தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.
திருவாவடுதுறை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கை:
* வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான இறை உணர்வும் தழைத்திட உறுதுணையாய் இருப்பவை பண்டிகைகள் ஆகும். அம்முறையில் தீபாவளி பண்டிகை புத்துணர்வை பெருகச் செய்வதில் சிறப்பிடம் பெறுகிறது.
* தீபாவளியன்று அதிகாலை எழுந்து நீராடுதல் கங்கா ஸ்நானத்திற்குச் சமமாக மதிக்கப்படுகின்றது. எனவே, தீபாவளி நாளில் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு பெரியோரிடம் ஆசிபெற வேண்டும்.
* வாண வேடிக்கையில் ஈடுபடும்போது நம்முடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதிலும் அக்கறைகாட்ட வேண்டும்.
* சுற்றத்தார், நண்பர்களிடம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு நல்லுறவை தழைக்கச் செய்ய வேண்டும்.
* பண்டிகை காலங்கள் அப்போதைய மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல. அம்மகிழ்ச்சியில் இறை பக்தி உணர்வுடன் ஈடுபட்டால் நம் வாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தும். எதிர்கால ஏற்றங்களுக்கும் வழிபிறக்கும்.
* சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும் தீபாவளி நாளில் மனப்பூர்வமான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
* இந்த ஆர்வத்தை நாமும் வளர்த்து நம் தலைமுறையினரையும் வளர்க்குமாறு நெறிப்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பண்டிகையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்கள் சிறு வயதிலிருந்து இறைபக்தி உணர்வுடன் பண்டிகையை கொண்டாடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்குமாறு செய்ய வேண்டும்.
* மக்கள் யாவரும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்திட தீபாவளி பண்டிகையை நன்முறையில் பயன்படுத்த வேண்டும்.
* இந்த தீபாவளி திருநாளில் அனைவருக்கும் இன்பமும், அமைதியும், வளங்களும், இறை பக்தியும் தழைத்து சிறந்திட வேண்டும் என நமது ஆன்மார்த்த மூர்த்தியாக ஸ்ரீஞானமா நடராஜ பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்!