spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 1

Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 1

- Advertisement -

அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 1
????????????????????????????????????????????????

திருவரங்கத்தில் பகல் பத்து அத்யயன உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. திருநெடுந்தாண்டகத் திருநாள் என்று இதற்கு பெயர். பல தேசங்களிலிருந்து மக்கள் வெள்ளமென இங்கு குழுமியுள்ளனர். மண்டப, ப்ரகார கோபுரங்கள் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நம்மாழ்வார், கலியன், மற்ற ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் அரங்கன் புறப்பாட்டிற்காக தயாராகக் காத்திருக்கின்றனர். எங்கும் உற்சாக வெள்ளம்.

பெருமாளின் சன்னிதிக் கதவுகள் திறந்தவுடன் கஜ, ஸிம்ஹ கதியுடன் நம்பெருமாள் எழுந்தருளினார். ஆஹா, ஆஹா அடியவர் வெள்ளத்தினுடே ஒரு சோதி வெள்ளமென பெருமாளின் புறப்பாடு. நம்பெருமாளுக்கு நடையழகா? அல்லது நம்பெருமாளைச் சேர்ந்ததால் இந்த நடை தான் அழகு பெற்றதோ? என்பதாக எண்ணம் ஏற்படுகிறது.

இங்குள்ள அடியார்களுக்கு இவன் ஒருவனே கதிபுகலிடம். இவனுக்கோ பாதுகையே கதி. ஆம் ரங்கனின் நடையழகைத் தருவது அவன் தன் திருவடியில் துலங்கும் பாதுகைகள்தானே. அதனால்தான் ஸ்வாமி தேசிகன் அரங்கனுக்கும் கதி (நடை)யளிக்கும் பாதுகையே நமக்கும் கதி (புகலிடம்) என்று போற்றுகிறார்.

  ஆழ்வார்களும், ஆசார்ய ஸார்வபௌமர் ராமானுஜரும் ரங்கா, ரங்கா என மிழற்றி கண்ணீர் சிந்துகின்றனர். அவர்கள்தான் கண்ணநீர் கைகளால் இறைக்குமலர்களாயிற்றே. ராமானுஜரோ! பொன்னரங்கமென்னில் மயலே பெருக்குமவர். இப்படி ஒவ்வொருத்தர்க்குண்டான அனுபவத்துடன் உற்சாகத்துடன் நம்பெருமாளை எதிர் நின்று சேவித்தனர். பர்வதத்தின் குகையினின்றும் சிங்கம் புறப்பட்டது போன்று வெளிவந்த ரங்கன் கம்பீரமாக எதிர்நின்றான். அடியாரின் கூட்டம் ஆர்பரித்தது. அவன்தன் திவ்ய கடாட்சத்தால் எங்கள் மேல் சாபம் இழிந்தது என ஆனந்தித்தது.

  முதலில் நம்மாழ்வார், பின்னர் கலியன், அதன்பின் ராமானுஜர் அதற்குப்பின்னர் ஏனைய ஆழ்வார்கள் என அனைவரும் அணிவகுத்து நின்றனர். கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து நீண்ட அப்பெரிய கண்களால் அரங்கன் அனைவரையும் பார்த்தான். மந்தகாஸப் புன்னகையால் அவனது பார்வை அனைவரையும் மயக்கியது. அனைவரையும் முழுவதுமாக ஒரு பார்வை பார்த்தவன் எதையோ தேடினான். ஆழ்வார்கள் நடுவே, ஸ்தலத்தார் நடுவே, கைங்கர்ய பரர்கள் நடுவே என அவனது கண்கள் சுழன்று தேடியது. சிவந்த தாமரையில் கருவண்டு வட்டமிடுவது போன்று விரிந்த இமைகளுக்குள் கருவிழிகள் வட்டமிட்டன.

எதையோ தேடித்தேடி களைத்த அவனது கண்கள் தேடியது கிடைக்காத காரணத்தால் சோர்ந்து வாடி மெலிதாக மூடியது. “மறையும் சூரியனைக்கண்டு மலர்ந்த தாமரை இதழ் மூடுமே” அஃதே போன்று மறைமுடியின் பொருளான ரங்கனின் முகம் வாட்டமுற்றது.

உலகமே உற்சாகத்திலுள்ள பொழுதில் உவகையின்றி நாயகன் வாடுவது கண்டு நம்மாழ்வார் திகைத்தார். ஆழ்வார்கள் ஒருத்தர்க்கொருத்தர் பார்த்துக்கொண்டனர். எவருக்கும் எதுவும் புரியவில்லை. நம்மாழ்வாரின் கண்ணசைவைக் கண்ட கலியன் ராமானுஜருக்கு கட்டளையிட்டார். குறிப்பறிந்த ராமானுஜர் குணங்களின் வள்ளலின் அருகே சென்றார்.

“ஹே ரங்கநாதா! தங்களின் திருமுக மண்டலம் வாடியுள்ளதே! ஏனோ!” எனக்கேட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கத்யத்ரயத்தில் ராமானுஜருடன் பேசிய அரங்கன் தன் மவுனம் கலைத்து மனக்குமுறலை வெளியிட்டான். அரங்கனின் அந்தரங்கம் இப்போது அரங்கேறுகிறது.
——- அரங்கன் பேசுவான்.
(காத்திருங்கள்… தொடரும்)

  இப்படிக்கு,
ஶ்ரீAPN ஸ்வாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe