
அபூர்வமான நாகரீகத்தைப் பெற்று உலகிலேயே முதலான கலாசாரத்தைக் கொண்ட பாரதீய தர்மம் இன்றளவும் அந்த மதிப்புகளை முழுவதும் இழக்காமல் உள்ளது.
ஆண் பெண் உறவு பற்றி சனாதன தர்மம் தவச்சக்தி மூலம் அறிந்து சிறந்த அமைப்பினை உருவாக்கியுள்ளது.
சனாதன தர்மத்திற்கு ஆதாரத் தூண் குடும்பம். குடும்பத்திற்கு ஆதாரம் தாம்பத்திய தர்மம். காலப்போக்கில் எத்தனை மாற்றங்கள் எதிர்ப்பட்டாலும் இல்லற தர்மமே பரம்பரையை நிலைக்கச் செய்கிறது.
தாம்பத்தியத்தில் கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமான ஆதர்சங்களோடு வேத சம்பிரதாயம் தெளிவாகக் கூறியுள்ளது. கணவன் மனைவி உறவை சினேக பந்தமாக விவரித்துள்ளது.
மகாபாரதத்தில் யக்ஷன் கேட்கும் கேள்விகளுள் ஒன்று:
“புருஷனுக்கு உண்மையான தோழமை யார்?”
அதற்கு தர்மபுத்திரன் கூறும் பதில்: “பார்யா தைவக்ருதா சகா!”
-“புருஷனுக்கு உண்மையான தோழி மனைவியே!” என்று பதிலளிக்கிறான் தர்மபுத்திரன்.
இந்த சினேகத்தை பலப்படுத்துவதற்கு திருமணத்தில் சப்தபதி மந்திரங்கள் உள்ளன.
“ஸ கா சப்த பதா பவ, ஸ கா யௌ சப்த பதா பபூவ, ஸக்யந்தே கமே யகும், ஸக்யாத்தே மா ஏஷகும், ஸக்யான்னே மாயோஷ்டா:”
- இந்த விவாக மந்திரங்களனைத்தும் தாம்பத்தியம் ஒரு நட்பு என்று தெளிவாகக் கூறுகின்றன.
“ஓ கன்னீ! ஏழு அடிகள் நடந்து என்னுடன் தோழியாக இரு. நாமிருவரும் சிநேகிதர்களாக இருப்போம். உன் சிநேகம் எனக்குக் கிடைத்தது. உன் நட்பை விட்டு நான் என்றும் விலக மாட்டேன். நீயும் என் நட்பை உதறி விடாதே!”
என்பது மேற்சொன்ன மந்திரங்களின் பொருள்.
“தர்மம், அர்த்தம், காமம் – இவற்றில் உன்னை அத்து மீற மாட்டேன் (நாதி சராமி!)” என்று பிரதிக்ஞை செய்கிறான் மணமகன்.
உண்மையில் ஒன்றுக்கொன்று விரோதமாகக் காணப்படும் தர்மம், அர்த்தம், காமம் இவைகளை ஒன்றுபடுத்தும் சக்தி மனைவிக்கே உள்ளது என்று மகாபாரதம் தெரிவிக்கிறது.
நடுநிலையாளராக மனைவி நின்று செல்வத்திலும் காமத்திலும் உள்ள தோஷங்களை நீக்கி புருஷனை தர்ம மார்க்கத்தில் நடத்துகிறாள். இவ்விதம் தர்மத்தோடு அவ்விரண்டும் சேர்ந்து கணவனுக்கு உன்னத நிலையைத் தருகிறது. இதன் ஆழ் பொருளை சிந்தித்து அறிந்தால் உலகளாவிய குடும்ப அமைப்பு பலம் பெற்று அனுகூலமான சமுதாயச் சூழல் நிலைநிறுத்தப்படும்.
யஜூர் வேத மந்திரங்களில் சினேக தர்மம் பற்றிக் கூறுகையில், “சினேகிதனாக எண்ணுபவரை கைவிடக் கூடாது. மித்திரனைக் கைவிட்டவனுக்கு தரமத்தில் பங்கு இல்லை. புண்ணிய மார்க்கம் அவனுக்குத் தென்படாது. அதாவது இகத்திலும் பரத்திலும் சுகம் இருக்காது” என்று வலியுறுத்துகிறது.
சினேக பந்தமான தாம்பத்தியத்தில் இதனை நினைவில் கொள்ள வேண்டும். மனிதன் தன்னைத்தானே எவ்விதம் மன்னித்துக் கொள்வானோ, தன்னில் தானே எவ்விதம் சமாதானப்படுவானோ அதே போல் கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் பொறுமைசாலியாக விளங்கி நட்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சில வேறுபாடுகள் தோன்றினாலும் நிலைத்த நன்மையான தர்மத்திற்காகவும் சிநேகத்தின் கட்டுப்பாட்டிற்காகவும் பொறுமை வகிப்பதே அன்பின் தர்மம்.
இன்று காதல் என்ற சொல் பரவலாக காதில் விழுகிறது. ஆனால் இந்தக் காதலை அனுகூலமான சூழலில் நிலைக்கச் செய்யும் அபூர்வ பந்தம் தாம்பத்தியம்.
“கார்ஹ பத்தியாய தேவா: மஹ்யம் த்வாம் அது:”
-“கிருஹஸ்தாஸ்ரமத்தை நடத்துவதற்காக தேவதைகள் உன்னை எனக்கு அருளியுள்ளார்கள்!” என்பது மணமகன் சொல்லும் திருமண மந்திரம்.
“சம்ராஞ்சி ஸ்வசுரேபவ!” – “என் வீட்டிற்கு நீ மகாராணி”
“மூர்தானம் பத்யுரா ரோஹ!” – “கணவனான என் தலை மேல் அமர்வாயாக!”
என்று உத்தம ஸ்தானத்தில் வைத்து கௌரவிக்கத்தக்கவள் இல்லாள் என்பது விவாகத்தில் கூறப்படும் வேத மந்திரங்களின் அறிவுரை.
“அர்தஸ்ய சங்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்!
சௌசே தர்மேன்ன பக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே!”
-“சம்பாதித்த செல்வத்தை மனைவியின் அதிகாரத்தில் வை. செல்வத்தைக் காப்பதற்கும் செலவழிப்பதற்கும் அவளே அதிகாரி! வீட்டில் நல்ல பழக்க வழக்கங்கள், சுத்தம் சுகாதாரம். தர்மம், உணவு தயாரிப்பது ஆகியவற்றில் அவளுக்கே பூரண அதிகாரம்!” என்று மனு ஸ்ம்ருதி உபதேசிக்கிறது.
பெண்ணுக்கு செல்வத்தை சம்பாதிக்கும் சிரமம் இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்த நம் கலாசாரத்தின் உதாரத் தன்மையை கவனித்தால், வரதட்சணைக்கு ஆசைப்படுபவன் அதமன் என்று எச்சரிக்கும் நம் மகரிஷிகளின் வார்த்தைகளை நினைவில் கொண்டால் பவித்திரமான குடும்ப அமைப்பில் வரதட்சணை என்னும் அபஸ்வரங்கள் கேட்கவே கேட்காது.
“பார்யா ஸ்ரேஷ்டதமா சகா” – என்று ஸ்ம்ருதி கூட கூறியுள்ளது.
குடும்பம் மற்றும் சமுதாயப் பொறுப்புகளை ஒரு யக்ஞமாக நிர்வகிப்பதில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பாடுபட வேண்டும் என்பது வேதம் கூறும் போதனை.
“தம்பதிகளே! நீங்களிருவரும் சேர்ந்து வாழுங்கள். சேர்ந்து தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். ஒரே வழியைப் பின்பற்றுங்கள். உங்கள் மூலம் வம்சம் முழுவதும் உய்ய வேண்டும்” என்பது யஜூர் வேத உபதேசங்கள்.
“த்வஷ்டா ஜாயா மஜனயத்
த்வஷ்டாஸ்த்யை தவாம் பதிம்” – என்னும் இம்மத்திரத்தின் பொருள் –
“ஓ புருஷனே! உனக்காகவே இறைவன் இந்தப் பெண்ணைப் படைத்துள்ளான். அவளுக்குக் கணவனாக உன்னைப் படைத்துள்ளான்”.
உண்மையில் தாம்பத்திய தர்மம் அனாதி காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இது சனாதனம். ஒரே பரமாத்மா தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டாரென்றும் அதுவே பிரகிருதி, புருஷன் என்றும் அந்த அர்த்தநாரீச்வர தத்துவம் மூலமாகவே மொத்த விஸ்வமும் தோன்றியது என்றும் வேதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இந்த விஷயத்தை மனு,
“த்விதாக்ருத் யாத்மனோ தேஹ மர்தேன புருஷோபவத்!
அர்தே நதஸ்யாம் சா நாரீ விரோஜ மஸ்ருஹத் ப்ரபு:!”
என்று தெரிவிக்கிறார்.

தாம்பத்தியமே உலகப் படைப்பிற்கு மூல காரணம். ஒரே பரமதத்துவம் இரண்டானது. அதே போல் பெண்ணும் ஆணும் கருத்தொற்றுமையோடு ஒன்றாக வேண்டும். அந்த ஒன்றில் பரமாத்மாவின் வைபவம் ஒளி வீசும். இயற்கை நியமம் கடைபிடிக்கப்படும் தாம்பத்திய தர்மத்தை மீறுவது இயற்கைக்கு விரோதம். ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப்பட்ட பந்தம் கணவன், மனைவி உறவு. ஒருவர் மேல் ஒருவருக்குள்ள பொறுப்புகளை, தர்மங்களை சாஸ்திரம் இவ்வாறு தெரிவிக்கிறது.
கணவன் மனைவி அன்னியோன்யத்தைப் பற்றி ராமர் கூறிய ஒரு வார்த்தை போதும்.
“அனன்யா ஹி மயா சீதா பாஸ்கரஸ்ய ப்ரபா யதா”
-“சூரியனுக்கு ஒளி போல சீதா எனக்கு வேறானவள் இல்லை!”.
தாம்பத்தியத்தின் உன்னதத்தை உரைக்க இதை விடச் சிறந்த வாக்கியம் உள்ளதா?
இந்நட்பின் பெருமையை உணர்ந்து, தர்மத்தை கடைப்பிடித்து கணவனும் மனைவியும் நடக்கையில் அவர்களுக்கும், சமுதாயத்திற்கும் மேன்மை கிடைக்கிறது.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



