
“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா” – இது ஈசாவாஸ்ய உபநிஷத்திலுள்ள மந்திரம்.
“உபநிஷத்து பரிந்துரைக்கும் பரம சத்தியமான பரமாத்மாவை அடைய வேண்டுமென்றால் தவம், தமம், கர்மா இந்த மூன்றும் இன்றியமையாத சாதனங்கள்” என்பது மேலுள்ள உபநிஷத்து வாக்கியத்தின் பொருள்.
தவம் என்றால் நியமத்தோடு கூடிய வாழ்க்கை. தமம் என்பது புலனடக்கம். கர்மா என்றால் செயல்கள்.
ஆயின் சிலர், “கர்ம மார்க்கத்தின் வழியே பிரம்மஞானம் அடையப் பெற இயலாது. வைராக்கியத்தோடு கூடிய விசாரணை வழியாக மட்டுமே அது கிடைக்கும். கர்ம மார்க்கம் தேவையில்லாதது, அனாவசியம்!” என்று கூறுவார்கள். அதுமட்டுமல்ல கர்ம மார்க்கம் வேறு ஞான மார்க்கம் வேறு என்று சிலர் கூறுவதையும் கேட்கிறோம்.
ஆனால் பிரம்மத்தை அடைவதற்கு கர்ம மார்க்கம் தேவை என்று இந்த மந்திரம் கூறுகிறது. “செயல்கள் தளையை ஏற்படுத்துகின்றன. செயல்களை விடுத்த ஞானமே மோட்சத்தை அளிக்கிறது” என்பது பலரும் கூறும் கருத்து.
தவத்தோடும் புலனடக்கத்துடனும் கூடிய கர்ம மார்க்கம் மோட்சத்தை அடைவதற்குக் காரண ஹேதுவாகிறது.
செயல்களை விட்டொழித்தவன் சோம்பேறியாகிறான். அல்லது ப்ரஷ்டனாகிறான் அதாவது வீழ்ந்தவனாகிறான். செயல்களில் ஈடுபடுவதற்காக அளிக்கப்பட்ட உடலைக் கொண்டு செயல்களைச் செய்யாமல் விட்டால் அவனை வீழ்ந்தவன் என்பார்கள்.
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும், “பலன் மேல் ஆசையைத் தியாகம் செய்து அகங்காரத்தை விட்டொழித்து செயல்களில் ஈடுபட்டால் அந்தச் செயல் பந்தத்திற்கு வழி கோலாது” என்கிறார்.
எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும்?
“வேதா: சர்வாங்காணி சத்ய ஆயதனம்” – என்று அடுத்த வரியில் கூறுகிறது ஈசாவாஸ்ய உபநிஷத்.
“வேதங்களும் வேதங்களுக்கு தொடர்புடைய இதிகாசங்கள் புராணங்கள் போன்ற அங்கங்கள் அனைத்தும் கூட சத்திய ஸ்வரூபமான பரமாத்மாவையே தெரிவிக்கின்றன. ஆதலால் வேதம் விதித்துள்ள செயல்களைச் செய்ய வேண்டும். தவத்தை மேற்கொள்ள வேண்டும். புலனடக்கத்தைப் பழக வேண்டும்” என்கிறது.

நியமத்தோடு கூடிய வாழ்க்கையும் இந்திரிய நிக்ரஹமும் நற்செயலும் சேரும்போது அது பரமாத்மாவை அடைய உபயோகப்படும் சாதனையாகிறது.
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு அகம்பாவத்தை விலக்கிவிட்டு செய்யும் செயல்கள் ஞானத்தோடு தொடர்புடைய செயல்களாகின்றன. அப்படிப்பட்ட செயல்கள் பரமாத்மாவை அடைவதற்கும் காரணம் ஆகின்றன என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
அதுமட்டுமல்ல. தவம், தமம் இரண்டும் இணையும்போது, செய்யும் செயல்களுக்கு புஷ்டி ஏற்படுகிறது. காமம், குரோதம் போன்ற விகார உணர்வுகள் ஏற்படாமல் கவனமாக புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மனிதனுக்கு இயல்பாக விலங்குகளைப் போல் ஏற்படும் ஆவேசங்களையும் விகார உணர்வுகளையும் புத்திபூர்வமாக கட்டுப்படுத்த முடியுமானால் அப்படிப்பட்ட புலனடக்கத்தோடு கூடிய கர்ம மார்க்கம் பரமாத்மாவை அடையக் காரணமாகிறது.
“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா
வேதா: சர்வாங்காணி சத்ய ஆயதனம் !!”
என்ற இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு அவ்விதம் நடக்க முயற்சிக்க வேண்டும்.
எனவே உபநிஷத் வாக்கியங்களும் கர்ம சித்தாந்தத்தை பரிந்துரைக்கின்றன. தவத்தைக் கடைபிடிக்கும்படி கூறுகின்றன. புலனடக்கத்தை மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றன.
யாரிடம் புலனடக்கமும் தவமும் இருக்குமோ அவரிடம் சக்தி ஏற்படுகிறது. அந்த சக்தியால் சாட்சாத் பரமாத்மாவைக் கூட அடைய முடியும். நம்மில் இருக்கும் தெய்வீக சக்தியைத் தூண்ட செய்யும் இயல்பு இவ்விரண்டிற்கும் உள்ளது. நம் சாஸ்திரங்கள் அனைத்தும் இவ்விரண்டையுமே வலியுறுத்திக் கூறுகின்றன.
எனவே ஆன்மீக சாதனை என்ற உடனே நியமத்தோடு கூடிய தவ வாழ்க்கை, புலனடக்கத்தோடு கூடிய தமம், நற்செயல்கள் புரிதல் இந்த மூன்றையும் நினைவில் கொள்ளவேண்டும்.
“பரமாத்மாவை அடைவதற்கும் (ப்ராப்தி), பரமாத்மாவை மகிழச் செய்வதற்கும் (ப்ரீத்தி) இவற்றைச் செய்தால் உய்வடைவோம்!” என்று கூறியருளிய உபநிஷத் வாக்கியத்திற்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



