நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயிலில் தைப் பூச விழா கடந்த 22 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், மண்டகபடிதாரர்கள் சார்பில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. விநாயகர், முருகன் , சுவாமி தேர்களும் அதனைத் தொடர்ந்து அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முக்கிய நான்கு ரத வீதிகளின் வழியாக வந்த தேரோட்டத்தில் செங்கோட்டை, மேலூர், பிரானூர் பார்டர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



