
தான் சாதிக்க இயலாததை மற்றவர்கள் சாதித்துவிட்டால் ஏற்படும் பொறாமையால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதன்மூலம் வெற்றி பெற்றுப் புகழடைந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் வீண் வம்புகள், புரளிகள், வதந்திகள் பிறந்த வண்ணமிருக்கும்.
இவை, ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் குணத்தினால் பிறக்கும் விகாரம். இன்னும் சிலரில் இந்த சுபாவம் போட்டி மனப்பான்மையாக மாறிவிடும். சதித் திட்டம் தீட்டி தீங்கிழைக்கக் கூட துணிந்து விடுவார்கள்.
படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு இருக்கும். பத்து பேரைப் பார்த்து நாமும் அதே போல் ஆகவேண்டும் என்று துள்ளிக் குதிப்பது அமைதியின்மைக்கு காரணமாகிறது. அந்த மன அழுத்தத்தில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தற்கொலைக்குக் கூட சிலர் முயற்சிப்பார்கள்.
ஒருவனிடம் உள்ளதே என்று இன்னொருவன் அழுவது, அவனைப் போல் ஆக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வது, இரண்டுமே தீமை விளைவிக்கும்.
நம்மிடம் உள்ள பிரத்தியேகமான சிறப்பு என்னவென்று அடையாளம் கண்டு, அதனை மெருகுபடுத்திக் கொண்டு நம் தனித்தன்மையை வெளிப்படுத்துவது ஆனந்தமான வழிமுறை. அதன் மூலம் சமுதாயத்திற்கு நமக்கே உரித்தான முறையில் பயன்படமுடியும்.
ஒரு பரமஹம்சரைப் போல், ஒரு ரமண மகரிஷியை போல் நாமும் ஞானத்தில் வளரவேண்டும் என்று ஒரு நாளும் போட்டி போட மாட்டோம். முயற்சிகூட செய்ய மாட்டோம். சாதிக்கவும் மாட்டோம். உண்மையில் இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அத்தகைய உன்னதமான மனிதத் தன்மையை சாதிக்க வேண்டும் என்று தவிப்பது, சாதனை செய்வது, பரிசுத்தத்தையும் பரிபூர்ணதையும் பெறுவது…. இதுவே மிகச் சிறந்த மார்க்கம்!
“மஹாத்மா யேவ கத: ஸ பந்தா I” – “மகாத்மாக்கள் நடந்து சென்ற பாதையை நாம் பின்பற்ற வேண்டும்” என்று தவிக்கும் புத்தி மிகவும் நல்லது.
ஸ்ரீராமரை தூக்கிக் கொஞ்சிய கௌசல்யை, தசரதர்… இவர்களின் பாக்கியத்தை நினைத்து தியாகராஜர் அழகாக அசூயை கொண்டார். ராமரின் பாதங்களை விடாத அனுமனின் பக்தி தனக்கு வரவில்லையே என்று வருத்தப்பட்டார்.
இந்த அசூயையிலும் போட்டியிலும் எதிர்மறை எண்ணங்கள் எதுவுமில்லை. இந்த ஒப்பீடு, ராம தத்துவத்தின் மேல் சிரத்தையை வளர்த்தது. அவருடைய ராம பக்தியை மேம்படுத்தியது.
உத்தம நிலையை அடைந்த ஞானிகளைப் பார்க்கிறோம், வணங்குகிறோம். ஆனால் நாமும் நம் எண்ணங்களை அத்தகைய உன்னத நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.
ஆனால் ஒரு செல்வந்தனிடமோ, அதிகாரத்தில் உள்ளவர் ஒருவரிடமோ சென்றால், அவர்களைப் போல் பதவி, செல்வம் பெற வேண்டும் என்று துடிப்போம். வேதனை அடைவோம். ஒப்பிட்டுப் பார்ப்பதால் அனாவசிய துயரம், பொறாமை இவற்றை வளர்த்துக் கொண்டு நம் தனித்தன்மையை குறைத்துக் கொள்கிறோம்.
வசிஷ்டரிடமிருந்த மகிமை பொருந்திய பசுவைப் பார்த்து விசுவாமித்திரர் அசூயை கொண்டு அதனைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
“அங்கே உள்ளது! தன்னிடம் இல்லையே!” என்ற தாழ்வு மனப்பான்மை ஹிம்சையைத் தூண்டுகிறது. ஆனால் அது தனக்கு எத்தனை தூரம் தேவை? அங்கு அது ஏன் இருக்கிறது? என்ற கேள்விகளை கேட்டுக் கொள்வதில்லை.
வசிஷ்டர் தவச்சீலர். தன் நிரந்தர தவ வாழ்க்கையால் உலகைக் காத்து வருகிறார். அவர் தனம் சம்பாதிப்பதற்காக காலத்தைச் செலவிட்டால் தவம் வீணாகும். தவத்தைத் தொடர இயலாது. அவருடைய தவம் இடையூறின்றி நடந்து வருவதற்குத் தேவையான திரவியங்களை காமதேனுவின் புதல்வி அளித்து வருகிறது. அதனை அவர் தன் தவச் சக்தியால் போஷித்து வருகிறார். இத்தனை மகிமை பொருந்திய பசுவிடமிருந்து தேவையானவற்றை பெற்று சுகபோகங்களில் அவர் மகிழவில்லை. போகத்திற்கும் யோகத்திற்கும் வெகுதூரம்.

யோகி தன் மகிமைகளை உலக நன்மைக்காக உபயோகப்படுத்துவாரே தவிர தன் சொந்த சுகத்திற்காகவும் பெயர் புகழுக்காகவும் அல்ல.
அதிதியாக வந்தவரை உபசரிக்க வேண்டிய தர்மம் இருந்ததால் அந்தப் பசுவின் மகிமையால், வனத்தில் வசிக்கும் அந்த தவச்சீலர், விசுவாமித்திரருக்கு உணவு படைத்தார். அதனை உணராமல், மகிமை பொருந்திய அந்த பசுவை தன் போகங்களுக்காக இழுத்துப் போகத் துணிந்தார் விசுவாமித்திரர்.
ஆனால் வசிஷ்டரின் தவ சக்தியின் முன் நிற்க முடியாமல் தோற்றுத் திரும்பினார். சாதிக்க வேண்டியது பௌதிக செல்வத்தை அல்ல; அதை விட மதிப்புள்ள தவசக்தியை என்றுணர்ந்தார்.
முதலில் செல்வத்தோடு ஒப்பிட்டு, துன்புறுத்தத் துணிந்தவர், தவத்தோடு ஒப்பிட்டு சாதனைக்குத் தயாரானார். படிப்படியாக தவத்தின் மூலம் மனதின் விகாரங்களை வென்றார். காமம், குரோதம் போன்ற துர்குணங்கள் நீங்கி மகரிஷியாக பரிணாமம் அடைந்தார். இறுதியில் வினயத்தோடு வசிஷ்டரின் ஒப்புதலுக்காக வேண்டி நின்றார். வசிஷ்டர் மெச்சிக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்தார்.
எந்த ஒப்பீட்டில் அபாயம் உள்ளது? எந்த ஒப்பீட்டில் உத்தம முயற்சிக்கு வழி உள்ளது? என்று இக்கதையை ஆதாரமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம். மாமுனிவர்களுக்கு வந்தனம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



