யாகம் செய்தால் பதவி கிடைக்குமா?
No Politics
வேதம் என்பது இரண்டு பெரும் பிரிவாக உள்ளது. ஒன்று, யாகம், யஜ்ஞம், தானம், தவம் முதலியன செய்வதைக் கூறுகிறது. மற்றொன்று, வேதாந்தம் – அதாவது உபநிஷத் பாகம் எனப்படுகிறது. இதில்தான், ஸ்ரீமந்நாராயணனை அடைவதாகிய மோட்சம் எனும் பெரும் பதவி கிடைக்கும் வழி கூறப்படுகிறது.
யாகம், யஜ்ஞம், தவம் முதலியவை, இங்குள்ள வாழ்க்கையின் பயன்களை அடைவதை விளக்குகிறது. அதாவது, இம்மைப் பலன்களான வீடு, வாகனம், செல்வம், புத்திர பாக்கியம், பட்டம், பதவி, புகழ், போகம், மழை, மனைவி, மக்கள் என எதையும் பெறலாம்.
உதாரணமாக, ஒருவருக்குக் குழந்தையில்லையென்றால், அவர் “புத்ர காமேஷ்டி” எனும் யாகம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். நாட்டில் துர்பிக்ஷம் நீங்கி சுபிக்ஷம் ஏற்பட வேண்டும் எண்றால் “காரீரீ” எனும் ஒரு யாகம் செய்ய வேண்டும். அதே போன்று, நிலையான செல்வம் வேண்டுமென்றால், வாயு தேவதையைக் குறித்த யாகத்தைச் செய்ய வேண்டும்.
இதுபோன்றே, வாஜபேயம், பௌண்டரீகம், அச்வமேதம், ராஜசூயம் போன்ற பலவிதமான யாகங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதில் பதவியளிக்கும் யாகம் அச்வமேதம் என்பதாகும்.
அதாவது பெரிய பதவியான இந்த்ர பதவியை ஒருவன் ஆசைப்பட்டால், அவன் செய்ய வேண்டியது, அச்வமேத யாகமாகும். ஒன்றல்ல, இரண்டல்ல நூறு அச்வமேத யாகம் செய்தால் நிச்சயம் இந்த்ர பதவி கிடைக்கும். நம்முடைய Accidental PrimeMinitster கட்டுரையில் நகுஷன் இந்த்ர பதவியைப் பெற்றமை காண்க.
“தேவேந்திரன்” எனும் பதவியைப் பெற ஒருவன் நூறு அச்வமேத யாகங்கள் செய்ய வேண்டும். சகரன் எனும் மாமன்னன், ப்ராசீன பர்ஹி: எனும் அரசன், நகுஷன், ப்ரஹ்லாதனின் பேரன் பலி சக்ரவர்த்தி முதலியவர்கள் நூறு யாகங்கள் செய்தவர்கள்.
ஒருவேளை இவர்கள் அந்த பதவியை விரும்பி யாகம் செய்யவில்லையானாலும், யாகத்தின் பலனாக பதவி, தானே, இவர்களைத் தேடி வரும்! அப்படியென்றால், தற்போதுள்ள இந்த்ரனின் நிலை என்னவாகும்?
வேறென்ன? பதவி நீக்கம்தான்!! புதியதாக ஒருவர் தகுதி பெற்றவராக இருந்தால், பழைய இந்த்ரன், தானாகவோ அல்லது வலிந்தோ பதவியிலிருந்து விலக வேண்டிவரும். இதனால் தேவேந்திரன் எப்போதும் விழிப்புடன் இருப்பான். எவராவது யாகம் செய்யவாரம்பித்தால், “எனது பதவிக்கு ஆபத்து” என பயந்து, எவ்வகையிலாவது அதைத் தடுக்க முயலுவான்.
அவ்வகையில்தான், சகரனின் யாகக் குதிரையைக் கவர்ந்து யாகத்தைத் தடுத்தான்; பலி சக்ரவர்த்தியைத் தடுக்க பகவானை வேண்டினான். (பலியின் கதை விளக்கம் பின்னர் பார்க்கலாம்). மேலும், தனது பதவி நீடிக்க, தான் நேரடியாக ஈடுபடாமல், தனது மனைவி இந்த்ராணியைக் கொண்டு கோயில், குளங்கள், காசி, ராமேச்வரம் முதலிய இடங்களில் பரிகார பூஜை செய்வது போன்று பூஜைகள் செய்தான். பதவிக்காகத்தானே எல்லாம்!! தன் பதவியைக் காத்துக் கொள்ள, மனைவி மூலமாகப் பூஜைகள் செய்தாலும், மற்றவர்களின் தெய்வீக நாட்டத்தில் குறுக்கிடுவதும், இடையூறு செய்வதும் இந்த்ரனின் மனோபாவம். யாகம் செய்தால் பதவி கிடைக்கும் என்பதையுணர்ந்துதான், தொடர்ந்து தடங்கல் செய்து வருவதையும் காணலாம்.
ஆனால், இதுபோன்ற யாகங்களை ஒரு சிறு தனி அறையில், கொசு, கரையான் ஒழிப்புப் போன்று, புகைபோட்டு செய்துவிட முடியாது. மிக ப்ரம்மாண்டமாகச் செய்ய வேண்டும்.
நிலையற்ற இந்த்ரன் முதலான பதவிகளைப் பெறுவதற்கு யாகங்களைச் செய்வதை விட்டு, நிலையான வைகுண்ட பதவியைப் பெற எம்பெருமானிடம் பக்தி செய்தாலேயே போதுமானது. இதனை நம் சுவாமி தேசிகன் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறார். நாம் அந்தப் பதவியைப் பெறுவதை, எவராலும் தடுக்கவோ விமர்சிக்கவோ இயலாதே!!
அன்புடன்
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி
Sri APN Swami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…