மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா
உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து
யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
முந்தைய பாசுரத்தில், வேறு புகல் இன்றி உன் திருவடி அடைந்தோம் என்று ஆய்ச்சியர் சொன்னது கேட்ட கண்ணன், பெண்களே இவ்வளவு வருத்தம் அடைந்தீர்களே. உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குவது அன்றோ என் கடமை. அதை நீங்கள் உணர்வீர்களே. என்னிடம் வந்து முறையிட்டும் நான் உடனே வந்து உங்கள் கண்ணீரைத் துடைக்காது போனேனே! இனி உங்கள் வேண்டுதலைக் கேட்கின்றேன். சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண்கள், எங்கள் விருப்பம் இப்படி ரகசியமாகச் சொல்லுவதற்கு உரியதன்று. பெரும் கோஷ்டியாக இருந்து கேட்டருள வேண்டும். அதற்காக அந்த சிங்காதனம் ஏறக் கிளம்பு என்று பிரார்த்தித்தனர் இந்தப் பாசுரத்தில்.
மழைக்காலம் ஆகையால் வெளியே சுற்றித் திரியாது, மலைக் குகைகளில் பேடையும் தானும் ஒன்றுதானோ என்ற எண்ணம் தோன்றும்படி சிங்கம் உறங்காமல் ஒட்டிக் கொண்டு நிற்கும். வீரியமும் சீர்மையும் வாய்ந்த அந்த சிங்கமானது, உணர்ந்து எழுந்து, நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை அகல விழித்துப் பார்க்கும். தங்கள் இனத்துக்கே உரிய மணம் நிறைந்த உளை மயிர்களைச் சிலுப்பிக் கொண்டு நாலாப் புறங்களிலும் புடைபெயர்ந்து அசைந்து, உடலை உதறி சோம்பல் முறித்து கர்ஜனை செய்யும். அப்படி கர்ஜனை செய்து கொண்டு வெளியே புறப்பட்டு வரும் வலிமையான சிங்கத்தைப் போலே, காயாம்பூ நிறத்தை உடைய கண்ணபிரானே… நீயும் உன் திருக்கோயிலில் இருந்தும் இந்த இடத்துக்கு வரும்படி வெளிவந்து, அழகும் சீர்மையும் மிக்க இந்த சிங்காசனத்தில் எழுந்தருள்வாய். நாங்கள் மனதிலே நினைத்து வந்த எங்கள் விருப்பம் குறித்து நீ எங்களிடம் விசாரித்து அறிந்து கொள்வாய். பின்னர், அது நிறைவேறும்படி எங்களுக்கு அருள வேண்டும் என வேண்டினர் ஆய்ச்சியர்.
சிங்கம் பேடையைக் கட்டிக் கொண்டு கிடந்துறங்கும்போது அறிவிழந்திருக்கும். கண்ணனும் அவ்வாறே அடியாருக்காக உதவ எண்ணும் முன்னர் அறிவற்ற பொருளாகவே எண்ணப்படுவானாம். அடியார் நினைவு வந்தபோது அவன் அறிவுற்று எழுவானாம். அறிவுற்றுத் தீவிழித்து எனும் பதத்தால் இதனை உணர்த்துகிறார் ஸ்ரீஆண்டாள்.
யாம் வந்த காரியம் இப்போதே சொல்லுதற்கு அன்று என்றனர். எங்கே முதலிலேயே சொல்லிவிட்டால் சர்வ சுதந்திரனாகிய கண்ணன் மறுத்துவிடுவானோ என்ற அச்சம். அதனால், சிற்றஞ்சிறுகாலே பாசுரம் வரை கொண்டுசென்று, தங்கள் விருப்பத்தை, வேண்டும் பறையைத் தெரிவிக்கின்றனர்.
விளக்கம் செங்கோட்டை ஸ்ரீராம்.