தமிழ் கடவுள் முருகன், குன்று இருக்கும் இடத்திலெல்லாம் இருப்பார் என்பது ஐதீகம்! மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது.
அந்தக் கோயிலைப் போலவே திருச்சி – துறையூரிலும் பத்துமலை முருகனாய் அழகுறக் காட்சி தந்துக் கொண்டிருக்கிறான்.
திருச்சி நகரிலிருந்து துறையூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது கூலிப்பட்டி முருகன் கோயில்.
ஒரு சிறிய மலையின் மீது அமைந்திருக்கும் துறையூர் முருகன் கோவில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இந்த கோவில் 600 வருடங்களுக்கு முன்பு சுயம்பாக உருவானதாம். பத்து வருடங்களுக்கு முன் வலம்புரி விநாயகர், ஐயப்பன், சனிஸ்வரர் போன்ற பரிவார தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர்!
முருக பெருமான் ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் எழுந்தருளியுளார். இரண்டு பக்கமும் சூரியனும் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி உள்ளனர். சக்தி சூரியன் என்ற பெயரில் சூரியனும், பக்தி சண்டிகேஸ்வர் என்ற பெயரில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையைச் சுற்றிலும் முருகனின் அறுபடை தலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வலம்புரி விநாயகர், சுவாமி ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை, பரமேஸ்வரன் மற்றும் -பரமேஸ்வரியை தரிசிக்கலாம். சனி பகவான் கையில் ருத்திராட்சம் ஏந்தி சாந்த ஸ்வருபமாக காட்சி தருகிறார்.
தைப்பூசத்தன்றும் தை மாத செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் ஆறுகால பூஜை மற்றும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். சைவ கடவுளான முருகப் பெருமானுக்கு சிறப்பு விரத தினமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
அன்று கோயிலின் அருகில் உள்ள மூங்கில் தெப்பகுளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு பூஜையும் அபிஷேகமும் செய்யப்படுகிறது. அந்த நாளில், இந்தக் கோயிலில் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
பங்குனி உத்திரத்தன்று மயில் காவடி எடுத்து வருவது விசேஷம். பங்குனி உத்திரத்தன்று ஊர் மக்கள் தண்ணீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கந்த சஷ்டி அன்று பாலபிஷேகம் செய்யப்படும் பாலில் கற்கண்டு, குங்குமப் பூ சேர்த்து காய்ச்சி கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடுகிறது.
சூரசம்ஹார விழாவில் முருகபெருமான் பராசக்தி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அப்பொழுது மூலவர் முருக பெருமானின் மேனியில் வியர்வைத் துளிகள் உண்டாகும் என்று சொல்லி சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!
மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை போல இந்த கோவிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்துடன் கூடிய 52 அடி உயரமுள்ள முருகன் சிலை வடிவமைத்து உள்ளனர்.
இந்த சிலை மலை மேல் அமைக்கப்பட்டதால் 32 அடி உயரத்தில் சிலையும், 22 அடி உயரத்தில் பீடமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு உள்ள அறுபடையப்பன் குழுவினர் முருக பெருமான் மேல் அதீத பக்தி கொண்டு உள்ளனர்.
அவர்கள் ஒரு முறை மலேசியா சுற்றுலா சென்று வந்தபோது, அங்கே இருந்த முருகன் சிலையைக் கண்டு ஈர்க்கப்பட்டதாம்! அதேபோல் நம்மூரிலும் ஒரு சிலை அமைக்க வேண்டும் என முடிவு எடுத்து ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு சார்பில், மலேசிய பத்துமலை முருகன் போன்ற வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது.