
சென்னை: சென்னையின் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் கொடி மரத்தின் அடியில் இன்று காலை குழந்தை ஏசு- மேரி படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஒரு பெண் பக்தர். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர் களத்தில் இறங்கி, புகார் கூற விசாரணை மேற்கொண்டிருக்கிறார் கோயில் உதவி ஆணையர் காவேரி.
இன்று காலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழக்கம் போல் வந்து கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்கி எழுந்தார் ரமா என்ற பெண் பக்தர். திடீரென அவருக்கு ஏதோ கண்ணில் பட அருகில் சென்று பார்த்த போது, கொடிமரத்தின் அடியில் குழந்தை ஏசு மேரி மாதா படம் அங்கே இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை அடுத்து, அருகில் இருந்தவர்களிடம் படத்தைக் கொண்டு வந்து வைத்தது யார் என்று விசாரித்தார். ஆனால், கோயில் கொடிமரத்துக்குக் கீழே இப்படி ஒரு படம் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர், பலரும் வந்து போகும் கோயிலின் கொடிமரத்தின் அடியில் இப்படி ஒரு படம் இருப்பது என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்.
அப்போது அருகில் இருந்தவர்கள், பூக்காரங்க யாராவது வெச்சிருப்பாங்க விசாரிங்க.. என்று சொல்லியிருக் கின்றனர். இதனால் கோயில் அருகே இருந்த பூக்கடைகளில் சென்று இதனை விசாரித்துள்ளார் அந்தப் பெண்மணி. ஆனால் அவர்களோ, நாங்கள் யாரும் வைக்கலை என்று சொல்லியிருக் கின்றனர்.
இத்தனை பேர் விழுந்து கும்பிட்டிருப் பாங்களே அவங்க யாருமே இத்தனை நேரம் இதனைப் பாக்கலியா என்று புலம்பிக் கொண்டே ரமா என்ற அந்த பெண் பக்தர், அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு போய், கோயில் பின்புற வெளிப்பகுதியில் இருக்கும் தெப்பக்குளத்தின் சுவர் ஓரத்தில் போட்டுவிட்டு வந்துள்ளார்.
இதை அடுத்து இந்தப் பிரச்னை அங்கே பரபரப்பை ஏற்படுத்த, அங்கிருந்த சிலர், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இந்து முன்னணியின் இளங்கோவன், மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோயிலுக்கு விரைந்துள்ளனர்.

இதன் பின்னர் நடந்தவை குறித்து இளங்கோவன் நம்மிடம் தெரிவித்தவை…
எங்களுக்கு தகவல் வந்ததும், நாங்கள் உடனே கோயிலுக்கு விரைந்தோம். கோயில் உதவி ஆணையர் காவேரியிடம் பேசினோம். அதற்கு அவர், ஆமாம், எனக்கும் தகவல் சொன்னாங்க. தக்காருக்கும் தகவல் போயிருக்கு. நாங்க அதைத்தான் விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். சிசிடிவி பூட்டேஜ்ல பாத்துக்கிட்டு இருக்கோம் என்றார்.
நாங்களும் அவர்கள் சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஆனால், சிசிடிவி காமிரா கொடிமரத்தின் பின் இருப்பதால் கொடிமரத்தின் முன் பகுதியில் நடந்தவை, முன்பகுதிக் காட்சிகள் பதிவாகவில்லை.
எனவே, நாங்கள் இனி முக்கியமான பகுதி கொடிமரம். அது பக்கத்துல சிசிடிவி காமிராவை பொருத்துங்க என்று சொல்லி வந்தோம். பின்னர் கோயிலுக்கு வெளியிலும் கோயில் பகுதியிலும் சிலரிடம் விசாரித்தோம்.
இந்தப் படத்தை வைத்தது யார் என்று விசாரித்து வந்த போது, கோயில் வாசலில் பூ விற்கும் பெண்மணி நான் தாங்க அதை கோயிலுக்குள் வெச்சேன். இங்க மேற்கு வாசல் பக்கத்துல, கோயிலுக்கு வெளில சுவர் ஓரமா தரைல இந்தப் படங்கள்லாம் இருந்துச்சு. சாமி படம் கால்ல மிதிபடக்கூடாதேன்னு அதை எடுத்துட்டு போயி நாந்தாங்க அங்க வெச்சேன். ஆனா, இதுல ஏசு படம் இருக்கும்னு எனக்கு தெரியாதுங்க என்றார்.

இதனிடையே அந்தப் பெண்மணி குறித்து எங்கள் குழுவில் இருந்த சிலர் விசாரித்தனர். அந்தப் பெண்மணி அறியாமை காரணத்தால் வைத்திருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள்.
ஆனால், கோயிலுக்கு வெளியே சாலையில் கிடந்த படத்தை எடுத்துக் கொண்டு வந்து, கோயிலுக்குள் போடவேண்டுமா? அதுவும் பலரும் விழுந்து வணங்கும் கொடிமரத்தின் கீழ்தான் வைக்க வேண்டுமா? இத்தனை பேர் இங்கே விழுந்து வணங்கியும், யாரும் இதனை கவனிக்கவில்லையா? கோயில் காவலாளி என்ன செய்கிறார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், கோயில் வாசலை ஒட்டி பக்தர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், பூக்கடையை விரித்து வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என்றும், சற்று தொலைவில் வைத்துக் கொள்ளட்டும் என்றும் நாங்கள் கோயில் டிசி காவேரியிடம் கூறினோம். அதை அடுத்து அவரும், கடையைத் தூக்கு என்று சொல்லி இனிமே கடை இங்கே வைக்கக் கூடாது என்றார்.
அதன் பின்னர், அந்த பெண் பக்தர் ரமாவிடம் விசாரித்து, அவர் எங்கே அந்தப் படத்தைப் போட்டார் என்று கேட்டு அதையும் பார்த்தோம். சற்று பழைய படம்தான். ஆனால் கண்ணாடி எதுவும் சேதம் இல்லாமல் இருந்தது. சட்டம் மட்டும் பழசாக இருந்தது….
இருப்பினும், இப்படி ஒரு படத்தை ஒருவர் கொண்டு வந்து வைக்கும் வரை கோயில் பாதுகாவலர்கள் தூங்கிக் கொண்டிருந்ததற்கு டிசி காவேரியிடம் கண்டனம் தெரிவித்துவிட்டு வந்தோம்… என்றார் இளங்கோவன் திருநாவுக்கரசு.
மயிலை கபாலிக்கே இந்த கதியா? என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. கடற்கரையில் இருந்த கோயிலை போர்த்துகீசியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி, அங்கே சாந்தோம் சர்ச் கட்டினார்கள். பாடல் பெற்ற தலமான கபாலீஸ்வரர் சிவாலயம் பின்னர் அங்கிருந்து ஒரு கி,.மீ. தொலைவில் ஊருக்குள் வந்தது. கடற்கரையில் இருந்து கபாலீஸ்வரரை வரவைத்த கிறிஸ்துவம் இப்போது, இங்கிருந்தும் கோயிலை நகர்த்தப் பார்க்கிறது. இந்தப் படங்களை வேண்டுமென்றே கோயிலுக்கு அருகில் வைத்தவர்கள் யார்? ஏன் வைத்தார்கள்? நிச்சயம் உள்நோக்கம் இல்லாமல் இருக்காது!
இருப்பினும், அந்த பெண் பக்தை ரமா போன்றவர்களும், உடனடியாக களத்தில் இறங்கிய இந்து முன்னணியினரும் பாராட்டுக்கு உரியவர்களே!



