spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி: ஆச்சார்யாள் அருளமுதம்!

அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி: ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -
abinav vidhya theerthar 1

ஒருவன் தனக்காக ஒரு வீட்டைக் கட்ட நினைத்தான். அதற்காக அவன் பல வீட்டு வரை படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து கட்டிட நிபுணர்கள் வாஸ்து வல்லுனர்கள் ஆகியோரிடம் ஆலோசனைகளை நடத்தி கடைசியில் வீட்டின் அமைப்பை முடிவு செய்தான்.

நல்ல திறமை வாய்ந்த பிரபல பொறியாளரிடம் அந்த கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். தான் நினைத்தவாறு கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினான். தினமும் தானே நேரில் சென்று அங்கு நடக்கும் கட்டிட வேலைகளில் உன்னிப்பாக மேற்பார்வை செய்தான்.

அதற்காக அவன் முழு நேரத்தையும் செலவிடத் தயங்க வில்லை எந்தவித மாற்றத்திற்கும் ஒப்புக்கொள்ள அவன் மனம் இடம் தரவில்லை அவன் செய்த கெடுபிடிகளால் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் இவனை ஒரு தொல்லையாகவே எண்ணினார்கள்

அவன் நினைத்தவாறே கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது அவன் மிக சந்தோஷமாக குடும்பத்துடன் புது வீட்டிற்கு சென்று குடியேறினான் வீட்டிற்கு வரும் நண்பர்கள் எவராவது அவன் வீட்டை பார்த்து விட்டு சிறிதளவு பாராட்டினாலும் அவன் மனம் கர்வத்தால் பொங்கி வழியும்.

ஒரு நாள் அவனுடைய ஒரே மகன் தான் விரும்பிய ஒரு படத்தை சுவற்றில் மாட்டி வைப்பதற்காக ஆணி எடுத்து அடிக்க ஆரம்பித்தான். அவ்வளவுதான் சுத்தியலின் ஓசை கேட்டு ஓடி வந்த அவன் தன் மகனை முறைத்து பார்த்து ஆணி அடிப்பதை நிறுத்துமாறு சத்தம் போட்டான்.

என்ன துணிச்சல் உனக்கு புதிதாய் கட்டிய வீட்டு சுவற்றை பாழாக்கப் பார்க்கிறாயே அதனுடைய அழகையும் வனப்பையும் கெடுத்து விட்டாயே என்று மகனிடம் கோபித்துக் கொண்டான்.

அந்த படம் உனக்கு வேண்டுமானால் அதை உன் மேஜையின் மேல் வைத்துக் கொள் என்று சத்தமிட்டான். எப்பொழுதுமே தன்னிடம் மிகவும் பாசத்தோடும் அமைதியாகவும் பேசிக் கொண்டிருந்த தனது தந்தை திடீரென்று கோபத்தால் பொங்கி எழுவதை அந்தப் பையனால் ஜீரணிக்க முடியவில்லை.

வருடங்கள் ஓடின அவனுடைய ஆரோக்கியம் குறைய ஆரம்பித்தது நல்ல மருத்துவ வசதி படைத்த ஒரு மலைப் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்து செல்ல அவன் முடிவெடுத்தான் அதனால் வீட்டை ஒரு பெரிய தொகைக்கு விற்று விட்டான். அதற்கான பெருமளவு பணம் அவனுக்கு காசோலையாக கொடுக்கப்பட்டது.

வங்கி விடுமுறை நாளாக இருந்ததால் உடனடியாக அந்த காசோலையை வங்கியில் செலுத்த முடியவில்லை அதை பத்திரமாக கொண்டு போய் தனது வீட்டு அலமாரியில் வைத்துப் பூட்டினான். படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான்.

காசோலை வைத்திருந்த அறையிலிருந்து ஓசை கேட்டதும் அவன் திடுக்கிட்டு எழுந்தான் சற்றும் யோசிக்காமல் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு போலீசை வரவழைத்தான். சிறிது நேரத்தில் சில போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தார்கள் ஆராய்ந்து பார்த்ததில் குற்றவாளி ஒரு சுண்டெலி தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டது.

போலிஸ்காரர்கள் எல்லோரும் சென்ற பிறகு அவன் மனைவியை நீங்கள் சின்ன விஷயத்திற்கெல்லாம் பயந்து போகிறீர்கள் என்று சொன்னாள். காசோலையை அலமாரியில் வைத்து இருந்ததால் அதன் பாதுகாப்பு பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் எனக்கு தூக்கம் கூட வரவில்லை.

நடு இரவில் திடீரென்று அந்த அறையிலிருந்து ஓசை வந்ததும் நான் பயந்தது போலவே திருடன்தான் வந்திருக்கிறான் என்று முடிவு செய்து விட்டேன் எனவே உதவிக்கு ஜாக்கிரதையாக போலிஸை வரவழைத்தேன். அதிகப் பிரசங்கித் தனமாக நடந்து கொண்டு விட்டேன் இப்போதுதான் எனக்கு புரிகிறது என்று வெட்கப்பட்டுக் கொண்டே கூறினான்.

அன்றிரவு முழுதும் அவன் சரியாக தூங்காமல் மறுநாள் காலையில் அவசர அவசரமாக காசோலையை எடுத்துக்கொண்டு வங்கி திறப்பதற்கு முன்பாகவே அந்த வாசலில் நின்று கொண்டான் வங்கியில் காசோலையை செலுத்திய பிறகே அவன் நிம்மதி அடைந்தான்.

அவன் வெளியேறியதும் ஒரு விசித்திரமான நிகழ்ச்சி அரங்கேறியது அந்த அலுவலகத்தில் அவன் சமர்ப்பித்த கவலையோடு மேலும் சில காசோலைகளும் பத்திரங்களும் திடீரென்று காணாமல் போய்விட்டன

வங்கியின் தலைமை அதிகாரியும் மற்ற அதிகாரிகளும் பதறி அடித்துக்கொண்டு எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தார்கள் வேலைக்காரர்கள் அவற்றை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்த பின் தான் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

தலைமை அதிகாரியை பார்ப்பதற்காக அவருடைய ஐந்து வயது மகன் அலுவலகத்திற்கு வந்து இருந்தான் விளையாட்டாக மேசையில் கிடந்த காசோலைகளையும் மற்ற பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு பக்கத்திலிருந்த கழிப்பறைக்குச் சென்று இருக்கிறான். ஒரு வாளியில் நீரை நிரப்பி அதில் காகித கப்பல் செய்து விளையாட தயாராக இருந்தான் அதற்குள் வேலைக்காரன் சிறுவனைப் பார்த்து விட்டதால் அவன் கையிலிருந்த பத்திரங்களை பிடுங்கிக் கொண்டான்.

காசோலையை வங்கியில் செலுத்தி விட்டுச் சென்ற நம் கதாநாயகனுக்கு இதைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாததால் அவன் நிம்மதியாக இருந்தான் அடுத்த நாள் விருப்பப்பட்டவாறே மலைப் பிரதேசத்தில் ஒரு வீட்டை வாங்கினான். வெகு விரைவிலேயே தன்னுடைய வீட்டு பொருட்கள் எல்லாவற்றையும் புதிய இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தான். பிறகு அவனது பழைய வீடு இடிக்கப்பட்டு அங்கே பல அடுக்குகள் கொண்ட பெரிய வர்த்தக மையம் கட்டப்பட்டது.

முதன்முறையாக அந்த இடத்தைப் பார்த்த போது தன் நண்பனிடம் இது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது என்று குறிப்பிட்டான் கதையில் வந்த மனிதனுக்கு முதலில் இது என்னுடைய வீடு என்ற எண்ணம், தான் கட்டிய வீட்டின் மீதே தீவிரமாக இருந்தது எனவே தான் ஒரு சாதாரண ஆணியை வீட்டுச் சுவற்றில் அடிப்பதற்கு அவனது நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் வேதனை அடைந்தான்.

வீட்டை விற்பனை செய்து விட்டு அதற்கான பணத்தை காசோலையாக பெற்றுக் கொண்ட போது இந்த தாள் என்னுடையது என்ற எண்ணம் மனதில் குடி கொண்டது அதன் விளைவாக ஒரு இரவு முழுவதும் தூக்கமின்றி அவன் அவதிப்பட வேண்டிய தாயிற்று வங்கியில் காசோலையை சமர்ப்பித்த உடனே அது தன்னுடையது என்ற நினைப்பில் இருந்த அவன் தன்னை விடுவித்துக் கொண்டு விட்டான். அவன் அமைதியோடு காணப்பட்டான்.

அந்த காசோலைக்கு தற்காலிக பொறுப்பாளிகள் என அதிகாரிகள் நினைத்ததால் காசோலை காணவில்லை என்று அறிந்ததும் அவர்கள் தவித்துப் போனார்கள்.

நமது கதையின் நாயகன் தனது மலைப்பிரதேச வீட்டிற்கு குடிவந்த பிறகு முதன் முதலில் வர்த்தக மையத்தை பழைய வீடு இருந்த இடத்தில் பார்த்தபோது அவன் மனம் சிறிதும் வருத்தம் அடையவில்லை. அந்த கட்டிடத்தை பாராட்டவும் செய்தான். வீடு என்னுடையது என்று அபிமானம் அவனிடம் மறைந்து விட்டிருந்ததால் வீடு இடிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்தும் கூட அவன் எவ்வித பாதிப்பும் அடையவில்லை.

முன்பிருந்த அளவிற்கு அவன் வீட்டின் மீது அபிமானம் இருந்திருந்தால் அவன் அந்த அதிர்ச்சியிலேயே பைத்தியமாக மாறி இருக்க வாய்ப்புண்டு. முன்பு அவனால் கேவலம் ஒரு ஆணியை சுவற்றில் எடுப்பதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது இப்போதோ வீடு இடிக்கப்பட்டு அந்த வீட்டில் ஒரு வர்த்தக மையமே கட்டப்பட்டுவிட்டது.

ஒரு சமயம் சில சேவகர்கள் ஓடிவந்து ஜனகரிடம் அரசே நமது தலைநகரமான மிதிலை தீப்பற்றி எரிகிறது என்று தெரிவித்தார்கள். இதைக்கேட்டு மனம் கலங்காத மன்னர் தீப்பற்றி எரிந்தால் என்னுடையது எதுவும் எரியவில்லை என்று மிக உறுதியாகவும் அதே சமயத்தில் அமைதியாகவும் பதிலளித்தார்.

தமது ராஜ்ஜியத்தில் அவருக்கு ஒரு கடுகளவு கூட என்னுடையது என்ற எண்ணம் ஏற்படவில்லை. இதற்காக அவரை பொறுப்பற்றவர் என்று கூறிவிட முடியாது அவ்வளவு பெரிய ராஜ்ய பாரத்தை தாங்கி சிறப்பாக ஆட்சி செய்து வந்த போதிலும் அவர் எப்பொழுதுமே அதை தன்னுடையது என்று நினைத்துக் கொள்ளாமல் அமைதியாக காணப்பட்டார்.

ஒரு பொருள் எது என்னுடையது என்ற எண்ணத்தை ஒருவன் வளர்த்துக் கொண்டால் பிறகு அவன் அப்பொருளுக்கு என்ன நேர்ந்தாலும் அல்லது தான் எதிர்பார்க்காது ஏதாவது அப்பொருளுக்கு நிகழ்ந்து விடுமோ என்று நினைப்பதாலும் மிகவும் பாதிக்கப்படுகிறான்.

அந்த எண்ணத்தை அவன் எப்படியாவது பயிற்சி செய்து துறந்து விட்டால் துக்கத்திற்கு காரணமாயிருந்த அப்பொருளால் அவனுக்கு எந்த வித துன்பமும் ஏற்படாது. தன்னைச் சூழ்ந்துள்ள மக்களிடத்திலும் வசிக்கும் இடங்களிலும் மற்ற பொருட்களிலும் ஒருவன் என்னுடையது என்ற எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். இத்தகைய மனப்பான்மைதான் அது அவனது ஆற்றலை குறைக்காமல் அவனே ஆனந்தமாகவும் அமைதியாகவும் இருக்கச் செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe