“மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி”
(“கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி இட்டாச்சாக்கும்!”-பெரியவா) (உலக விவகாரம் நுணுக்கமாகத் ‘தெரிந்து கொண்டு’ சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது).
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து

புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
‘லோக ஜனங்களின் ஸகல வியவஹாரங்களும்
தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு’ கீதாசாரியன்
போலவே நமது ஆசாரியன் இருந்ததற்கு ஓர்
உதாரணமாவது காட்டாது விட்டால் நியாயமாகாது.
அவரிடம் மிகுந்த பக்தி பூண்ட ஒரு குடும்பத்தினர்
தங்களகத்துப் பெண்ணுக்குக் காஞ்சியிலேயே
கலியாண மண்டபம் எடுத்துக் கொண்டு மணமுடிக்க
வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தது முகூர்த்த
நாளுக்கு இரு தினம் முந்தைய மாலையில்தான்.
அன்றிரவு ஸ்ரீசரணரது தரிசனத்திற்காக வருகிறார்கள்.
அவர்களில் நிகழ்ச்சி நாயகியான மணப்பெண்
இல்லாதது அவரோடிருக்கும் பாரிஷதர்களுக்குப்
பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.அதுவும் அப்பெண், குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம் பரம பக்தி கொண்டவளாயிற்றே!
குறிப்பறியும் ‘இங்கிதக்ஞர்’ அவர்களுக்குப்
பதிலளிக்கும் ‘லீடிங் கொஸ்சன்’ போலவே
அக்குடும்பத்தினரிடம் கேட்கிறார்;
“கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி
இட்டாச்சாக்கும்!”
‘ஸகல வியவஹாரங்களும் தெரிந்து கொண்டி’ருப்பதில் பின்னரும் தொடர்கிறார்;
“நாளைக் காலம்பறவே ஸம்பந்திப் பேர்கள்
வந்துடறளாக்கும்! அவா ஊர்லேந்து அப்படித்தானே
ரயில்,பஸ் கனெக்’ஷன் இருக்கு? அப்பறம் ஸமாராதனை இருக்கும். அது ஆனவிட்டு இங்கே நான் விச்ராந்தி பண்ணிக்கிற டயம் ஆயிடும்.அதுக்கப்புறம் ஒங்களுக்கு ஜானுவாஸ கார்யம் வந்துடும்.ஆனதுனால கொழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லேன்னு இப்பவே வந்துட்டேளாக்கும்.”
இவ்வாறு அவர் உலக விவகாரம் நுணுக்கமாகத் ‘தெரிந்து கொண்டு’ சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது. மேலும் அவர் ‘புரிந்து கொண்டு’ என்பதாகம் அனுதாபக் கருணையுடன் கூறியதைக் கேட்டபோதோ,நனைந்த நெஞ்சங்கள் உருகியே ஓடுகின்றன,
“வரமுடியலையே-னு கொழந்தை கொஞ்சங்கூட
வருத்தப்பட வேண்டாம்.எல்லாம் நல்லதுக்குத்தான்.
வந்திருந்தா கூட அவளை இத்தனை
கவனிச்சிருப்பேனான்னு ஸந்தேஹந்தான்! இப்பத்தான், வந்திருக்கிற ஒங்களையெல்லாம்விட வராத அவளோட நெனப்பே ஜாஸ்தியாயிருக்கு .ஜாஸ்தியாகவே ஆசீர்வாதம் பண்றேன்’னு நான் சொன்னதா அவகிட்டச் சொல்லுங்கோ.
போனதடவை அவளை நீங்க அழைச்சுண்டு வந்து
சீக்கிரமா கல்யாணம் ஆகணும்ணு ரொம்ப
ப்ரார்த்திக்கிறப்ப, ‘அடுத்த தடவை ஜோடியா
அழைச்சுண்டுவராப்பல, அம்பாள் அனுக்ரஹம்
பண்ணட்டும்’னு நானும் ப்ரார்த்திச்சுண்டேன் .அதுதான் இப்ப அவ தம்பதியாகவே வரும்படியா ஆயிருக்கு-ன்னு சொன்னேன்னும் சொல்லுங்கோ!”



