
ராமாயணத்தின் சிறப்பு வால்மீகி ராமாயணத்தில் மட்டுமின்றி இதர புராணங்களில் கூட விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. ராமாயணம் வெறும் ஒரு ஆதர்ஷ புருஷனின் கதை மட்டுமேயல்ல.
ஆதர்ஷமான ஒரு மனிதனின் கதையையே கூற வேண்டுமென்றால் ராமனுக்கு முன்பே பலர் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். மிகச் சிறந்த சக்ரவர்த்திகள் அங்கு இருந்தனர். ரகு மகாராஜா, இக்ஷ்வாகு மகாராஜா, வைவஸ்வத மனு, மாந்தாதா சக்ரவர்த்தி – இவ்வாறு அனைவரும் சிறந்த தர்மவான்களாக விளங்கியவர்களே! ராமனோடு மட்டுமே தர்மம் ஆரம்பமாகவில்லை. ராமனின் முன்னோர்கள் அனைவரும் கூட தர்மவான்களே!
ரகுவம்சம் காவியத்தில் காளிதாசர் இவர்களைப்பற்றி வர்ணித்துள்ளார். “ராமபிரானின் பூர்வீகர்கள் பிறப்பிலேயே சுத்தமானவர்கள். பிறவிச் சுத்தம், வாழ்க்கை முழுவதும் சுத்தம்“ என்கிறார். அவர்களில் எத்தனை தேடினாலும் அதர்மம் என்பது தென்படாது. அத்தகைய தூய்மையான தர்ம வரலாறு கொண்டவர்கள். அக்காரணத்தால் ரகுவம்ச அரசர்களை வர்ணித்த காளிதாச மகாகவி, “அவர்கள் பால்யத்தில் வித்யை கற்றார்கள். யௌவனத்தில் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு போகத்தை அனுபவித்தார்கள். வயோதிகத்தில் வான பிரஸ்தாஸ்ரமத்தில் அனைத்து போகங்களையும் துறந்து ஆத்ம சிந்தனை செய்து இறுதியில் யோக சக்தியால் சரீரத்தை விடுத்தார்கள்” என்று வர்ணிக்கிறார். அத்தகைய மிகச் சிறந்த மகாத்மாக்களாக ரகுவம்ச அரசர்கள் திகழ்ந்தார்கள்.
ராமனுடைய பூர்வீக வம்சம் சூரியனில் தொடங்குகிறது. பின்னர் முதல் சக்ரவர்த்தி வைவஸ்வத மனு. அடுத்து இக்ஷ்வாகு என்று வரிசையாக வளர்ந்த ஒரு மூதாதையர் பரம்பரையைக் கொண்டவன் ராமன். அந்த திவ்ய வம்சத்தில் அனைவரும் பவித்ரமான சரித்திரம் கொண்டவர்களே! அத்தகைய வம்சத்தில் நாராயணன் அவதரித்தான். ஏனென்றால் பவித்ரமான இடத்தில்தான் பரமாத்மா தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்வான். மகரிஷிகளுக்குச் சமமான அரச வம்சம் என்பதால் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அங்கே தோன்றினான். அவர்களின் வரலாறு அத்தனை உயர்ந்தது. அவர்களனைவரும் அத்தகைய தர்மவான்களாக இருக்கையில் ராமனை நாம் தர்ம புருஷன், ஆதர்ஷ புருஷன் என்று பிரத்தியேகமாக ஏன் போற்றுகிறோம்? ராமன் தர்ம புருஷன்தான். ஆனால் ராமனின் முன்னோர்களின் வரலாறு ராமாயணமாக ஏன் ஆகவில்லை? ராமனின் வரலாற்றை மட்டுமே நாம் ஏன் பாராயணம் செய்கிறோம்? என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய அம்சம்.
வெறும் தர்மத்திற்காக மட்டுமே என்று பார்த்தால், பூர்வ ராஜாக்கள் அனைவரும் அப்படிப்பட்டவர்களே! அதனால் தர்மம், ஆதர்ஷம் இவ்விரண்டையும் விட வேறு ஏதோ விசேஷம் ராமனில் இருக்க வேண்டும். அது என்ன என்றறிய முயற்சிப்போம்.
எந்த ராமாயணத்தை எடுத்துப் பார்த்தாலும் அந்த விசேஷம் நமக்குத் தென்படும். ஆனால் முக்கியமாக ஆதிகவி வால்மீகி ராமாயணத்தையே நாம் பாராயணத்திற்குகந்ததாக எடுத்துக் கொள்வதால் அதன்படி பார்க்கையில் ராமன் வெறும் தர்ம மூர்த்தி மட்டுமல்ல. சாட்சாத் பகவானின் சொரூபமே! அதனால்தான் ராமாயணத்திற்கு அத்தகைய சக்தி வந்துள்ளது.
நாராயணன் ராமனாக அவதரித்து தர்மத்தை சம்பூர்ணமாக பிரதிஷ்டை செய்தான் என்பதால்தான் ராமாயணத்தை பாராயணம் செய்து உய்வடைகிறோம்.
ராம உபாசனா மந்திரங்கள்;-
ஸ்ரீமகாவிஷ்ணு ராமனாக அவதரித்ததால்தான் ராமாயணம் மந்திர சொரூபமாக விளங்குகிறது. ராமாயணம் எத்தனை தர்ம சாஸ்திரமோ அத்தனை மந்திர சாத்திரமும் கூட. மந்திர சாஸ்திரம் என்று கூறும்போது உபாசனை செய்வதற்கு ஒரு தேவதை இருக்க வேண்டும். அந்த தேவதை யார் என்றால் ராமச்சந்திர மூர்த்தியே!
ராமச்சந்திர மூர்த்தி குறித்த மந்திரங்கள் பல உள்ளன. கோதண்ட ராம மந்திரம், தாரக மந்திரம் போன்றவை உள்ளன. தாரக மந்திரத்தில் கூட பல வித பீஜாக்ஷரங்கள் சேர்வதால் வேறு வேறு மந்திரங்கள் காணப்படுகின்றன. அவ்விதம் ராமச்சந்திர மூர்த்திக்கு அநேக மந்திரங்கள் உள்ளன. அதே போல் ஒவ்வொரு மந்திரத்திற்கும் பிரத்தியேகமான சக்திகள் உள்ளன. சில மந்திரங்கள் ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை. சில பிரதாபமும் பராக்கிரமமும் கொண்டவை. வேறு சில மந்திரங்கள் பாதுகாப்பளிப்பவை. வேறு சில மந்திரங்கள் வறட்சி, வெள்ளம் போன்ற துர்நிமித்தங்களை நீக்குபவை. இவ்வாறு ராம மந்திரத்தில் எத்தனை வேறுபாடுகள் உள்ளனவோ அத்தனை வேறுபாடுகளையும் ராமாவதாரத்தில் ராமன் ஒவ்வொரு சந்தர்பத்திலும் காண்பிக்கிறான். அவ்வாறு பால ராமன் முதல் பட்டாபிராமன் வரை ராமமூர்த்தி அனேக இடங்களில் அனேக விதமாகத் தென்படுவான்.

பட்டாபிராமன் பரிபூர்ண தாரகபிரம்ம சொரூபம். லட்சுமணனோடு சேர்ந்து வனவாசத்திற்குச் சென்ற ராமன் என்றவுடன் நம்மை ரட்சிக்கும் சொரூபமாக பாவனை செய்ய வேண்டும். அதேபோல் சீதா சமேத ராமன் சம்பூர்ணமாக லட்சுமி நாராயண தத்துவமே. இவ்விதம் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக ராமச்சந்திர மூர்த்தியில் வித்தியாசம் தென்படும்.
ஜடா மகுடம் தரித்து துறவாடை அணிந்து ஒரு ருஷி போன்ற வேடத்தில் தென்பட்டாலும் வில்லும் அம்பும் கையில் தரித்த ராமன் ஒரு அற்புதமான வேதாந்த மூர்த்தி. முனிவரின் வேடத்திலிருக்கும் போது ஆயுதம் எதற்கு என்று தோன்றும். இரண்டிற்கும் பொருந்தவில்லையே என்று தோன்றும். ருஷி என்றாலே அமைதியை விரும்புபவராக ஆயுதம் எடுக்கவோ பராக்கிரமம் காட்டவோ விரும்பாதவராக இருப்பார். ஆனால் ராமன் இரண்டையும் தன்னில் காட்டுகிறான். அதனால் ராமன் ராஜ ருஷியாகவும் ருஷி ராஜனாகவும் திகழ்கிறான். ஒரு முனிவனாக தர்மத்தில் நின்றான். ராஜாவாக தர்மத்தை நிலை நாட்ட்டினான். இது ராமச்சந்திர மூர்த்தியின் சிறப்பான குணம்.
ராமச்சந்திர மூர்த்தி பரிபூர்ணமாக ருஷி லட்சணம், ராஜ லட்சணம் இரண்டும் கொண்டவன். இரண்டையும் தன் அவரதாரத்தில் காட்டியவன். அதனால்தான் ஸ்ரீராமனைப் புகழ்கையில், “முனிராஜ ருஷயோ தியாகராஜனுத…” என்று பாடுகிறார் தியாகராஜ சுவாமி.
ராமாயணத்தின் மகிமை பல இடங்களில் நமக்குக் கிடைக்கிறது. இன்று சிறிது நேரம் ராமாயணம் பற்றி நாம் சிந்தனை செய்தோமல்லவா? இது நிச்சயம் நம் வாழ்வில் பிரபாவம் ஏற்படுத்தும். பல விதங்களிலும் மனசாந்தியை அருளக் கூடியது. அதுவே ராமாயணத்தின் தனித்தன்மை. அத்தகைய ராமாயணத்தினை அளித்த நம் ருஷிகளுக்கு வந்தனம்.
தெலுங்கில் – பிரமம்ஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



