Home ஆன்மிகம் விதிமுறைகளும் விலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

விதிமுறைகளும் விலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

abinavavidhyadhirthar-3

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. இவர்களுக்கு ருமன்வா சுஷேனா வாசு விச்வவாசு மற்றும் பரசுராமர் ஐந்து புதல்வர்கள் இருந்தார்கள்.

ஒருசமயம் இவர்கள் ஐவரும் காய்கறிகளை பறித்து வருவதற்காக காட்டிற்குச் சென்றார்கள். அப்பொழுது ஆச்சார அனுஷ்டானங்களை நன்கு கடைப்பிடித்து வந்த ரேணுகா, குளிப்பதற்கு சென்றாள். அவள் குளித்து விட்டு வரும் பொழுது தூரத்தில் மார்திகாவத் நாட்டு அரசனான சித்ரரதன் தனது ராணியுடன் உல்லாசமாக விளையாடிக் கொண்டிருந்ததை தற்செயலாகப் பார்த்தாள். அப்பொழுது அவளுக்கு அவனிடத்தில் எல்லை கடந்த காம உணர்ச்சி ஏற்பட்டது. உடனே அவள் மயங்கி கீழே விழுந்தாள்.

நினைவு திரும்பியதும் பதட்டத்துடன் எழுந்து அவள் ஆசிரமத்தை நோக்கி சென்றாள். அவள் முகத்தில் ஆன்ம ஒளி குன்றி இருப்பதைப் பார்த்த முனிவர் ஒழுக்கமற்ற எண்ணங்களுக்கு அவள் மனதில் இடம் கொடுத்திருக்கிறாள் என்று ஊகித்துக் கொண்டார்.

கோபமடைந்த முனிவர் கடும் சொற்களால் நிந்தித்தார். அத்தருணத்தில் ருமன்வாவும் சுஷேனாவும் வாசுவும் விசுவவாசுவும் காட்டில் இருந்து திரும்பி வந்தனர். ஜமதக்னி முனிவர் தமது புதல்வர்களை ஒவ்வொருவராக அழைத்து தாயை வெட்டி வீழ்த்துமாறு ஆணையிட்டார் ஆனால் அவர்கள் திகைத்துப் போய் செய்வதறியாது மௌனமாக நின்றார்கள். கோபத்தில் முனிவர் அவர்களை சபித்தார். அவர்கள் தங்கள் நினைவாற்றலை இழந்து மிருகங்களுக்கு ஒப்பாக ஆனார்கள்.

சிறிது நேரம் கழித்து பரசுராமர் திரும்பி வந்தார். ஜமதக்னி அவரைப் பார்த்து பாவியான உனது தாயை கொல். துக்கத்திற்கு இடம் கொடுக்காதே என கட்டளையிட்டார். பரசுராமர் உடனே கோடாரியை எடுத்து தன் தாயின் தலையை இரண்டாகப் பிளந்தார். ஜமதக்னியின் கோபம் மறைந்ததும் தனது மகனின் மேல் உள்ள அன்பினால் என் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு எவரும் செய்யாத கடினமான காரியத்தைச் செய்தாய் உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் என்று சொன்னார்.

பரசுராமர் தந்தையே என் தாயை உயிர்ப்பித்துக் கொடுங்கள். இறந்துபோனதை பற்றிய ஞாபகம் அவளுக்கு இல்லாமல் போகட்டும். மேலும் மனதால் செய்த பாவத்தில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும். தயவு செய்து எனது சகோதரர்களும் முன்பு போல மாற்றி விடுங்கள். என்று வேண்டுகோள் வைத்தார். எனக்கு நீண்ட ஆயுளையும் போரில் எவரும் என்னை வெல்ல முடியாத அளவுக்கு ஆற்றலையும் கொடுங்கள் என்று கேட்டார். முனிவர் தம்மிடமிருந்த தவ வலிமையால் தமது மகனின் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.

தாயை ஒருவன் பெரிதும் மதித்து அவர் சொற்படி நடக்க வேண்டும். அவருக்கு கஷ்டம் கொடுக்க மனதாலும் நினைக்கக் கூடாது. இப்படி இருக்க பரசுராமர் தனது தாயை வெட்டிக்கொன்றார். மீண்டும் அவளுக்கு உயிர் கொடுத்து அவளை வாழவைக்கும் முடியும் என்பதை பரசுராமர் அறிந்திருந்தார். தனது தந்தையின் சொற்படி நடக்கவில்லை எனில் அவர் கோபத்தில் தன்னையும் சபித்து விடுவார் என்றும் அதனால் தான் புத்தியை இழந்த மிருகத்தை போல் ஆக வேண்டியிருக்கும் என்பதையும் அறிந்திருந்தார். தனது தந்தையின் கோபத்திற்கு முக்கிய காரணமான தாயை சபித்தே ஜமதக்கினி கொண்டு விடுவார் என்றும் பரசுராமர் உகித்தார். தந்தையின் சொற்படி நடந்து கொண்டதால் தாயையும் சகோதரர்களையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. இதற்காக அவர் மற்றவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியத்தை செய்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »