
தற்போது எங்கு பார்த்தாலும் சுற்றுச்சூழல் மாசடைதல் பற்றி பேசி வருவதைக் காண்கிறோம். காற்றில் மாசு, நீரில் மாசு… இவ்விதம் பலவித மாசு பற்றி கேள்விப்படுகிறோம்.
இத்தனை வித மாசுக்கள் எதனால் ஏற்படுகிறது? தர்மத்திற்கு மாசு ஏற்படும் பொழுது பஞ்சபூதங்களும் மாசுபடுகின்றன. அதனால் இயற்கைக்கு வருத்தம் உண்டாகிறது. மக்களை அது பாதிக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மூல காரணத்தைக் கூறுகிறது சாஸ்திரம்.
அதை மறந்து விட்டு நாம் மேலெழுந்தவாரியாக சிகிச்சை அளிக்கிறோம். அதாவது வாயு மாசடைந்தது என்றும் நீர் மாசடைந்து என்றும் தனித்தனியாக நிவாரணம் செய்ய நினைக்கிறோம். அது சரியான தீர்வை அளிக்காது.
தர்ம மயமான சூழலை உண்டாக்க முடிந்தால் சுற்று சூழலில் மாசு இருக்காது என்ற குறிப்பை மகரிஷிகள் நமக்குத் தருகிறார்கள். இதுபோன்ற கருத்துக்களை இப்போது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி வருகிறோம். அதனால் தீய பலன்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.
அதனால் மக்கள் முடிந்தவரை தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். அதிலும் அரசாள்பவர்கள் தர்மம் தவறினால் பிரக்ருதியில் மாசு ஏற்படுகிறது என்று நம் சாஸ்திரங்கள் பல இடங்களில் கூறுகின்றன.
ஆத்ரேய சம்ஹிதை என்ற நூலில் அத்ரி மகரிஷி இது குறித்து மிக அற்புதமாக போதனை செய்கிறார். இவை சில வாக்கியங்களின் கூட்டமாக நமக்குக் கிடைக்கிறது. இன்று உலகெங்குமுள்ள மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டிய உயர்ந்த போதனை இது.
இங்கு ஆத்ரேயர் என்று கூறுவதால் அத்ரி மகரிஷி கூறியதாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது அத்ரி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மகரிஷி என்றும் கொள்ளலாம்.
அவர் கூறுவது என்னவென்றால் மனிதனுக்கு இருக்கும் எண்ணங்களைப் பொறுத்து இயற்கை கூட நடந்துகொள்கிறது. அதன்மூலமே நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. முக்கியமாக தேசத்தையும் நகரத்தையும் கிராமங்களையும் ஆளும் தலைவர்கள் தர்மத்தை மீறினால் அவர்கள் பரிபாலனம் செய்யும் பிரதேசங்களிலுள்ள வாயுவும் ஜலமும் வருத்தமடைந்து மாசுபடுகின்றன என்று கூறுகிறார்.
தலைவர்கள், தாம் தர்மத்தை மீறுவதோடு மட்டுமின்றி தம் நாட்டு மக்களையும் தர்மத்தை மீறி நடக்கும்படி தூண்டுகிறார்கள். அப்போது காற்றும் நீரும் எவ்வாறு எதிர்மறையாக நடந்து கொள்ளும் என்றால் அந்த நாட்டையோ நகரத்தையோ கிராமத்தையும் துவம்சம் செய்து அழித்துவிடும். எப்போது அரசனும் மக்களும் அதர்மிகளாக மாறினார்களோ அப்போது ஜலம் தொடர்பான தேவதைகளும் ஜலத்தைப் பொழியாமல் இருப்பார்கள். ஒருவேளை பொழிந்தாலும் விபரீதமாகப் பொழிவார்கள். வறட்சி, வெள்ளம் போன்ற வடிவங்களில் இயற்கையையும் பயிர்களையும் வருந்தச் செய்வார்கள்.
எனவே நீர் ஜடப்பொருள் அல்ல! காற்று ஜடப்பொருள் அல்ல! அவற்றை தேவதைகளாக நாம் பிரார்த்தனை செய்கிறோம். இது வெறும் விசுவாசமோ மதமோ அல்ல. இது ஒரு விஞ்ஞானம். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் பஞ்சபூதங்களால் ஆன உடலைப் பெற்றுள்ள நாம் மட்டுமே சைதன்யம் நிறைந்தவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் பஞ்சபூதங்களும் சைதன்யம் நிரம்பிய தேவதைகளின் சொரூபங்களே என்ற வேத விஞ்ஞானத்தை மறக்கலாகாது.
அதர்மியான அரசன் இருக்கும் பிரதேசத்தில் வாயு கூட சரியாக வீசாது. பூமிகூட ஆபத்துக்களை விளைவிக்கும். அதோடு கூட காற்றாலும் நீராலும் பலவித வியாதிகள் பரவும் என்று கூறுகிறார்கள் மகரிஷிகள். எத்தனை விஞ்ஞானத்தோடு நம் ரிஷிகள் கூறியுள்ளார்களோ கவனியுங்கள்!
இப்போது நாம் கேள்விப்படும் பலவித விசித்திரமான நோய்களுக்கு முக்கிய காரணம் காற்றும் நீரும் மாசடைந்திருப்பதே என்று அறியப்படுகிறது. இனம்புரியாத புதுப்புது காய்ச்சல்கள் வருகின்றன. அந்த ஜுரங்களுக்கு சிகிச்சைக்காக எத்தனையோ அவஸ்தைகளை அனுபவிக்கிறோம். இந்த ஜுரங்களுக்கு காரணம் ஒருபுறம் காற்று. மறுபுறம் நீர்.

தற்போது தண்ணீரில் பொல்யூஷன் எந்த அளவுக்கு பெருகி உள்ளது என்று பார்த்ததால் வியப்பாக உள்ளது. பிரவாகித்து ஓடும் நீரிலிருந்து இரண்டு கை அள்ளிக் குடிப்பதற்கு தற்போது அவகாசம் இல்லை. அதோடு சில இடங்களுக்கு சென்றால் அந்த இடத்தின் காற்று நம்மை பாதிக்காமல் இருக்க ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்து முகத்தை மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவை பற்றி பண்டைய காலத்திலேயே ரிஷிகள் எவ்வாறு கூறியுள்ளார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். காற்றும் நீரும் விபரீதமாக மாறினால் பூமிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மரங்களை கிருமிகள் தாக்குகின்றன. பயிர்களும் மரம் செடி கொடிகளும் பாதிப்படைகின்றன.
அரசன் அதர்மத்தை வளர்ப்பதால் மக்களும் அதர்ம வழியில் நடந்து கொள்கிறார்கள். அதனால் காற்றும் நீரும் பூமியும் வருந்துகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகளே இவை.
தற்போது உலகளாவிய பிரச்சினையாக உள்ள சுற்றுச்சூழல் மாசு பற்றிய அற்புதமான விளக்கங்களை நம் புராதன சம்ஹிதை நூல்கள் தெரிவிக்கின்றன. அவற்றைப் படித்தால் அதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.
வேதரிஷிகளான ஆத்ரேயர் போன்ற மகரிஷிகள் இத்தனை அற்புதமாக தர்மத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்துள்ளார்கள். இதனை கவனித்து கருத்தில் நிறுத்த வேண்டிய தேவையுள்ளது.
இவ்விதம் விஞ்ஞானத்தை விளக்கி கூறிய ருஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



