இன்று (மே.28, 2018) வைகாசி விசாகம்! தமிழ்க் கடவுளாம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நன்னாள். இந்தத் திருநாளில் திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது வழி வழியாய் வந்த நம்பிக்கை.
வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக’ மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்று ஆனதாம். இந்த மாத பௌர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்கிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்தார் என்பர்.
விசாகம் எனும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பு. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பர். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் அம்சமாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான். இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
‘வி’ என்றால் ‘பட்சி’ (மயில்), ‘சாகன்’ என்றால் ‘சஞ்சரிப்பவன்’ மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் ‘விசாகன்’ என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார்.
முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். இதன் மூலம் பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப் பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். இந்நாளில், முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் ஏற்று விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டினால், அடுத்த வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழும் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் காலம் காலமாகவே இருந்து வருகிறது. இது அனுபவ உண்மையும் கூட!
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் இருந்தால் வித்யாதானம் செய்த பலன் கிடைக்கும். எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
வைகாசி மாத அஷ்டமிக்கு ‘சதாசிவாஷ்டமி’ என்று பெயர். அன்று ரிஷபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.




