மறைமுக எதிர்ப்பு
(தை மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய இன்று(28-01-2019), ஸ்ரீமத் அபிநவதேசிக உத்தமூர் சுவாமியின் 123வது திருநக்ஷத்திர நன்னாளாகும்.)
எம்பெருமானின் திருக்கோயில்களில் ப்ரம்மோத்ஸவம் தொடங்கும் முன்னதாக “சேனை முதலியார் புறப்பாடு“ நடைபெறும். சேனை முதலியார் என்பவர் நாராயணனின் படைத்தளபதி. இவருக்கு “விஷ்வக்சேனர்“ என்பதும் ஒரு பெயர். ஒரு அரசன் நகர மக்களை சந்திக்கவோ, அல்லது முக்யமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ வரப்போகிறான் என்றால், அதற்கு முன்னதாக அந்த இடத்தை சோதனை – inspection செய்வது உண்டல்லவா!
உதாரணமாக, நம் தமிழக முதலமைச்சர் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு முன்னதாகக், காவலர் மற்றும் கறுப்புப் பூனைகள், நிகழ்வுதலம், அதற்குச் செல்லும் வழிகள், வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதனை செய்வார்களே! – அதே போன்று, பெருமானின் ப்ரம்மோத்சவத்திற்கு முன்பாக, எழுந்தருளும் வீதிகள், மண்டபங்கள் என அனைத்தையும் நகரசோதனை செய்கிறார், வைகுண்டத்தின் காவல் அதிகாரி சேனை முதலியார்.
பெருமாள் எழுந்தருளும் வீதி என்றால், குப்பைகூளம் இல்லாமலும், பள்ளம், தடுப்புகள் இல்லாமலும், எல்லோரும் நின்று சேவித்து அனுபவித்திடவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மண்டபங்களும் அலங்கரிக்கப்படுகின்றன. பெருமாள் எழுந்தருளும் வீதிக்கு “ராஜவீதி“ என்பது பெயர். அதாவது, ராஜாதிராஜனின் வழி என்று பொருள்.
அழகான தோரணங்கள், வாழை மரங்கள், சாணம் தெளித்து பெரிய கோலங்கள், மேற்கட்டு விதானங்கள் என்று அலங்காரம் செய்யவேண்டிய வீதியினை, குப்பைகளைக் கொட்டியும், பள்ளங்களைத் தோண்டியும், முட்களை பரப்பியும் அலங்கோலம் செய்து வைத்தால் அது ந்யாயமா? சாலையின் இருபுறமும் உள்ள நிழல்தரும் மரங்களை வெட்டி அதனை மொட்டையாக்கினால், கொடும் பாவமல்லவா? அதைவிட கொடுமை ஆக்ரமிப்புகள்!
‘சுவாமி! எந்த ஊரில் இந்த அநியாயம் நடக்கிறது?’ என்றால், இது, எல்லா ஊரிலும்தான் நடக்கிறது.
நேரிலும் இந்த அநியாயமுண்டு; மறைமுகமாகவும் வெகு கோலாகலமாக அரங்கேறுகிறது. ஆனால் மறைமுக எதிர்ப்பினை மறைநெறிகொண்டு அறவழியில் அழித்திடும் நம் ஆசார்யர்களை அறியலாம்.
அதாவது, சாலைகளை சீரமைப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு. அதில், சாமானியர்களான நாம் தலையிட முடியாது. “அறநிலையம்“ எனும் பெயரில், பல கோடி சொத்துக்கள், அபகரிப்பிலும், ஆக்ரமிப்பிலும் மறைந்து வருவது கண்கூடு. பல திருக்கோயில்களில் சாலைகள் சரியில்லாத காரணத்தால், பெரும் உற்சவங்கள் கூட தடைபட்டுப் போகின்றன. இதனை செப்பனிட, தொடர்ந்து மனுக்களை சமூக ஆர்வலர்கள் அளித்து வருகின்றனர்.
இதேபோன்று, மற்றொரு ஆக்ரமிப்பு வேதத்திலும் நடைபெறுகிறது. அதாவது, பெருமானின் அழகான சாலை, வேதம் என்று உணருங்கள். நாம் பெருமாளிடம் சென்று சேர்வதற்க்கும், பெருமான் நம்மிடம் வருவதற்கும், பயன்பாட்டிற்கான ஒரே சாலை வேதமாகும். இதைத்தான், “ஸ்ரீமத் வேதமார்க்கம்” – “வேதம் எனும் விரைவு நெடுஞ்சாலை” (Express Highway) என்கிறோம்.
இந்த சாலையை பயன்படுத்துவதன் மூலம் விரைவாகவும், சுகமாகவும், சுலபமாகவும் நமக்கும், எம்பெருமானுக்கும் சந்திப்பு நிகழ்கிறது.
ஆனால் ஒருசிலர், வேதத்திற்குப் பொருந்தாததும், அதன் நோக்கத்தை விபரீதமாகவும், மக்கள் மதிமயங்கும்படியாகவும், தத்துவத்தை விளக்குவதில் குழப்பத்தையும் விளைவிப்பதான அர்த்தங்களையெல்லாம், தங்களது மனம்போனபடி கற்பனை செய்து ப்ரசாரம் செய்கின்றனர். இதனால், வேதமார்க்கம் (வேத நெறி) பழுதடைந்து, பயன்பாட்டிற்கு ப்ரயோஜனமற்றதாகிவிட்டது. (வேதத்தின் உண்மைப் பொருள் உணரப்படாததால், மக்களுக்கு பரமாத்மாவைக் குறித்த தெளிவு உண்டாகவில்லை. இந்த வழியினால் அவனை அடையவும் இயலவில்லை.)
அதுதவிர, வேதமெனும் சாலையின் இருபுறமும் பூத்துக்குலுங்கும் நிழல்தரும், சுவையான கனிகள் தரும், மணம் வீசும் மலர்கள்தரும், இதிகாச, புராணங்களாகிய மரங்களையும் மொட்டையாக்கிவிட்டனர். வேதத்தை சீர்குலைத்தவர்கள் இதிகாச, புராணங்களையும் வெட்டி வீழ்த்துகின்றனர்.
இந்த சமயத்தில்தான், நமது ஆசார்யர்களான சம்ப்ரதாய ஆர்வலர்கள் (BOSS – Bachelor of Sampradaya Service) மனுக்களை தயார் செய்கின்றனர்.
முன்பு சொன்ன சம்ப்ரதாய ஆர்வலர்கள், கோரிக்கை மனுக்களை அரசாங்கத்திடம் அளித்து அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர். நம் சம்ப்ரதாய ஆர்வலர்களான ஆசார்யர்களோவெனில், மனுக்களைக் கொண்டு தாங்களே செயலில் இறங்குகின்றனர்.
“அதெப்படி?” என்றால், பாருங்கள்…
சம்ப்ரதாயத்தில், “மனு“ என்றால் “மந்த்ரம்“ என்பது பொருள். மந்த்ரம், த்வயம், சரம ச்லோகம் என்பவை மூன்று மனுக்கள். இந்த மந்த்ரங்களை ஜபம் செய்து சித்தி பெற்றவர்கள் நம் ஆசார்யர்கள்.
எவரையும் எதிர்பாராமல், தாங்களே நேரிடையாக களத்தில் இறங்கி வேதமார்க்கத்தை சுத்தம் செய்கின்றனர். கர்ம காண்டம், ஜ்ஞான காண்டம் எனும் இருவழிச்சாலைகளை மறுபடியும் புதுப்பொலிவு பெறச் செய்கின்றனர். அதுதவிர, மீண்டும் விஷமிகளால் சாலைக்கு சேதாரம் ஏற்படாமலிருக்க இருபுறமும் வேலிகளை அமைக்கின்றனர்.
அதாவது தங்களின் உபதேசங்களாகிய நூல்களால் இந்த வழிக்குப் பாதுகாப்பு அரணை உண்டாக்குகின்றனர். மேலும், பட்டுப்போன மொட்டை மரங்களை (இதிகாச, புராணங்களை) அதற்குரிய சிகித்சையை (treatment) செய்து மீண்டும் உயிர்ப்பிக்கின்றனர்.
இனி எதிர்வாதம் செய்பவர்களும், பொய்யுரைப்பவர்களும், குழப்பத்தை விளைவிப்பவர்களும், இந்த சாலைதனை சிதைக்க முடியாது; சாதுக்கள் சௌகர்யமாக இதில் ப்ரயாணம் செய்யலாம் என உறுதி அளிக்கின்றனர். இனி பகவானும், பாகவதர்களும், சந்தித்துக் கொள்வதில் ஒரு சிக்கலும் இல்லையே! எனவேதான். இவர்கள் ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாசார்யர்கள்.
இப்படி மறைமுக எதிர்ப்பாக (வேதத்தின் அர்த்தத்தை விபரீதமாக்கி) உள்ள வாதிகளை, மறைமுகம் கொண்டே (மறை – வேதம்; முகம் – வேதாந்தம் அல்லது மொழி, வேதமொழி கொண்டே) நேர்மறையாக (நேரிடையாக) வெல்பவர்கள் நம் மறைமுடி தேசிகர் (வேதாந்தாசாரியார்).
கர்ம ப்ரஹ்மாத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்தகான் |
வந்தே ஹஸ்திரிகிரீசஸ்ய வீதி சோதக கிங்கராந் ||
(ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்)
தை மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய இன்று(28-01-2019), ஸ்ரீமத் அபிநவதேசிக உத்தமூர் சுவாமியின் 123வது திருநக்ஷத்திர நன்னாளாகும். சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த அம்மகானின் தனியனிலும்(வாழ்த்துப் பாடலிலும்), வேத மார்க்கத்தை, அவர் பரிசோதனை செய்து நிலைநிறுத்துபவர் என்று உள்ளதை ரசித்திடுக.
அத்புதம் யஸ்ய விக்ராந்தம் வேதவீதீ விசோதநே |
அபரம் நிகமாந்தார்யம் ப்ரபத்யே வீரராகவம் ||
இதன் பொருளாவது, “வேதம் என்னும் வழியை சீர்படுத்துவதில் எவருடைய பராக்ரமம் அத்புதமானதோ, அத்தகைய மற்றொரு வேதாந்தாசார்யராக (அபிநவ தேசிகனாக) விளங்கும் உத்தமூர் ஸ்ரீவீரராகவ சுவாமியை வணங்குகிறேன்“.
இந்தத் தனியனுக்கு மற்றொரு முக்கிய சிறப்பும் உண்டு. சிஷ்யன் ஆசார்யனுக்கு வாழ்த்துப் பாடல் சமர்ப்பிப்பதுதான் உலக வழக்கு; ஆனால் இந்த சுவாமியின் பெருமை உலகமே அறியும்படியாக, அவரது ஆசார்யரான ஸ்ரீ கோழியாலம் சுவாமி, தன் சிஷ்யன் விஷயமாக அருளிய தனியன்(ச்லோகம்) இதுவாகும்.
(செய்தி – இக்காலத்திலும், மக்களுடைய பயன்பாட்டின் வசதிக்காக அரசாங்கம் பல நெடுஞ்சாலை திட்டங்களை கொண்டுவரும்பொழுது, அது பொறுக்காதவர்கள், பல இடையூறுகளை உண்டாக்குவதை பார்த்து வருகிறோமல்லவா?)
அன்புடன்,
ஏபிஎன் ஸ்வாமி
Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…