்கம்
ரதம் சமாஸ்தாய யயௌ யசஸ்வீ
விபீஷண: சம்சதமக்ரஜஸ்ய”…………..-(யுத்த 11-28)
கீர்த்திமானான மஹாத்மா விபீஷணனும் அந்த சபைக்குச் சென்றான்.
“ஸ பூர்வ ஜாயா வரஜ: ஸஸம்ச
நாமாத பஸ்சாத் சரணௌ வவந்தே”……..-(யுத்த 11-29)
தமையனாருக்கு அந்த தம்பியானவன் தன் பெயரைக் கூறி அபிவாதனம் செய்தான். கால்களில் விழுந்து சேவித்தான்.
ராவணன் அந்த சபையில் சீதை மேல் தனக்குள்ள விருப்பம் பற்றி உபன்யாசம் செய்தான். அனைவரும் செவி மடுத்தனர். கும்பகர்ணன் முதலில் தமையனின் செய்கையை விமர்சித்தான். பின்னர், அண்ணனுக்காக யுத்தம் செய்யத் தயார் என்றான்.
விபீஷணன் மீண்டுமொருமுறை ஹித போதனை செய்ய நிச்சயித்தான்.
“விபீஷணோ ராக்ஷச ராஜ முக்ய
முவாச வாக்யம் ஹித மர்த யுக்தம்” ………….-(யுத் 14-1)
நல்ல பிரயோஜனத்தோடு கூடிய ஹித வார்த்தைகளை பின் வருமாறு மொழிந்தான்;
“ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ” ………………..-(யுத் 14-3,4)
“சீதை என்னும் கொடிய விஷமுள்ள சர்ப்பமானது உன் கழுத்தைச் சுற்றி வளைத்துள்ளது. ராம பாணம் ராக்ஷச வீரர்களின் தலைகளைக் கொய்யுமுன்னரே மைதிலியை ராமருக்கு சமர்ப்பித்து விடுங்கள்” என்று மீண்டும் மீண்டும் உபதேசித்தான்.
அப்போது ப்ரகஸ்தன் விபீஷணனின் வார்த்தைகளை மறுத்துப் பேசினான். அசுரர்களான தங்களுக்கு எந்த பயமுமில்லை என்றான்.
விபீஷணன் அவனிடம் நல்ல வார்த்தைகள் கூறி வாதித்தான். ராக்ஷச அரசனுக்கு நற்புத்தி கூறும்படி வேண்டிக் கொண்டான்.
“நரேன்த்ர புத்ராய ததாது மைதிலீம்” ………..-(யுத் 14-21)
“சக்ரவர்த்தி குமாரருக்கு மைதிலியை திரும்பக் கொடுத்து விடு” என்று மீண்டுமொருமுறை விண்ணப்பித்தான்.
இந்திரஜித்து குறுக்கிட்டு விபீஷணனை ஆக்ஷேபித்தான். “தன்னைப் போன்றவன் இருக்கும் போது ஆபத்து ஏது?” என்று பெருமை பேசினான்.
விபீஷணன் அவனுக்குத் தகுந்த பதில் கூறி நல்மொழி பகர்ந்தான்.
“தனானி ரத்னானி விபீஷணானி
வாசாம்சி திவ்யானி மணீம்ஸ்ச சித்ரான்
சீதாம்ச ராமாய நிவேத்ய தேவீம்
வஸேம ராஜன் நிஹ வீத ஸோகா:”………..-(யுத் 16-14)
“தனம், ரத்தினம், ஆபரணங்கள், சிறந்த வஸ்திரங்களோடு சீதையை ராமருக்கு சமர்ப்பித்து விட்டு நாம் சுகமாக கவலையின்றி உயிர் வாழலாம்” என்றான்.
ராவணன் விபீஷணனை மறுத்தல்:-
யமனால் அழைக்கப்பட்டவனான ராவணனுக்கு நன்மை பயக்கும் ஆலோசனை கூறிய விபீஷணன் மேல் பலத்த கோபம் மூண்டது. “உறவினர்கள் எல்லோரும் துஷ்டர்கள்” என்றான்.
“அவர்கள் ஆபத்தை மூட்டுவார்கள். ஆபத்தானவர்கள். விபீஷணன் பேசியதைப் போல் வேறு யாராவது பேசியிருந்தால் அந்தக் கணமே அவனைக் கொன்றிருப்பேன்” என்றான்.
அச்சொற்கள் நீதிமானான விபீஷணனை மன வருத்ததுக்கு உள்ளாக்கின.
“அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபீஷண:
அந்தரிக்ஷ கத: ஸ்ரீமான் ப்ராதரம் ராக்ஷஸாதிபம்” …………..-(யுத் 16-17)
விபீஷணனுக்குக் கோபம் வந்தது. பிரசித்தி பெற்றவனான விபீஷணன் ஆகாயத்தில் பறந்து அங்கிருந்தபடியே ராவணனிடம் இவ்விதம் கூறினான்:
“ஸ த்வம் ப்ராதா அஸி மே ராஜன் ப்ரூஹி மாம் யத்யதிச்சஸி
ஜ்யேஷ்டா மான்ய: பித்ரு சமோ ந ச தர்மபதே ஸ்தித:”…………….-(யுத் 16-18)
“உன் விருப்பம் வந்தது போல் நீ பேசு. நீ என் அண்ணன். ஜ்யேஷ்டன். மரியாதைக் குரியவன். தந்தையைப் போன்றவன். அதர்ம வழியில் செல்பவனானாலும் கூட கௌரவிக்கத் தக்கவன்” என்றான்.
“ஸுலபா: புருஷா ராஜன் சததம் ப்ரியவாதின:
அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப:”…………-(யுத் 16-21)
“பிரியமான சொற்களைக் கூறுபவர் சுலபமாகக் கிடைப்பர். ஆனால் இனிமை பயக்காவிட்டாலும் நன்மை பயக்கும் வார்த்தைகளைக் கூறுபவர் கிடைப்பதரிது. அப்படியே ஒருவேளை அப்படிப்பட்டவர் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்பவர் கிடைப்பதரிது” என்று கூறி ராமனால் வரவிருக்கும் அபாயம் பற்றி மீண்டுமொருமுறை எச்சரித்தான்.
“ஸ்வஸ்திதே ஸ்து கமிஷ்யாமி சுகீ பவ மயா வினா”………….-(யுத் 16-26)
“நான் இதை விட்டுப் போகிறேன். உங்களுக்கு சுகம் உண்டாகட்டும். நானின்றி நீர் க்ஷேமமாக இருப்பீராக!” என்று கூறிவிட்டு ராமரை சரணடைவதற்காக விபீஷணன் கிளம்பினான்.
விபீஷண சரணாகதி:-
“ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம: ஸ லக்ஷ்மண:”……-(யுத் 17-1)
ஒரு முஹூர்த்த காலத்திற்குள் விபீஷணன் ராம லக்ஷ்மணர்கள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தான். மின்னல் போல் ஆகாயத்தில் இருந்த அவனை பூமியில் நின்ற வானரர்கள் பார்த்தனர். விபீஷணன் அவர்களிடம் தன்னைப் பற்றி கூறினான்:
“ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷசோ ராக்ஷசேஸ்வர:
தஸ்யா ஹமனுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத:”……..-(யுத் 17-12)
“ஸோஹம் பருஷிதஸ்தேன தாசவச்சாவமானித:
த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத:”………..-(யுத் 17-16)
“நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம்”…………..-(யுத் 17-17)
“ராவணன் எனப்படும் துஷ்டனான ராக்ஷச ராஜன் என் தமையன். அவன் என்னை அடிமை போல் நடத்தி அவமானப்படுத்தினான். என் மனைவி மக்களை விடுத்து விட்டு ராமனிடம் சரணடைய வந்துள்ளேன். சர்வ லோக சரண்யனான ராமனுக்கு என் வருகையை உடனே தெரியச் செய்யுங்கள்” என்றான்.
அப்போது ராமன் வானர வீரரகளிடம் அவர்களின் அபிப்ராயங்களைக் கூறும்படி கேட்டார்.
சுக்ரீவன்:- “இவன் சத்ரு. எதிர்பாராமல் வந்துள்ளான். இவனை நம்பக் கூடாது. ஒற்றனாக இருக்கலாம். இவனால் ஆபத்து வரலாம். ராவணனே இவனை அனுப்பியிருக்கலாம். இவனை தீவிரமாக தண்டிக்க வேண்டும்”.
அங்கதன்:- “எவ்விதத்திலும் சந்தேகத்திற்குரியவன். அவகாசம் கிடைத்தால் ஏமாற்றிவிடுவான். ஜாக்ரதையாக யோசித்து லாப நஷ்டங்களை அறிந்த பின்பே அபயமளிக்க வேண்டும்”.
சரபன்:- இவனை நன்கு பரிசோதித்த பின்னரே அங்கீகரிக்க வேண்டும்.
ஜாம்பவான்:- ராவணனிடமிருந்து இவன் வந்துள்ளான். இவனை சந்தேகப்பட வேண்டியுள்ளது.
மைந்தன்:- இவனை கவனமாக கேள்வி கேட்க வேண்டும். கெட்டவனா என்று சோதனை செய்தறிய வேண்டும். பின்னரே தகுந்த முடிவு எடுக்க முடியும்.
ஹனுமான்:-
“அத சம்ஸ்கார சம்பன்னோ ஹனுமான் சசி வோத்தம:
உவாச வசனம் ஸ்லக்ஷ்ண மர்தவன் மதுரம் லகு”………………-(யுத் 17-50)
சாஸ்திரச் செல்வமுடையவரும் மந்திரிகளில் உத்தமருமான அனுமன் அழகியதும், சிறந்த பொருளுடையதும் குற்றமற்றதுமான சொற்களை கூறினார்.
“ராமா! நீங்கள் அறிவில் தலை சிறந்தவர். அனைவரிலும் மேம்பட்டவர். நல்ல பேச்சாளர். புத்தியில் பிரஹஸ்பதியை ஒத்தவர். நான் உயர்ந்தவன் என்பதால் பேசவில்லை. என் மேல் தாங்கள் வைத்துள்ள கௌரவத்தால் பேசுகிறேன். அவ்வளவே தவிர, இவர்களை விட உயர்ந்தனல்லன். இந்த விபீஷணன் பேச்சில் துஷ்ட சுபாவம் வெளிப்படவில்லை. இவனுடைய முகம் பிரசன்னமாக உள்ளது. இவன் விஷயத்தில் சந்தேகம் தேவையில்லை. ராக்ஷச ராஜ்யம் பெற வேண்டுமென்ற ஆலோசனையின் பேரில் உம்மைச் சரணடைய வந்துள்ளான். இவனை ஸ்வீகரிப்பதில் தவறில்லை. தங்கள் நிர்ணயமே முடிவானது” என்று வினயத்தோடு கூறினார் ஹனுமான்.
ராமரின் நிர்ணயம்:-
எவராலும் தீங்கு செய்ய முடியாதவரும் (துர்தர்ஷ:), கருணையான மனமுடையவரும் ஆன ராமர் பதிலளித்தார்:-
“மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன” ………..-(யுத் 18-3)
“உள்ளன்போடு வந்தவனை தோஷமிருந்தாலும் கை விட மாட்டேன்” என்றார். மேலும்,
“ராஜ்ய காங்க்ஷீ ச ராக்ஷச:” ……….-(யுத் 18-12)
“……தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண;”………….-(யுத் 18-13)
“அரசாட்சியில் ஆசை வைத்துள்ளவன். எனவே சுவீகரிக்கத் தகுதி உள்ளவன். இவன் துஷ்டனாகிலும் இல்லாவிடினும் பயமேதுமில்லை. இவன் நமக்கு அபகாரம் செய்ய மாட்டான்” என்றார் ஸ்ரீ ராமர்.
“அங்குல்யக்ரேண தான் ஹன்யா மிச்சன் ஹரி கணேஸ்வர:” …………-(யுத் 18-23)
“தேவையேற்பட்டால் கால் விரல் நுனியால் ராக்ஷசர், பிசாசு, யக்ஷர், அரக்கர் எவராயிருப்பினும் ஒழித்து விடுவேன்” என்றார் ராமர்.
“ஆர்தோ வா யதி வாத்ருப்த: ப்ரேஷாம் சரணாகத:
அபி ப்ரணான் பரித்யஞ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மனா”………….-(யுத் 18-28)
“சரணம் என்று வேண்டியவன் சத்ருவானாலும் கர்வமுடையவனாயினும். நொந்தவனாயினும் உத்தமனான மனிதன் உயிரைக் கொடுத்தாவது காப்பற்ற வேண்டும்”, என்றார்.
“சக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்யே தத் வ்ரதம் மம” ….-(யுத் 18-34)
“நான் உன் தாசன் என்று ஒருமுறை கூறி விட்டால் அவர் யாராயிருப்பினும் சகல பிராணிகளிடமிருந்தும் நான் அவருக்கு அபயமளிப்பேன். இது என் விரதம்” என்றார் ஸ்ரீ ராமர்.
“அநயைனம் ஹரி ஸ்ரேஷ்ட தத் தமஸ்யாபயம் மயா
விபீஷணோ வா சுக்ரீவ யதி வா ராவண: ஸ்வயம்”…….-(யுத் 18-35)
“ராவணனே வந்து சுயமாக சரணடைய விரும்பினும் அபயமளிப்பேன்” என்றுரைத்தார் ஸ்ரீராமர்.
விபீஷணர் ராமரிடம் சரணாகதி வேண்டல்:-
“அனுஜோ ராவணஸ்யாஹம் தேன சாஸ்ம்யவமாநித:
பவந்தம் சர்வ பூதானம் சரண்யம் சரணம