
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே”
பத்துப் பாசுரங்கள் மட்டுமே பாடி, இதுவரை பார்த்தறியாத அரங்கனோடே சோதியில் கலந்தவர் திருப்பாணர். பிறப்பால் வேறு குலத்தவர். கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. அரங்கனின் திருவடி தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் காவிரிக் கரையினிலேயே நின்று தொலைதூரத்தில் இருந்தே, குல வழக்கத்திற்கேற்ப கையில் யாழுடன், திருவரங்க நாதனை ஏத்திப் பாடல்களை பாடி, மெய்மறந்து, அரங்கன் திருமதிலை மட்டுமே சேவித்துக்கொண்டிருக்கிறார்.
ஒருநாள், திருவரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டுசெல்ல, பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோக சாரங்கர், வழியை மறைத்துக்கொண்டு தனை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்த திருப்பாணரை விலகும்படிச் சொல்கிறார். மெய்மறந்த பாணருக்கு பட்டர் சொன்னது செவியில் ஏறவில்லை . கோபமுற்ற லோக சாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது திருப்பாணரின் நெற்றியில் பட்டு குருதி வருகிறது, உடன் உணர்வும் வருகிறது. திருவரங்கனின் திருமஞ்சனத்தைத் தடை செய்து விட்டேனோ என்று பதறிய பாணர், அங்கிருந்து அகர்ந்தார்.
நீரை முகந்துகொண்டு சந்நிதிக்குத் திரும்பிய லோக சாரங்கர், அரங்கனின் நெற்றியிலிருந்து செந்நீர் பெருகி வழிவதைக் கண்டு மனம் பதைத்தார், ஏதும் செய்யவியலாமல் விதிர் விதிர்த்தார்.
“பல காலமாக நம்மைப் பாடிவருகிற பாணன், புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ ?” என்றெண்ணிய எம்பெருமான், அன்றிரவு, பட்டரின் கனவில் தோன்றி, “எம் அன்பனை, இழிகுலத்தவன் என்று எண்ணாது, உம் தோளில் ஏற்றி எம்முன் கொணர்க” என்கிறான்.
மனம் வருந்திய லோக சாரங்கர், அதிகாலையிலேயே காவரிக் கரைக்குச் சென்று அரங்கனின் கட்டளையை நிறைவேற்றுகிறார்.
வையமளந்தானை கண்ணாரப் பருகிய பாணர், அவன் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொரு அவயவங்களாகக் கண்டு குளிர்ந்து, மனமுருகிப் பாடிய பத்து பாசுரங்களே “அமலனாதிபிரான்” .
“கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே”
“சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே”
“உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே”
என்று ஒவ்வோர் அங்கமாகக் கண்டு பாடியபோது பரவசித்து மகிழ்ந்த பரந்தாமன், பத்தாம் பாசுரத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான்.
பிறவியெடுத்து இத்தனை காலம் காணாமல் கழித்த எம்பெருமானைத் தொடும் தூரத்தில் நின்று சேவித்தாயிற்று. அப்பாடா, இனி அரங்கனைச் சேவிக்க எந்த தடையும் இல்லை, எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதுவும் மூலஸ்தான பட்டரே தெரிந்தவராகிவிட்டார் என்று பாணர் நினைத்திருந்தால் என்னவாகியிருக்கும் ?
சில சூப்பர் மால்களில் கவனித்திருக்கலாம். மேல் தளத்திற்கு ஏறிச்செல்ல எஸ்கலேட்டர் வைத்திருப்பவர்கள், இறங்குவதற்கு சாதாரண படிகள் அமைத்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது வேலை முடிந்துவிட்டதே, அதுதான் அவர்களின் பொருட்களை நாம் வாங்கிவிட்டோமே ! அப்புறமும் நம்மை வசதியாக இறக்கிவிட அவர்களுக்கு பைத்தியமா என்ன ?
இங்கும் அதுதான் நடந்திருக்கும். பாணருக்குத் தீர்த்தப் பிரசாதம், சடாரி சாதித்ததோடு அனுப்பிவைத்திருப்பார், லோக சாரங்கர். எம்பெருமான் சொன்னதால், தோளில் சுமந்துவந்தார். திரும்பவும் சுமந்துகொண்டுபோய் விடுவாரா ? மாட்டார்.
பாணர் பகவான் முன் நின்று, அனுபவித்து பத்து பாசுரங்கள் அருளும் நேரம் நமக்கும் கிடைத்திருந்தால், நாம் என்ன செய்திருப்போம் ? “பகவானே, குழாயில் தண்ணி வர என்பதில் இருந்து ஆரம்பிப்போம். நம்முடைய தேவைகளுக்கு முடிவே இல்லை. இத்தனையும், அவன் முன் கண்ணை நன்றாக இறுக்க மூடிக்கொண்டு வேறு கேட்போம். அதற்குத்தான், வேளுக்குடி ஸ்வாமிகள் சொல்வார், “பகவான் முன் நிற்கக் கிடைப்பதே சொற்ப நேரந்தான். அந்த நேரத்திலும் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திக்காதீர்கள். இரண்டு கண்களையும் விரியத் திறந்துவைத்து, முதலில் அவன் அழகை ஆசை தீரப் பருகுங்கள்” என்று.
ஆனால், திருப்பாணர், தன் பாசுரங்களை ஆனந்தித்துக் கேட்டுக்கொண்டிருந்த அரங்கனை உணர்ந்துகொண்டார். உய்யும் வழியைக் கேட்க இதுவே தருணம். பத்தாம் பாசுரத்தில் கராறாகப் போட்டாரே ஒரு போடு,
“கொண்டல் வண்ணனைக் கோவல னாய் வெண்ணெய் உண்ட வாயன் என் னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள் மற் றொன்றினைக் காணாவே”
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே”. நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை. அவைகள் எனக்குத் தேவையில்லை என்று தீர்மானமாகச் சொல்ல, தீர்த்தன் திடுக்கிட்டான்.
இதற்காகவா லோக சாரங்கரை அவர் தோள்மேல் பாணரைச் சுமந்துவரச் சொன்னோம் ? இனி எனக்குக் கண்களே தேவையில்லை என்று சொன்னவரை அந்தகனாய் வெளியே அனுப்பவா ? அது தனக்குத் தகுமா ? பக்கத்தில் இருந்து பாணருக்காய்ப் பரிந்துரைத்த பத்மாவதிக்கு என்ன பதில் சொல்வது ?
இன்னும் தன்னருகே வருமாறு பாணரை அழைத்த எம்பெருமான், அவரைத் திருப்பாணாழ்வாராக்கித் தன்னோடே சோதியில் இணைத்துக்கொண்டான்.