“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு”–பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)
(இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா,பாஷ்யாலஜியா? பசுபதியே அறிவார்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154

தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ பூஜை செய்பவர்.வீட்டுக் கொல்லையிலேயே வில்வ மரம்
பூச்சி அரிக்காத தளமாக சேகரித்து வைத்துக் கொண்டு ஆனந்தமாகப் பூஜை செய்வார்.
அந்த வில்வமரம் பட்டுப் போய்விட்டது.
லட்சம் ரூபாயை இழந்த சோகம் பக்தருக்கு.
வழக்கம்போல் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைக்க, வில்வமரம் பட்டுப் போய் விட்ட செய்தியைக் கூறினார்.
பெரியவாள், அவர் சொன்னதைச் செவியில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. வேறு யார் யாருடனோ பேசிக் கொண்டும், ஆசீர்வத்தித்துக் கொண்டும் இருந்தார்கள்.
பின்னர்,பக்தரைப் பார்த்து, “இப்போ Water Pollution, Air Pollutionனெல்லாம் சொல்றாளே,உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
“ஆமாம்…குடிக்கத் தண்ணீர்,சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் மாசு அதிகமாகிவிட்டதால் உடம்புக்குக் கெடுதல் என்கிறார்கள்….”
“நம்ம சாஸ்திரங்களில்கூட Pollution பற்றிச் சொல்லியிருக்கு”-பெரியவா
பக்தருக்குப் புரியவில்லை. பெரியவாள் எங்கே போய்க்கொண்டிருக்கிறாள் என்று.
“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு. ஆசாரமில்லாமல்,தீட்டுக் காலத்தில் மரங்களுக்குப் பக்கமாகப் போனால் மரத்துக்குக் கெடுதல்.வில்வமரம் அதனால்தான் பட்டுப் போயிருக்கு…”
பக்தர் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
“வில்வமரத்தின் வேர்ப்பகுதியிலே நிறையப் பசுஞ்சாணம் போட்டு, தினமும் தீர்த்தம் விடு. அதுதான் பிராயச்சித்தம்…”-பெரியவா.
சிவபக்தர் அவ்வாறே செய்தார். பதினைந்து நாள்களில் துளிர்கள் தெரியத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த பக்தர்,அதே வில்வமரத்திலிருந்து வில்வம் பறித்து, பெரியவாளுக்கு வில்வமாலை சமர்ப்பித்தார்.பசுஞ்சாணத்தில் உயிர்ச்சத்து – உயிர் தரும் சத்து – இருக்கிறது என்பதை, எந்த
பாஷ்ய பாடத்தில் படித்துத் தெரிந்து கொண்டார்கள், பெரியவாள்!.
இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா,பாஷ்யாலஜியா?
பசுபதியே அறிவார்.



