
ஓசை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது பற்றி ரிஷிகள் நிச்சயமான போதனைகளைச் செய்துள்ளார்கள். தற்சமயம் நாம் பலவிதமான மாசுகளால் சூழப்பட்டுள்ளோம்.
காற்று மாசு, நீர் மாசு, இடத்தின் மாசு….. இப்படி ஒன்றல்ல! அதோடு ஒலி மாசு கூட பயங்கரமாக உள்ளது. முக்கியமாக இந்த ஒலி மாசினை கட்டுப்படுத்துவதற்கு பலவித சட்டங்கள் உள்ளன. பாரத தேசத்தில் சட்டங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். ஆனால் எதையும் சரியாக அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.
அதன் மூலம் சாமானிய மக்கள் பல விதங்களில் இடையூறுக்கு ஆளாகிறார்கள். சத்த மாசு எத்தனை ஆபத்தானது? அதிலிருந்து வெளிவருவது எவ்வாறு? உண்மையில் எவ்வாறு சத்தத்தை கட்டுப்படுத்துவது? இது போன்ற விஷயங்களைப் பற்றி வேத மாதா கூறியுள்ள சில கருத்துக்களை அறிந்து கொள்வோம்.
முக்கியமாக நாம் ஒரு நல்ல வார்த்தையைச் சொல்ல நினைக்கும்போது கூட அதற்கென்று சமயம், சந்தர்ப்பம், நிலைமை மூன்றையும் கவனிக்கவேண்டும். இதனையே இடம் பொருள் ஏவல் என்கிறோம். சந்தர்ப்பம் சரியில்லாத போது நல்ல விஷயங்களை கூறினால் அது கலப்படமாகி விடுகிறது…. களங்கமடைந்து விடுகிறது.
அதே போல் அடுத்தவருக்கு மன ஒப்புதல் கூட இருக்க வேண்டும். அவர் கேட்பதற்கு உடன்பாடாக இருக்கும் போதுதான் கூறவேண்டும். இல்லாத போது நம் பேச்சு வீணாகிறது. வீண் பேச்சு பேசக் கூடாது அல்லவா? அதிலும் உயர்ந்த வாக்கியங்களை வீணாக்கக்கூடாது கூட!
அதனால் தேவையற்றவர்களுக்கு பெரிய போதனை எதுவும் செய்யக் கூடாது. அப்போது இரண்டு வித ஆபத்துகள் விளையும். ஒன்று நல்ல விஷயமானாலும் அடுத்தவர் கேட்கமாட்டார். இரண்டாவது அதனை அலட்சியப்படுத்தி விடுவார். இந்த இரண்டு தோஷங்களும் நம்மை வந்தடையும்.
பேச்சினை எவ்வாறு இயம்ப வேண்டும்? மௌனத்தால் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பேசுவதாகக் கூறி பெரிய பெரிய குரலில் சத்தங்கள் செய்து பிறரை துன்புறுத்தக்கூடாது.
இந்த ஒலி மாசு பற்றி கூறுகையில், “வாசம் வதத பத்ரயா !” என்றார்கள் வேதத்தில்.
“பத்ரமான வாக்கு மிருதுவாகவும் மதுரமாகவும் இருக்க வேண்டும்!”. அனுமன் ராமச்சந்திர மூர்த்தியிடம் பேசும் போது எவ்வாறு பேசினார் என்பதை ராமர் கூறுவார். “மத்யம ஸ்வரேண !”. நிதானமான குரலில் பேசவேண்டும். மிக மெதுவாகப் பேசுவதும் தவறு. ஒரேடியாக கத்திப் பேசுவதும் தவறு.
பேச்சில் எப்போதும் கத்திப் பேசும் இயல்பு மிகவும் தவறானது. சிலர் எது பேசினாலும் உரத்த குரலில் பேசுவார்கள். அது ஒரு துரதிருஷ்டம்! பேசும் விதம் என்று ஒன்று இருக்கிறது. மிருதுவாகப் பேசவேண்டும்.
சத்தமாக கத்திப் பேசுபவர்கள் சொந்தக் குரலில் பேசுவதோடு மட்டுமின்றி இன்னுமொரு குரலின் உதவியையும் எடுத்துக்கொள்வார்கள். அவையே தற்காலத்தில் விஞ்ஞானம் பெருகியதால் வந்துள்ள ஒலிபெருக்கிகள், மைக்குகள், ஸ்பீக்கர்கள் போன்றவை. இவற்றின் உதவியோடு வெளிப்படும் ஒலி மாசு கொஞ்ச நஞ்சமல்ல!

தற்சமயம் இவற்றால் நிகழும் ஆபத்துக்கள் நிறைய உள்ளன. ஆன்மீக நிகழ்ச்சிகளாகட்டும், பிற கலை நிகழ்ச்சிகளாகட்டும், அரசியல் நிகழ்வுகளாகட்டும்… எவையானாலும் சரி…. ஒரே கூச்சல்கள் சத்தங்கள்….! அவற்றால் எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை. இவை சமுதாயத்தின் நடைமுறைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
உதாரணத்திற்கு ஒரு ஆலயத்தில் காலையிலேயே ஏதோ பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிரார்த்தனை அந்த தேவாலயத்தின் எல்லைக்குள்ளேயே கட்டுப்பட்டிருக்க வேண்டும். வரம்புக்குட்பட்டு பிராகாரத்திற்கு உள்ளேயே இருக்க வேண்டும். அதற்குள் நுழைபவர்களுக்கு கேட்டால் போதும். அவர்களின் மனதுக்கு அமைதியை ஏற்படுத்தும்படி நிதானமான ஒலியில் இருக்க வேண்டுமே தவிர தீவிரமான ஒலியில் இருக்கக்கூடாது. பெரிய சத்தமாக இருந்தால் ஆலயத்துக்கு வருபவர்களின் மனம் கூட குழம்பிவிடும்.
ஒரு பாடல் நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக ஊரெங்கும் எதிரொலிக்கும் விதமாக பெரிதாக ஒலிபரப்பத் தேவையில்லை. நாம் விரும்புவதே அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று உள்ளதா என்ன?
மேலும் எத்தனை நல்ல பாடலானாலும் சரி கேட்பதற்கு ஒரு மானசீக நிலை இருக்க வேண்டும். நம் மனம் நன்றாக இருக்கிறது என்றால் நாம் கேட்டு மகிழலாம். வீட்டில், வீதியில், ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் அதை கேட்க வேண்டும் என்று ஆரவாரம் செய்தால் அவர்கள் சகிப்புத்தன்மையோடு போனால் போகிறதென்று ஒதுங்கிப் போகிறார்களே தவிர உண்மையில் அவர்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்!
ஆலயமோ, பிறருடைய பிரார்த்தனை மந்திரங்களோ… இவை அனைத்தும் கூட சத்த மாசினைப் பெருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதற்காக பிரார்த்தனைகள் வேண்டாம், மந்திரங்கள் வேண்டாம், ஸ்லோகங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. அவற்றில் நிச்சயம் சிறந்த பிரபாவம் உள்ளது. சிறந்த தெய்வீக அலைகளை ஏற்படுத்தக் கூடிய சக்தி உள்ளது. ஆனால் ஓசையை வெளிப்படுத்துவதில் சில வரைமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலச்சில மந்திரங்களை சத்தமாக உச்சரிக்கக் கூடாது என்பார்கள். அப்படி இருக்க மைக் போட்டு ஊரெங்கும் எதிரொலிக்கச் செய்வது எதற்காக? மேலும் ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும். அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை அவருடையது. எத்தனை சிறந்த பாடல்கள் வீதியில் ஒலித்தாலும் ஒரு வீட்டில் அமர்ந்து அமைதியாக ஜபம் செய்பவருக்கு அது நிச்சயம் இடையூறு ஏற்படுத்தும். அதனால் பெரிய சத்தங்களை மக்கள் கூட்டத்திடம் எடுத்துச்செல்லக்கூடாது.
அது போன்ற ஒலிகள், பாடல்கள் வேண்டும் என்று ஆர்வத்தோடு வருபவர்கள் அவற்றை கேட்பதற்கு வசதி செய்து தருவதில் தவறு இல்லை. எனவே ஒலி மாசு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமக்குத்தாமே ஜாக்கிரதையைக் கடைபிடிக்க வேண்டும்.
சாமானிய மக்கள் ஏதோ சொந்த வேலையாக சாலையில் செல்கையில் யாரோ சிலர் தம்முடைய சபையை நடத்தி கொண்டு சாலையில் நடந்து செல்லும் மக்களுக்கு இடையூறாக கூட்டம் நடத்தி சத்தம் போடுகிறார்கள். அதன் மூலம் பல்வேறு வாகனங்களில் வருகையும் தொல்லையும் ஏற்படுகின்றன. இன்னும் மைக்கில் அவர்கள் ஏற்படுத்தும் சத்தமும் தொந்தரவும்…… வீதியெங்கும் உபயோகமில்லாத ஃப்ளெக்ஸிகளும்….. இவையனைத்தும் காட்சி மாசம், ஒலி மாசும் ஏற்படுத்துகின்றன. இது அநாகரீகத்திற்குச் சின்னம். இதனை அறிய வேண்டும்.
நாம் நாகரீகத்தில் உயர்ந்து விட்டதாக நினைக்கிறோம். டெக்னிக்கல் முன்னேற்றம் வேறு. கலாச்சார முன்னேற்றம் வேறு. இப்போது தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளதே தவிர பண்பாட்டில் முன்னேற்றம் தென்படுவதில்லை. தொழில்நுட்பத்தை பண்பாட்டோடு இணைத்து உபயோகிக்கத் தெரியவேண்டும்.
நம்முடைய பக்தி நம் வரம்புக்குட்பட்டு இருக்க வேண்டும். அதனை கடைவீதியில் விளம்பரத்திற்கு வைத்தால் சிலர் வெறுப்படைவார்கள். சிலர் அருவருப்பார்கள். சிலர் எரிச்சலடைவார்கள். அப்போது என்னவாகும்? பக்தி என்ற உயர்ந்த பாவனையை பிறர் அவமதிக்கும்படி செய்தவர்களாவோம். இதனை நினைவில் நிறுத்த வேண்டும்.
சமுதாயத்தில் தனிப்பட்ட வாழ்க்கை சிலருக்கு இருக்கும். அவற்றில் நாம் குழப்பம் விளைவிக்கக் கூடாது. இதனைப் புரிந்து கொண்டு அவரவர் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நிலைகளில் அவர்களின் சத்தங்களையும் சந்தடிகளையும் செய்து கொள்ள வேண்டும். அப்படியின்றி பிறருக்கு தொந்தரவு ஏற்படும்படி நடந்துகொள்ளக்கூடாது.
சப்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வேதம் ஸ்வர நியமம் கூறியுள்ளது. எந்த ஸ்தாயியில் உச்சரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்தக் காலத்தில் கருவிகள் எதுவும் இந்த நிலையிலேயே பேசும் போது எதிரில் இருப்பவருடன் எத்தனை மிருதுவாக பேச வேண்டும் என்று கூறியுள்ளது.
இப்போது கருவிகள் வந்தபின் உலகிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற அம்சத்தை வேதம் கூறியுள்ள போதனையிலிருந்து கிரகித்து நாம் அமைதியைப் பெறவேண்டும். பிரசாந்தமான, நிசப்தமான சூழல் நிகழும் வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். ஜெகதம்பாளின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



