
காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற தம்பதியர், குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் …
அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது ,திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !
திடுக்கிட்டு கண் விழித்த அவர் தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம்
திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு
பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க
அப்போது அசரீரியாய் ஒரு குரல் !
” அந்த மணியை யாரும் தேட வேண்டாம் புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் துப்புல் அனந்தசூரி – தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும்
அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் !
பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர்.

ஏழாம் அகவையில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப்பட்டதோடு, கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் அகவையில் திருமங்கை (கனகவள்ளி என்றும் அழைக்கப்படும்) எனும் நங்கையை மணம்புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் அகவையில் வைணவ குரு எனும் நிலையை அடைந்தார். பின்னர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி திருவஹீந்தரபுரம் (கடலூருக்கு அருகில்) சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி, மேல்கோட்டை, காஞ்சிபுரம், அயோத்தியா, பிருந்தாவனம், பத்ரிநாத், திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருடங்கள் வாழ்ந்தார்.
வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர். உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரே.

மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர். திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பெற்றுவருகிறது.
திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,’ மணியான குழந்தையாக ‘ அவதரித்ததால் , மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை, திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை.



