
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத பூக்குழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பைபாஸ் ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரியமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை தினத்தன்று பூக்குழித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு 21.03.2021 அன்று நடைபெறுகிறது.
இத்திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. முன்னதாக காலை கொடிப்பட்டம் ரத வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோவில் பூசாரி சுந்தர் கொடியேற்றினார். தொடர்ந்து பெரிய மாரியம்மன் க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்றிலிருந்து 11 நாட்கள் தினமும் காலை பெரிய மாரியம்மன் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா 21.03.2021 அமாவாசை அன்று நடைபெறுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து பூக்குழி இறங்கி அன்னையின் அருள் பெறுவர்.
ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வலம் வருதல், வேப்பிலை ஆடை அணிந்து அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்தி கடன் செய்வர். பூக்குழி திருவிழாவை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம், பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புது பொலிவுடன் காணப்படுகிறது.




