Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கொதிக்கும் தட்டு..! தவறுக்கான பிராயச்சித்தம்!

கொதிக்கும் தட்டு..! தவறுக்கான பிராயச்சித்தம்!

To Read in Indian languages…

pandu
pandu

முன்னொரு காலத்தில் குலசேகரர் என்பவர் ஒரிசாவை ஆண்டு வந்தார். அவர் ஒரு பராக்ரமசாலி, நிர்வாகத்தில் கடுமையாக இருந்தவர், அவரது தேக காந்தி சூரியனைப் போல ஜொலித்தது; இதயமோ கடல்போல் ஆழமாய் இருந்தது. கேட்டது தரும் கற்பகவிருட்சம் போல அவர் தயாள குணம் கொண்டவர்;

கல்வி அறிவில் பிருஹஸ்பதிக்கு நிகராக விளங்கினார். பூமித்தாய் போல அவ்வளவு பொறுமைசாலியாய் இருந்தார். அழகில் மன்மதனுக்கு நிகராக இருந்தார். நற்சிந்தனையும் நன்னடத்தையும் கொண்டிருந்தார்.

அவருடைய செல்வமோ குபேரனுடையதைப் போன்றிருந்தது. அவர் தன் பிரஜைகளை தன் சொந்த பிள்ளைகளைப் போல பாதுகாத்தார். அவர் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் அடிபணிந்து நடப்பவர்.

அதுமட்டுமின்றி ராஜா குலசேகரர் பக்தியுடன் அவர் தன் ஆன்மிக குரு மற்று தூய பக்தர்களின் தாமரைத் திருவடிகளுக்கு சேவை செய்தும் சதா காலமும் மிகவும் அடக்கமான முறையில் ஹரி கதையை கேட்டும் வாழ்ந்து வந்தார்..

ஒரு நாள் ராஜா குலசேகரர், மந்திரிகளும் போர்வீரர்களும் புடைசூழ சிம்மாசனத்தில் கொலுவீற்றிருந்தார். அவரை சுற்றி பல சாதுக்களும், சந்யாசிகளும் கூடியிருந்தார்கள். இவர்கள் வர்ணிக்கும் ஹரிகதையை அரசர் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் அரசரின் ஆன்மீக குரு ராஜ சபைக்கு வந்தார் . உடனடியாக ராஜா குலசேகரர் தன் ஆசனத்தை விட்டெழுந்து குருநாதரை வரவேற்று தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவர் அமர்வதற்கு நல்ல ஆசனத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அவருடைய பாதத்தை கழுவி அந்த தீர்தத்தை சிறுது பருகி தனது சிரசில் தெளித்து பின்னர் குரு பூஜையும் செய்தார். அதன்பின் குரு கட்டளையிட, மன்னரும் அமர்ந்து, ஹரி கதையை தொடர்ந்து கேட்கலானார்.

அரசர் ஹரி கதையை கேட்டு கொண்டு இருக்கும் சமயத்தில் ஓர் ஈ அவரது நெற்றியில் உட்காந்து தொந்தரவு செய்தது. உடனை அவர் அந்த ஈயை கைகளால் தட்டிவிட்டார்.

அரசர் சற்று முன்பு குருவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய போது நெற்றியில் ஒட்டிக் கொண்டிருந்த தரை மண்ணும் அரசர் ஈயை விரட்டும் போது கீழே விழுந்தது. இதைப் பார்த்தவுடன் குரு மிகவும் வருந்தி தனது தலையை தாழ்த்திக் கொண்டார். அரசரோ கூர்ந்து கவனிப்பவர்; தன் குரு வின் இச்செயலைக் கவனித்து. அவரது விசனத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தார்.

குரு பதில் அளித்தார்: “ஒருவர் குருவின் காலடியில் விழுந்து வணங்கும்போது அவர் உடலில் எத்தனை மண் ஒட்டி இருக்கிறதோ அத்தனை பிறவிகளில் அவர்கள் செய்த பாவங்களிலிருந்து நிவாரணம் பெறுகிறனர்.

ஆனால் நீங்களோ ஈயை விரட்ட நெற்றியைத் தொட்டதில் அதில் ஒட்டியிருந்த மண் துகள்கள் தரையில் விழுந்ததால் நான் வருந்தினேன். ஏனென்றால் பல பிறவிகளில் புரிந்திருந்த பாவங்களிலிருந்து விமோசனம் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.”

குருவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசர் அதிர்சியில் மயங்கி விழுந்தார். அவருக்கு பிரக்ஞை திரும்பியதும் தனது ஆன்மீக குரு அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதைக் கண்டார்.

அரசர் அவையில் கூடியிருந்த ஆன்றோர்களிடம், “நான் என் குருவின் தாமரைத் திருவடியில் பெரும் அபசாரம் இழைத்துவிட்டேன். தயவு செய்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்த்து, இந்த அபசாரத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதைத் தெரியப்படுத்தவும். இல்லாவிடில், நான் உயிர் துறப்பேன் என்றார்

” இந்த அபசாரத்திலிருந்து விடுபட மிகவும் கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும் அதனால் பிராமணர்கள் அரசரிடம் அதைச் சொல்வதற்கு தயங்கினர் .

அரசர் அவர்களைக் வற்புறுத்தி கேட்டார்: “நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதை தயைகூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன். எவ்வளவு கடினமானதானாலும், நான் அதைச் செய்து பாவத்திலிருந்து விடுபடவேண்டும். சூரிய பகவானை சாட்சியாகக் கொண்டு நான் இந்தப் பரிகாரத்தைச் செய்ய உறுதி பூணுகிறேன். தயவுசெய்து அது என்னவென்று கூறவும்? என கேட்டார்.

“ஸாதுக்களும், பிராமணர்களும், கூறினாரகள். ” ஒருவன் தன் குருவின் முன் தரையில் வீழ்ந்து வணங்கிய போது உடலில் ஒட்டி கொண்ட மண் துகள்கள் எவ்வளவு உண்டோ அத்தனை பிறவிகளில் செய்த பாவங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுகிறார்” என்று விவரித்தார்கள். ஆனால் ஒருவர் மூடத்தனமாக இந்த பாத மண் துகள்களை செருக்கு காரணமாக அகற்றினால், அவர் ‘ஸுக்ருதி’ எனப்படும் எல்லா நற்பலன்களையும் இழக்கிறார்.

இந்த மாதிரி குரு துரோகத்திலிருந்து விடுபட அவர் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்ய வேண்டும்: 12 அடி நீளம், 3 அடி அகலம் 6 அங்குல கனம் கொண்ட தாமிர தாம்பாளம் ஒன்றைச் செய்து அதன் கீழே தணல் இடவேண்டும்.

அப்படி பழுக்கக் காச்சிய தாம்பாளத்தின் மேல் 108 தடவை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யவேண்டும். இதன் பிறகே குரு அபசாரம் நீங்கும். என்பது சாத்திரங்களின் தீர்ப்பு என்றனர்.

இதை கேட்ட மன்னர் மிகவும் மகிழ்சியுடன் உடனடியாக தட்டானை வரச் சொன்னார். அவருடைய ஆணையின் படி ஒரு தாமிரத் தாம்பாளம் சாத்திரங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது. பிறகு அது நான்கு கால்களைக் கொண்ட ஒரு அடுப்பின் மீது ஏற்றப்பட்டு, அடியில் தீயூட்டப்பட்டது. தாம்பாளம் தியாய்ச் சிவக்க, அதன் வெப்பம் எல்லோரையும் தகித்தது.

அரசர் புனித நீராடி , உடலில் திலகம் தரித்து, கழுத்தில் துளசி மாலையை அணிந்து, எளிமையான தூய வெள்ளாடையை தரித்து , சில நிர்மால்ய தானியங்களை (பிரபு ஜெகந்நாதரின் உலர்ந்த அரிசி பிரசாதம்) உட்கொண்டார்.

தாம்பாளம் கொதிக்கும் இடத்திற்குத் வந்தார். இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரமாயிரம் மக்கள் கூடினார்கள். பல மந்திரிகள், படைவீரர்கள், அரசரின் உறவினர்கள் மற்றும் சந்நியாசிகளும், சாதுக்களும் கூடியிருந்தனர்.

எங்கே கொதிக்கும் தாம்பாளத்தின் அருகில் அரசர் சென்று உயிர்பலியாகிவிடுவாரோ என்று எல்லோரும் அஞ்சினார்கள்.

தாம்பாளத்தின் அருகில் செல்ல வேண்டாமென அவர்கள் அரசரைக் கெஞ்சினார்கள்: “நீங்கள் சரீரத்தை விட்டால், எங்களைக் யார் காப்பாற்றுவார்கள்? நீங்கள் இறந்தால் எங்களுக்கு எஜமானர் இல்லாமல் போய்விடும்.தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என்று அழுது புலம்பினார்கள்.

அரசர் பதிலளித்தார்: “யார் உண்மையான எஜமானர்? பகவான் ஜெகந்நாதரே எல்லோருக்கும் எஜமானர். என் மரணத்தைக் குறித்து விசனப்படாதீர்கள். பிறந்தவர் ஒரு நாள் இறந்தேயாக வேண்டும். நான் இறப்பிற்கு பயப்படவில்லை. குருவிற்கு இழைத்த அபசாரத்திற்காக யமராஜனால் தண்டிக்கப்படுவதை விட நான் இறப்பதே மேல் .

பகவான் சக்ரதாரி சகலமும் அறிந்தவர். எனக்கு எது சிறந்ததோ அதையே அவர் செய்வார். ஆனாலும் நான் என் கடமையைச் செய்யவேண்டும். தயவு செய்து நீங்கள் எல்லோரும் புனித ஹரி நாமத்தை உச்சரியுங்கள். அது எனக்கு உதவும்.”என்றார்.

இவ்வாறு கூறிய பிறகு அரசர் நீலாத்ரிபிஹாரியான பிரபு ஜெகந்நாதரை தியானிக்கத் தொடங்கினார். “கைகளில் சங்கு, சக்ரம் ஏந்தியுள்ள பகவானுக்கு சர்வ மங்களம். கமலாவுக்கு சர்வ மங்களம். அவள் அருளாலே பிரம்மா, இந்திரன், முதலான தேவர்கள் இந்த பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

சூரியன், சந்திரன், திக்குகள், பர்வதங்கள், பிருத்வி, சமுத்ரம், ஆகியோரெல்லாம் எம்பெருமானின் நித்ய ஊழியர்கள். சிவபெருமான், இந்திரன், யட்சர்கள், ராட்சசர்கள், சித்தர்கள் யோகீந்திரர்கள், முனிகள் முதலானோர் பகவான் ஹரியின் தாமரைத் திருவடியை தியானிக்கிறார்கள்.

நானோ சாதாரண மனிதன் என்னால் எப்படி அவருடைய மகிமையை புரிந்து கொள்ள இயலும்? ஓ பிரபோ, நீங்கள் வேர், சிருஷ்டியில் அனைத்தும் உங்களுடைய கிளைகளும் இலைகளுமாகும். அச்சம் போக்கும் தங்கள் திருவடியில் நான் தஞ்சமடைகிறேன்.

தாங்கள் கேட்ட வரமளிக்கும் வாஞ்சாகல்ப-தரு. தங்கள் மகிமைக்கு எல்லையில்லை. தாங்கள் லோகாயத கவலைகள் என்ற காட்டைப் பொசுக்கும் பெரும் தீ . தாங்கள் அபாயக் கடலிலிருந்து காப்பாற்றும், அகஸ்திய முனி போன்றவர்.

தங்கள் தாமரைத் திருவடி ஜட இருப்பு என்ற விஷத்தை அருந்தி தள்ளாடும் எவரையும் விடுவிக்கக் கூடியவை. தாமரை போன்ற பக்தர்களை பராமரிக்கும் சந்திரன் போன்றவர் தாங்கள்.

எந்த நேரமும் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் சிந்தாமணி போன்றவர். இந்த பிரம்மாண்டம் தங்களுடைய சக்தியாலேயே செயலாற்றப்படுகிறது. இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றக் கூடியவர் என்று தங்களைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது.

ஓ பிரபோ, இந்த பெருந் தீயிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். நான் இந்த தீயில் இறங்குவதென்று கடைசியாக முடிவு செய்துவிட்டேன். நான் பிழைப்பதும் சாவதும் தங்கள் சித்தம். எப்படியிருந்தாலும், என் குருவிற்கு இழைத்த அபசாரத்திலிருந்து நான் விடுபட்டேயாக வேண்டும்.” இவ்வாறு பிரார்த்தித்த பிறகு, ராஜா குலசேகரர் பகவானின் புனித நாமங்களை உச்சரிக்கத் தொடங்கினார்:

ஸ்ரீ ராமா, ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீ ஹரி, முகுந்தா, மாதவா, முராரி, அச்யுதா, அனந்தா, கோவிந்தா, சியாமசுந்தரா, சதானந்தா. விரஜ சுந்தரா, வம்ஸிபாணி , ராதா வல்லபா, ப்ரண மானி. தயா-சாகரா, தாசரதி, ஸ்ரீதரா, ஸ்ரீகரா, ஸ்ரீபதி. லட்சுமிநாயகா, சக்ரபாணி, சீதா-வல்லபா, ரகுமணி. ஓ வனமாலி, கோபிஜனவல்லபா. ஸ்ரீவஸ்சதாரி, கேசவா, தீன-பந்து, வாசுதேவா. பவமோக்ஷ்னா, ஜெகத் ஜீவன், ஜனார்தனா.

பிரபு ஹரியின் புனித நாமங்களை உச்சரித்துக் கொண்டும், செவிவழி கேட்ட ஹரி கதை காதில் ஒலிப்பதைக் கேட்டுக் கொண்டும், பிரபுவின் தாமரைத் திருவடியில் மனதை சரணடையச் செய்தும், ராஜா குலசேகரர் சந்தோஷத்துடன் தகிக்கும் தாமிரத் தட்டில் சூரிய சந்திர நமஸ்காரங்களை முடித்த பிறகு ஏறினார்.

தட்டின் வெப்பத்தில் ஈர மரம் கூட பஸ்பமாகிவிடும். ஆயினும் எவ்வித அச்சமுமின்றி, அரசர் தாம்பளத்தின் மேல் நமஸ்காரம் செய்தார். அரசரின் உடல் எரிய ஆரம்பித்தது. ஆயினும் அரசர் அஞ்சவில்லை. பகவான் ஜெகந்நாதரை நினைத்துக் கொண்டே, அவர் கொதிக்கும் தாம்பாளத்தின் மேல் நமஸ்கரித்தார்.

எல்லாவற்றுக்கும் காரணமான பகவான் ஜெகந்நாதர், தனது பக்தனின் சரணடைந்த நிலையை அறிந்தவராகி, அவர் மேல் கருணை காட்டினார். உடனடியாக தகிக்கும் தாம்பாளம் பகவானின் கருணையால் குளிர்ந்த நீர்போல் மாறிற்று. எரியும் அரசரின் உடல் தணிந்து, உடனடியாக குளிர்ந்தது.

இதற்கிடையில், அங்கே கூடியிருந்த மக்கள் பெருந்துயரத்தில் கதறினார்கள். அவர்கள் தங்கள் தலையை கைகளால் அடித்துக் கொண்டு புலம்பினார்கள்: “ராஜாவே, நாங்கள் துர்பாக்கியசாலிகள். நீங்கள் எங்களை விட்டுப் போய்விடுவீர்கள். எங்களை யார் பராமரிப்பார்கள் ?” எல்லோரும் இப்படிக் கதறும்போது, அரசர் தாமிரத் தாம்பாளத்திலிருந்து எழுந்தார்.

இன்னொரு சூரியன் போல அரசர் பிரகாசித்தார். மறுபடியும் அவர் தாமிரத் தாம்பாளத்தில் நமஸ்காரம் செய்தார். சலனமோ, பதட்டமோ இல்லாமல் குளிர்ந்த ஆற்று நீரில் அன்னம் ஒன்று விளையாடித் திரிவது போல அவர் இருந்தார். அவரைச் சுற்றி கூடியிருந்தவர்கள் இதைக் கண்டு வியப்படைந்தார்கள்.

கொதிக்கும் தாம்பாளத்தில் அரசர் 36 தடவை நமஸ்காரம் செய்து கொண்டிருக்கும் போது , பகவான் அவர் முன் சங்கு, சக்ர, கதை, பத்மம் ஏந்திய சதுர்புஜ கோலத்தில் காட்சி தந்தார்.

பகவான் அரசருக்கு ஆசி வழங்கி அச்சத்தைப் போக்கினார். பிறகு அவ்விடத்திலிருந்து மறைந்தார். பகவானின் மாயா சக்தியினால் சுற்றியிருந்தவர்களால் இக்காட்சியைக் காணமுடியவில்லை. பகவான் தோன்றியதையோ, அரசருக்கு அருளாசி வழங்கியதையோ அவர்களால் பார்க்க முடியவில்லை.

பகவானைத் தரிசிப்பதற்கு அரசர் கொடுத்து வைத்திருந்தார். எல்லோரும் அரசரை புகழ்ந்துரைத்து, வீடு திரும்பினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 10 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,767FollowersFollow
17,300SubscribersSubscribe