
மகரிஷிகள் நம் வாழ்க்கை தூய்மை ஆவதற்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளார்கள். அவற்றை நல்ல பழக்க வழக்கங்களாக ஏற்று நாம் கடைபிடிக்க வேண்டும்.
நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதபோது தெய்வீக சக்தியைப் பெற முடியாமல் போகிறோம். அதோடு தீய சக்திகள் நம் வாழ்க்கையில் பிரவேசிக்கின்றன. அவை உள்ளே நுழைந்து விட்டால் நம் புத்தி சரியாக வேலை செய்யாது. அதர்மத்தை தர்மம் போலவும், தர்மத்தை அதர்மம் போலவும் பார்க்கத் தொடங்குவோம். அதனால் துஷ்ட சக்திகளை அருகில் நெருங்க விடாமல் இருப்பதற்காக ‘சதாச்சாரம்’ எனப்படும் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சூட்சும திருஷ்டி கொண்ட நம் ரிஷிகள் தெரிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சதாச்சாரம் தொடர்பான கருத்துக்கள் நம் முந்தைய தலைமுறைகளில் புத்தகங்களின் உதவி இல்லாமலேயே வாழ்க்கை நடைமுறையில் இருந்து வந்தன. அது சிறிது சிறிதாக மறைந்து போய் விட்டதால் அது குறித்து புத்தகங்கள் எழுத வேண்டி வந்துள்ளது. ஆனால் புத்தகத்தில் இருக்கும் தர்மம் வாழ்க்கைக்குள் புகாது. நம் வாழ்க்கையில் தர்மத்தை கடைபிடித்து வந்தால்தான் அது அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.
அதனால்தான், “ஆச்சார ப்ரபவோ தர்ம:” என்றார் பீஷ்ம பிதாமகர். தர்மத்தை கடைபிடித்து வந்தால்தான் அது நிலைத்து நிற்கும்.
நமக்கிருக்கும் நல்ல பழக்க வழக்கங்களில் முக்கியமாக பெண்களைப் பொருத்தவரை பெண்களுக்கு வரக் கூடிய “ரஜஸ்வலா தோஷம்” எனப்படும் மாதவிடாய் ஏற்படும் போது வீட்டில் எல்லா சாமான்களோடும், சமையல், துணிமணிகளோடும் கலந்து விடாமல் தூரமாக இருப்பார்கள். அது நேற்று முன்பு வரை ஒவ்வொரு வீட்டிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நல்ல பழக்கம். ஆனால் சமீபகாலமாக சிறிது சிறிதாக அதனை மறந்து போய்விட்டோம். அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டோம். மாதவிடாய் நேரத்தில் கூட வீட்டோடு கலக்கச் செய்து விடுகிறோம். அதன் தீய பலன்கள் மிகக் கடுமையாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.

இதற்கு முற்பட்ட காலங்களில் தீட்டான பெண்கள் தூரமாக விலகியிருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. எல்லோர் வீடுகளிலும் கடைபிடித்தார்கள். அனைத்து வர்ணங்களைச் சேர்ந்தவர்களிடமும் ஒவ்வொரு மாதமும் அந்த நான்கு நாட்களும் தூரமாக இருப்பது என்னும் பழக்கம் இருந்தது.
இதற்குப் பின்னால் விஞ்ஞான பூர்வமான காரணங்கள் பல உள்ளன. யாரைக் கேட்டாலும் சயின்டிஃபிக்காக சிந்திக்க வேண்டும் என்று கூறுவார்கள் அல்லவா? அதேபோல் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இதில் நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் இன்னும் நாகரிகம் வளராத நாடுகளில் இதுபோன்ற நல்ல பழக்கங்கள் இல்லை. ஆனால் அவற்றையே சிறந்த நாடுகளாக நினைக்கும் நாம் இது போன்ற நல்ல நாகரீகத்தையும் நற் பழக்கத்தையும் நழுவவிட்டு கொண்டிருக்கிறோம். இதன் மூலம் ஏற்படும் தீய பலன்களை அனுபவித்து வருகிறோம் கூட.
வேதத்தில் இது குறித்து நிறைய அறிவுரைகள் உள்ளன. அவற்றையே புராணங்களிலும் எடுத்துக் கூறியுள்ளார்கள். பூர்வ காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் இதனைக் கடைபிடித்து வந்தாள்.
அன்னமய்யா ஒரு கீர்த்தனையில் இது குறித்து அழகாகப் பாடியுள்ளார்.
“திட்டு லேனி ப்ரதுக்கு ஒக்க தினமைனா சாலு
முட்டு லேனி கூடு ஒக்க முத்தடைனா சாலு” என்கிறார்.
மகரிஷிக்குச் சமமான அன்னமய்யா கூறியுள்ள இந்த வாக்கியங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்.
“யாரிடமும் திட்டு வாங்காத வாழ்க்கை ஒரு நாளானாலும் போதும்! தீட்டுப்படாத உணவு ஒரு பிடியானாலும் போதும்!” என்கிறார்.
தற்காலத்தில் அன்னமய்யா கீர்த்தனங்களை அனைவரும் பாடி வருகிறார்கள். அவை வெறும் சங்கீதத்திற்காக மட்டும் எழுதப்படவில்லை. நம் கலாச்சாரத்துக்குப் பயன்படும் நல்ல பழக்கங்களை கூறும் கீர்த்தனைகள் அவை.
நற்பழக்க வழக்கங்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்றால் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் விலகியிருக்க வேண்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் இந்த விஷயம் குறித்துக் கூறுகையில் “ஒரு பெண் மாதவிடாயில் இருக்கும் போது அப்பெண் தொட்ட துணியையோ நீரையோ உணவையோ பயன்படுத்தக் கூடாது. மாதவிலக்கு தோஷமுள்ள சமயத்தில் அந்த வீட்டில் தெய்வங்களோ பித்ரு தேவதைகளோ எந்தப் பொருளையும் ஏற்க மாட்டார்கள்” என்கிறார்.
அதனால்தான் முன் காலத்தில் அவர்களை சமையலறைக்கும் சுவாமி அறைக்கும் வர அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் சமைத்த உணவைத் தொடமாட்டார்கள். முடிந்தவரை அவர்களோடு பேசாமல் இருப்பார்கள். மீண்டும் அவர்கள் நான்காவது நாள் ஸ்நானம் செய்தபின் ஓரளவு வீட்டிற்குள் அனுமதி இருந்தாலும் ஐந்தாவது நாள் ஸ்நானம் செய்தபின்தான் அவர்கள் மீண்டும் தெய்வ வழிபாடு போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
மந்திரஜபம் எடுத்துக் கொண்ட பெண்கள் அந்த நான்கு நாட்களும் ஜபம் எதையும் மேற்கொள்ள கூடாது. ஐந்தாவது நாள் மீண்டும் மஞ்சள் கலந்த நீரால் ஸ்நானம் செய்து சுத்தமான பின்பே ஜபம் பூஜை போன்றவற்றில் ஈடுபடலாம்.
நாஸ்திகர்களின் விஷயத்தை விட்டு விடுவோம். ஆனால் ஆஸ்திகர்கள் மட்டும் இதனை கடைபிடித்துத்தான் ஆகவேண்டும். “இறைவன் இருக்கிறான். அவன் அருள் செய்கிறான். நாம் ஜபம் செய்தாலும் பூஜை செய்தாலும் இறைவன் கருணை செய்கிறான்” என்ற நம்பிக்கை உள்ள ஆஸ்திக அன்பர்கள் இதையும் கடைபிடிக்க வேண்டும். இதனைக் கடைபிடிக்காமல் எத்தனை பூஜை செய்தாலும் ஸ்தோத்திரம் படித்தாலும் அது தோஷமே!
அதேபோல் மாதவிடாய் சமயத்தில் பெண்கள் இறைநாமமோ ஜபமோ வழிபாடோ செய்யக்கூடாது. கோயில்களுக்குச் செல்லக் கூடாது. இது பௌதீகமாகக் கூறப்படும் அம்சங்கள் அல்ல! சூட்சுமத்தோடு கூடிய அம்சங்கள்!
அச்சமயங்களில் கோவில்களுக்குச் சென்றால் தவறு என்ன? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முதலில் கோவில்களுக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன? அங்கு ஏதோ ஒரு தெய்வீக சக்தி உள்ளது என்றுதானே அங்கே செல்கிறோம்? அப்படி இருக்கும்போது அந்த தெய்வீக சக்தியை பாதுகாக்க வேண்டிய கடமையில் முதன்மையானது நல்ல பழக்கத்தைக் கடைபிடிப்பது.
கோவிலுக்குச் செல்லும்போது ஏன் செருப்பைக் கழற்ற வேண்டும்? என்று தர்க்கம் செய்பவர்களுக்கு என்ன பதில் கூறுவது? இது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் கோவிலுக்கு சென்றால்தான் இறைவன் தென்படுவானா? என்று தர்க்கம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன கூறுவது?
கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற நியமம் இருக்கும் போது இது போன்ற தோஷங்கள் இருக்கும் சமயத்தில் போகக்கூடாது என்று நியமத்தையும் கூட நாம் அறிந்து கடைபிடிக்க வேண்டும்.
ஒருவேளை மாதவிடாயில் உள்ள பெண் ஆலய வளாகத்தில் நுழைந்தால் அந்த ஆலயத்தில் உள்ள தெய்வ சக்தி ஆலயத்திலிருந்து வெளியேறி விடும் என்று ஆகம சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. கோவிலைப் பற்றி எந்த ஆகம சாஸ்திரம் கூறுகிறதோ அதே ஆகம சாஸ்திரம் இந்த விஷயத்தையும் கூறுகிறது. இதனை நினைவில் கொள்ள வேண்டும்.
இது போன்ற தோஷங்கள் நடந்து விடக் கூடும் என்பதால்தான் உற்சவங்களின் போது பலவித கைங்கர்யங்கள் செய்து தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்ட தோஷங்களைப் போக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காகத்தான் பிரம்மோற்சவம் போன்றவையெல்லாம் நடத்தப்படுகின்றன.
ஆனால் தெரிந்தே தவறுகள் செய்வதோ செய்விப்பதோ மிக ஆபத்தானது. இவை சாஸ்திரங்கள் கூறும் விஷயங்கள். எப்போதும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவை. முக்கியமாக யஜுர் வேத பிராஹ்மண மந்திரங்களில் சில விஷயங்கள் கூறப்படுகின்றன.
ஒருமுறை விஸ்வரூபன் என்ற மகாபுருஷரை அவர் செய்த ஒரு தீய செயலுக்கு தண்டனையாக இந்திரன் வதைத்து விடுகிறான். அதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி பாவம் வந்து சேர்கிறது. அந்தப் பாவத்தை பூமி, நீர், மரம், பெண் – இந்த நான்கு பேரிடமும் பிரித்துக் கொடுத்து விடுகிறான். அதனால் அந்த பிரமஹத்தி பாவம் இந்த நால்வரிடமும் நுழைந்து கொண்டது. அதாவது இந்த நால்வரும் உலக நன்மைக்காக அந்த பாவத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார்கள். பூமியிடம் உவர் நிலம், தண்ணீரில் நுரை, மரத்தில் பிசின், பெண்ணில் மாதவிடாய் – இந்த நான்கிலும் பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது. அத்தகைய பாவத்தை உலக நன்மைக்காக நால்வரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால் இந்த நால்வருக்கும் உலகில் அதிகம் கௌரவம் இருக்கும்படியான சிறப்பான இடத்தை இந்திரன் அளித்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
வேதத்தில் உள்ள கருத்துக்களையே புராணம் எடுத்தியம்புகிறது. இயற்கையோடு தொடர்புடைய ஒரு சூட்சுமமான இயல்பை நமக்குப் புரிய வைப்பதற்காக புராணங்களில் கதை வடிவில் கூறியுள்ளார்கள்.
அதனால் இறைவனை நம்பி, கோவில்களை கௌரவித்து, வழிபாடுகளில் ஈடுபடும் நாமனைவரும் இந்த நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். வீட்டில் நற்பழக்கம் இருந்தால்தான் தெய்வங்கள் இருப்பார்கள். நற்பழக்கத்தை விட்டொழித்த வீடுகளில் தீய சக்திகள் வந்து சேரும்.
அது மட்டுமல்ல. மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் இது குறித்து அற்புதமான ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவிக்கின்றன. முக்கியமாக வன்முறையும் குற்றங்களும் இந்த நான்கு நாள் தீட்டு காலங்களில் இருக்கும் பெண்களாலேயே அதிகம் செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அதனால் அதுபோன்ற நேரங்களில் சில நியமங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட நல்ல பழக்கத்தைப் போக்கி கொள்ளாமல் நம் வாழ்க்கையில் நிலை நிறுத்தும் போது தெய்வங்களின் அருள் கிடைக்கிறது.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



