ஏரியைக் காத்த சகோதரர்கள்!

Published:

ramar - 2026

செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரி, சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களின் விவசாய நிலத்திற்கான பாசனத்திற்கு மட்டுமல்லாமல், குடி நீராகவும் பயன்பட்டு வந்தது.

மழை நீரை தேக்கிவைக்கும் இந்த ஏரியில், பெருமழை பெய்யும் சமயங்களில் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்படுவது வழக்கம்.

ஒரு முறை தொடர்ச்சியான மழை காரணமாக ஏரி விரைவாக நிரம்பியது. அதிகப்படியான நீர் நிரம்பிய காரணத்தால் இன்னும் சில தினங்களில் கரைகள் உடைய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது.

அவ்வாறு கரை உடைந்தால் வெள்ள நீர் ஊருக்குள் வருவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் நிலவியது. அப்போதைய கலெக்டர் என்ற நிலையில் லியோனல் பிளேஸ் ஏரியின் கரையை பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டி அந்த பகுதிக்கு வருகை புரிந்தார்.

அப்போது அங்குள்ள ஏரி காத்த ராமர் கோவிலுக்கும் வந்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிதிலமுற்றிருந்த தாயார் சன்னிதியை திருப்பணி செய்து தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

அதற்கு பதிலாக அவர், ‘உங்கள் தெய்வத்தின் அருளால் இந்த மழையின் காரணமாக ஏரி உடையாமல் இருக்கட்டும். அப்படி நடந்தால், நான் திருப்பணியை செய்து தருகிறேன்..’ என்று அவர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த ஓரிரு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகமாகிவிட்டது. அந்த சமயத்தில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் மழை அதி தீவிரமாக பெய்யும் நிலையில், நிச்சயம் ஏரியின் கரை உடைந்து விடும் என்று நினைத்த அவர், நிலைமையை நேரில் சென்று பார்த்து, மேலதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று, தனி ஆளாகவே கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கி துணிச்சலுடன் சென்றார்.

பெய்யும் இந்த கனமழைக்கு நிச்சயம் ஏரியின் கரைஉடைந்து இருக்கும் என்று நினைத்த அவர், மெல்ல சிரமப்பட்டு கரையின் மீது ஒரு புறமாக ஏறி நின்று பார்த்தார்.

வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது. கையில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் தோன்றியது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

அந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது கண்களில் அந்த காட்சி தெரிந்தது. அங்குள்ள ஏரியின் கரை மீது உயரமான இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் அழகாக தென்பட்டது.

இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில கணங்கள் மட்டுமே அந்தக் காட்சியை கண்டார். அடுத்த சில நொடிகளில் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவரது மனதில் ஆச்சரியமும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில் தனது இல்லத்துக்கு திரும்பி விட்டார்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் அவ்வளவாக தென்படாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது, ஏரிக்கு சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்கு ஆச்சரியத்துடன் சொன்னார்.

அவர் சொன்னபடி ஜனகவல்லி தாயாருக்கு சன்னிதியை புதிதாக அமைத்து கொடுத்ததுடன், பல திருப்பணிகளையும் அந்த ஆலயத்திற்கு செய்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இவ்வாறு நடந்த சம்பவம் அந்த ஆலய கல்வெட்டிலும் பதிவு செய்து வைக்கப்பட்டது. ‘இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனல் பிளேஸ் துரை அவர்களது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டை இன்றும் பார்க்க முடியும். மேற்கண்ட சம்பவத்தினால் மதுராந்தகம் ராமர்
‘ஏரி காத்த ராமர்’ என்று அழைக்கப்படுகிறார்.

Related articles

Recent articles

spot_img