
சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தால், ரத்த தானம் கொடுத்த இளைஞர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தமக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியாமல் ரத்த தானம் செய்ததாகத் தெரிகிறது. மேற்படி நபரை, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் முறையாக பரிசோதிக்காத நிலையில், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றப் பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தத் தகவல் பரவிய நிலையில், தமது ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தை அறிந்து மனமுடைந்த அந்த இளைஞர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப் பட்டன. பின்னர், அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளை அந்த இளைஞரின் உடல் ஏற்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.