
கோமதி வித்யை என்ற பெயரில் ‘கோ’ தத்துவத்தை விவரிக்கும் மந்திரங்கள் வேதத்தில் காணப்படுகின்றன. அவற்றை அனுசரித்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூட அந்த மந்திரங்களை ஸ்லோக வடிவில் அளித்துள்ளார்கள்.
கோமதி வித்யையின் முக்கியமான மந்திரம் இது.
“நமோ கோப்ய: ஸ்ரீமதீப்ய: சௌரபேயீப்ய ஏவச!
நமோ பிரஹ்ம சுதாப்யஸ்ச பவித்ராப்யோ நமோ நம:”
இதில் கோ எனப்படும் தேசிய பசுமாட்டின் இயல்பு விளக்கப்பட்டுள்ளது.
“நமோ கோப்யஹ” – கோமாதாவுக்கு நமஸ்காரம்.
அவை ஒளியோடும் லக்ஷ்மி களையோடும் விளங்குகின்றன. அதனால் “ஸ்ரீமதீப்யஹ” என்றார்கள். இங்கு ‘ஸ்ரீ’ என்ற சொல்லுக்கு வேதம் என்ற பொருள் இருப்பதால் வேத சொரூபமே பசுக்கள்! வேத மந்திரங்களுக்குக் கூட ‘கோ’ என்ற பெயர் உள்ளது. தேனுக்களுக்கும் (பசுக்களுக்கும்) ‘கோ’ என்ற பெயர் உள்ளது. அதனால் வேதங்கள் எத்தனை பவித்திரமானவையோ பசுக்களும் அத்தனை பவித்திரமானவையே என்றறியவேண்டும்.
வேதத்திற்கும், வேதத்தோடு தொடர்புடைய யக்ஞங்களுக்கும், பசுக்களுக்கும் உள்ள அனுபந்தத்தை நாம் தெரிந்துகொண்டால் இதில் உள்ள சிறப்பை உணர முடியும்.
“சௌரபேயீப்ய ஏவச!”:- “சுரபி தேனுவின் சந்தானமான கோ மாதாவுக்கு நமஸ்காரம்!” முதன் முதலில் தோன்றிய பசு கோலோகத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் தியானத்திலிருந்து வெளிப்பட்டது என்று பிரம்ம வைவர்த்த புராணமும் தேவீ பாகவதமும் தெரிவிக்கின்றன. பரமாத்மா தியானத்தில் இருந்தபோது அவருக்கு இனிப்பான பதார்த்தம் ஏதாவது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது அவருடைய தியானத்திலிருந்து அன்னை சுரபி தேவி ஆவிர்பவித்தாள். சுரபி தேவி பிரதம தேனு. பசுக்களின் தாய் சுரபி என்னும் பசுமாடு. காமதேனுக்களுக்கு எல்லாம் மூலம் சுரபி. சுரபி தேவியின் பாலை ராதா தேவி எடுத்துவந்து ஸ்ரீகிருஷ்ணருக்கு அளித்தாள் என்று பிரம்ம வைவர்த்த புராணமும் தேவீ பாகவதமும் விவரிக்கின்றன. சுரபியில் இருந்து வந்தவையே ‘தேனு’ எனப்படும் பசுக்களின் கூட்டமாதலால் பசுக்களுக்கு ‘ஸௌரபேயீ’ என்ற பெயர் ஏற்பட்டது.
அதோடு சுரபிதேவி வழிபாடு பற்றி உபாசனா சாஸ்திரங்களில் விவரித்துள்ளார்கள். அதாவது கோமாதா வழிபாட்டினை சுரபி மந்திரத்தால் செய்ய வேண்டும். “ஸ்ரீ சுரப்யை நமஹ” என்ற மந்திரத்தால் கோமாதாவை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.
சுரபியின் குழந்தைகளான கோமாதாக்கள் திவ்ய லோகங்களில் வசிக்கின்றன. அவை சுவர்க்கம், கோலோகம் போன்ற தெய்வீக உலகங்களில் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை அனைத்தும் கூட கிருஷ்ண பரமாத்மாவின் தவசக்தியாலிருந்து வெளிப்பட்ட தெய்வீக கோமாதாவிலிருந்து வந்தமையால் அவையனைத்திலும் தெய்வீக சக்தி இருக்கிறது. அவற்றுக்கு காமதேனுக்கள் என்று பெயர்.
காமதேனு என்றால் கோரியவற்றை அளிக்கக்கூடிய சக்தி கொண்ட பசு என்று பொருள். கோமாதாகளுக்காக பிரத்தியேகமான உலகம் ஒன்றுள்ளது என்ற விஷயத்தை கிட்டத்தட்ட அனைத்து புராணங்கள் வாயிலாகவும் நாம் அறிய முடிகிறது. அதன் பெயர் கோலோகம். அந்த கோலோகத்தை சென்றடைவது எளிதல்ல. மிகச் சிறந்த புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே அங்கு செல்ல இயலும். அனைத்து தேவதைகளும் கௌரவித்து வணங்கும் உலகம் கோலோகம்.
இதில் விசேஷம் என்னவென்றால் அத்தகைய காமதேனுவின் சந்ததிகளான பசுக்கள் “பாரத வர்ஷே! பரத கண்டே!” என்று போற்றப்படுகிற நம் பாரத தேசமாகிய புண்ணிய பூமியில் மட்டுமே கிடைக்கின்றன. பசுவை கோமாதாவாகவும் தெய்வமாகவும் பாரதீயர்கள் வழிபடுகிறார்கள். அந்த காமதேனுவின் சந்தானங்களான பிரத்தியேகமான கோஜாதி நம் தேசத்தில் மட்டுமே கிடைகிறது என்பதை அறிந்துள்ளதால் அத்தகைய பக்தி வளர்ந்துள்ளது.
நம் தேசத்தின் கலாச்சாரத்தை அறியாதவர்களுக்கு நம் நாட்டுப் பசுக்களின் சிறப்பு புரியாது. எனவே பாரத தேசத்து புண்ணிய பூமியில் பிறந்தவர்களுக்கு நம் நாட்டில் வளர்ந்து வரும் பசுக்கள் அனைத்தும் காமதேனுவின் வழி வந்தவை என்ற நினைவு இருக்கும். இது சாஸ்திரங்கள் கூறும் அம்சம். அதனால் அத்தகைய நம்பிக்கையையும் சிரத்தையையும் வழிபாடுகளையும் தெய்வீக பாவனையையும் கௌரவிப்பவர்கள் பாரத தேசவாசிகளாக இருப்பதற்கான தகுதி உடையவர்கள்.

“நமோ பிரஹ்ம சுதாப்யஸ்ச” – “பிரம்மதேவரின் மகளுக்கு நமஸ்காரம்” என்று பொருள். பிரம்மதேவர் வாத்ஸல்ய பாவனையோடு கோமாதாவை சேவித்தார் என்ற உத்தேசத்தோடு இந்த பொருள் கூறப்படுகிறது. இன்னும், பிரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மா, ஞானம், வேதம் என்று கூட பொருள் உள்ளது. பரமாத்மாவாகிய கிருஷ்ணரிடமிருந்து ஆவிர்பவித்ததால் “பிரம்ம சுதா” என்று பொருள் கூறப்படுகிறது. இன்னொரு விதத்தில் வேதத்தின் சொரூபமே கோமாதாவின் ரூபத்தில் தென்படுவதால் ‘பிரம்ம சுதாப்யஸ்ச’ என்றும் பொருள்படுகிறது.
அதுமட்டுமின்றி, ‘யக்ஞத்திற்கு தாய் கோமாதா!’ என்ற கருத்து அதர்வண வேதத்தில் உள்ள ‘கோ சூக்தத்தில்’ காணப்படுகிறது. அனைத்து யக்ஞங்களுக்கும் கேந்திரம் கோமாதா! யக்ஞம் லோக க்ஷேமத்திற்காக செய்யப்படுகிறது. நற்செயல்களுக்கெல்லாம் தாய் போன்றவள் கோமாதா. ஏனென்றால் பசுக்கள் நலமாக இருந்தால் பிரபஞ்சம் நலமாக இருக்கும். இக்காரணத்தால்தான் பசுவிலிருந்து கிடைக்கும் பால் தயிர் நெய் இம்மூன்றும் யக்ஞ திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
பசுவின் பாலால் சமைத்த அன்னம் தேவதைகளுக்குப் பரம பிரியமானது. அதனால்தான் அந்த பாயாசத்திற்கு ‘பரமான்னம்’ என்ற பெயருள்ளது. அதாவது மிகச் சிறந்த ‘பரம’ அன்னம் என்று பொருள்படுகிறது. க்ஷீரான்னம் தெய்வ நிவேதனம் செய்வதற்கு யோக்கியமானது. அது ஒன்றை நிவேதனம் செய்தால் போதும். சகல தேவதைகளும் மகிழ்வர். பலவித ஆகார பதார்த்தங்களை விட பசும்பாலால் சமைத்த பாயசான்னம் தேவதைகளுக்கு பிடித்த உணவு. அதிலும் சாக்ஷாத் யக்ஞ ஸ்வரூபனான சூரியபகவானுக்கு “பாயசான்னப் ப்ரீதிகரன்” என்ற பெயர் உள்ளது. சகல தேவதைகளுக்கும் இது உகந்த உணவு. மேலும் ‘கோ ததி’ எனப்படும் தயிர் முதலானவையும் தெய்வங்களுக்கு உகந்தவையாக கூறப்படுகின்றன.
மேலும் யக்ஞங்களில் தேவதைகளுக்கு ஆஹூதி அளிக்கும் போது கூட பசும்பாலிலிருந்து கிடைத்தவற்றையே உபயோகிக்கிறோம். எனவே யக்ஞம் கோமாதாவால் பரிபூரணமாக நிறைவு பெறுகிறது. யக்ஞ சாலை நிர்மாணம் செய்யும் போது கூட காளைகளால் உழச் செய்வார்கள். யக்ஞ சாலை நிர்மாணித்த பின் பசுவைக் கன்றுடன் உள்ளே அழைத்துச் செல்வார்கள். அதன்மூலம் யக்ஞபூமி கோமாதாவால் புனிதமாக்கப்படுகிறது. எனவே கோமாதாவால்தான் யக்ஞம் நடக்கிறது என்று அறியலாம். யக்ஞத்தால் லோக க்ஷேமம் ஏற்படுவதால் யக்ஞங்களின் தாய், யக்ஞங்களுக்கு கேந்திரம் கோமாதா.
‘பிரம்ம சுதாப்யஸ்ச’ என்ற சொல்லில் இத்தனை கருத்துக்கள் உள்ளன. வேதத்திற்கும், யக்ஞத்திற்கும், பிரம்மா முதலான தேவதைகளுக்கும் கூட மிகப் பிரியமானது கோமாதா! அத்தகைய கோமாதாவுக்கு வந்தனம்!
அடுத்து, “பவித்ராப்ய”- ‘பவித்ரமான வடிவம் கொண்ட பசுக்களுக்கு வந்தனம்!’ இவ்வாறு ஒவ்வொரு சொல்லின் பின்னும் சாஸ்திர ஞானம் உள்ளது. மிகப் பவித்திரமான பசுக்களை ஸ்மரணை செய்தால் கூட நாம் பவித்திரமாகிறோம். காலையில் தூங்கி எழும் போதே கோமாதாவை நினைக்க வேண்டும் என்று மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் கூறியுள்ளார். அதேபோல் கோமாதாவுக்கு சேவை செய்தாலும், பசுக்களின் சமீபத்தில் சென்றாலும், பசுக்களைத் தொட்டாலும், பசுவுக்கு பிரதட்சிணம் செய்தாலும் நம்மிடம் உள்ள தோஷங்கள் விலகி பவித்திரமாவதால் ‘பவித்ராப்ய’ என்ற சொல்லால் கோமாதாவை வணங்குகிறோம்.
பசு நடந்த பூமி பவித்ரம். பசுவைத் தொட்டு வீசிய காற்று பவித்திரம். கோ அம்பாரம் மிக மிக பவித்திரம். அதனால் “பவித்ராப்ய” என்ற சொல் இங்கு சரியாகப் பொருந்தியுள்ளது.
எனவே, “நமோ கோப்ய: ஸ்ரீமதீப்ய: சௌரபேயீப்ய ஏவச!
நமோ பிரஹ்ம சுதாப்யஸ்ச பவித்ராப்யோ நமோ நம:”
“கோமதி வித்யா” என்ற பெயருள்ள இந்த மந்திரத்தை சிரத்தையோடு ஜபம் செய்து இக, பர சுகங்களைப் பெறுவோமாக!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



