spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அம்மாவை மாற்ற வேண்டாம்!

அம்மாவை மாற்ற வேண்டாம்!

- Advertisement -

நாம் பிறந்த இடம், பிறந்த மதம், பழக்க வழக்கங்கள், மொழி… இவை நமக்குத் தாய் போன்றவை. இவற்றின் மேல் மதிப்பு, புரிதல், அன்பு போன்றவை மனிதத் தன்மைக்கு எடுத்துக்காட்டு. இதற்கு எதிரான கருத்துக்களை என்றுமே ஏற்கக்கூடாது.

“உன்னுடைய தர்மம் எப்படிப்பட்டதானாலும் அதனை முழுமையான மனதோடு கடைபிடிப்பதே முக்கியம். பிறர் தர்மம் அதைவிட அழகாகத் தென்படலாமே தவிர கடைப்பிடிப்பதற்கு ஏற்புடையதல்ல. உன் தர்மத்தில் மரணம் எதிர்பட்டாலும் சரி கடைப்பிடி! ஆனால் பிறர் தர்மத்தை ஸ்வீகரிக்காதே!” என்று போதனை செய்த கீதை வாக்கு பாரதீய சனாதன தர்மத்தின் இதயத்தை வெளிப்படுத்துகிறது.

அனைத்து தர்மங்களும், அனைத்து மதங்களும் அதனதன் சம்பிரதாயங்களோடு இருந்தால் அனைத்தும் அழகாக அமைதியாக வளரும். ஒரு தர்மத்தில் உள்ளவர்களை, ஒரு சம்பிரதாயத்தில் நியமத்தோடு வாழ்பவர்களை அந்த மார்க்கத்திலிருந்து பிரிப்பதற்கு முயற்சிப்பது துரோகச் செயல்..

பாரதநாட்டு வாழ்வியல் சம்பிரதாயங்களையும் உன்னதமான வாழ்க்கை வழிமுறைகளையும் பார்த்து இது ஒரு ‘மதம்’ என்ற பிரமையில் ஆழ்ந்தார்கள். ‘இந்து மதம்’ என்று பெயர் வைத்தார்கள்.

பலவித இதர மதங்கள் நம் வாழ்க்கைப் பிரவாகத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தன. நம்மவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதற்கு முயற்சித்தன. நம் தாயே அனைவருக்கும் தாயாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. அவரவர் தாய் அவரவருக்கு உயர்ந்தவர். ஆனால் இந்த இங்கிதம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

நம் தேசத்தின் மீது இரண்டு வித படையெடுப்புகள் நிகழ்ந்தன. ஒன்று பூமியின் பகுதிகளை ஆக்கிரமிப்பது. இரண்டாவது கலாச்சாரத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்வது, சில ஆயிரம் ஆண்டுகளாக பலவித சந்தர்ப்பங்களில் இவை நடந்தேறின. இந்தச் சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்டன. சிதிலமடைந்த ஆலயங்களும் மறைந்து போன வித்யைகளும் இவற்றுக்குச் சான்றுகள்!

அரசியல் கட்சிகள் இவ்விரண்டு வித எதிர்ப்புகளையும் இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றன. தம் புகழை இந்த தேசத்தில் நிலைக்கச் செய்வதற்காக கோடிக்கணக்கான தொகையை கொண்டு வந்து குவித்து தம் மதத்தின் பக்கம் மாற்றம் செய்வதற்கு கல்வி, மருத்துவம், செல்வம் முதலான இரைகளோடு அயல்நாடுகள் குற்றங்களை இழைத்துக் கொண்டே வருகின்றன. அவற்றை பார்த்தும் கூட அரசாங்கங்கள் செக்யூலரிஸம் என்ற பெயரில் உண்மையைப் பார்க்காத குருட்டுத் தனத்தை அடைக்கலம் புகுந்துள்ளன. நம் சட்டங்கள் அனைத்தும் அந்த குருட்டு தனத்தையே பாதுகாக்கின்றன.

ஆன்மீகம், பக்தி, ஞானம், வைராக்கியம், நீதி, மனித விழுமியங்கள் இவை பற்றி பிற நாடுகள் போதிக்க வேண்டிய நிலையில் நம் தேசம் எப்போதுமே இருந்ததில்லை.

இந்த விழுமியங்களில் எப்போதும் பாரத தேசத்துடையதே சிகரத்தின் உச்சி. இதன் பாத நகத்தின் இடத்தைக் கூட எந்த நாட்டு கலாச்சாரமும் எட்டி விட இயலாது. அந்தந்த பிற தர்மங்களின் தர்ம நூல்களில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துக்களைக் கேட்டு நன்மை அடைய வேண்டிய நிலைமை பாரத தேசத்திற்குத் தேவையில்லை. அவற்றை நம் உயர்ந்த தேசத்தின் வேதம், பகவத் கீதை போன்றவற்றின் கருத்துக்களோடு ஒப்பிடவும் தேவையில்லை.

இங்கு பிறந்த நீதி சாஸ்திரங்கள், நீதி வாக்கியங்கள், ஹித போதனைகளை விடச் சிறந்த கருத்துக்கள் எந்த நாட்டு தர்ம நூல்களிலும் இருக்காது. அந்த நல்ல கருத்துக்கள் நம் நீதிசதகங்களிலேயே காணப்படுகின்றன.

இங்கிருக்கும் சனாதன கலாச்சாரத்தின் ஜீவநாடி அகண்டமாக பிரவகித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகா நதியில் வாழ்பவர்களுக்கு ஊற்று நீரில் என்ன வேலை? இரண்டிலும் நீர் இருக்கிறதல்லவா? என்று ஒற்றுமை காட்டுவதும் நம் கலாசாரத்தோடு பிற தர்மங்களின் போதனைகளை ஒப்பிடுவதும் ஒன்றே!

இந்த நம் கலாச்சாரம் தன் தர்மத்திற்கு வரச் சொல்லி யாரையும் அழைக்காது. தானும் பிற தர்மங்களுக்குச் செல்லாது. ஆனால் அனைத்து சிந்தனைகளுக்கும் மதிப்பளிக்கிறது…. ஏற்கிறது… ஸ்பூர்த்தி அடைகிறது. இது அதன் சம்பிரதாயம். இறுதியில் வேதத்தில் இல்லாத ‘சார்வாக’ மதங்களைக் கூட தர்ம சாஸ்திரங்களாகப் படித்தறிவது இங்குள்ள வழக்கம்.

இந்த ஜீவ நதியிலிருந்து விலகாமல் இருப்பதற்கும் ஸ்வதர்மத்தைக் கடைபிடிப்பதில் நிஷ்டை ஏற்படுத்துவதற்கும் தர்ம போதனைகள் நடந்தனவே தவிர பிற மதத்தவர்களை மதம் மாற்றுவதற்காக பிரச்சாரங்கள் நடக்கவில்லை.

ஒவ்வொரு தர்மத்தின் பின்பும் ஒவ்வொரு கலாச்சாரமும், வாழ்க்கை வழிமுறையும் இருக்கும். ஒரே சத்தியத்தை அடைவதற்கு இவை அனைத்தும் மார்க்கங்களேயானாலும் அந்தந்த மார்க்கத்தின் இயல்பு அததற்கு உண்டு.

இரண்டையும் சேர்ப்பதற்கு முயற்சிப்பதோ அந்த மார்க்கத்தை இந்த மார்க்கத்திற்கு இழுப்பதோ நடந்தால் இலட்சியத்தை அடைய முடியாமல் போவதோடு ஒரு தீய கலாச்சாரமாக அது மாறிவிடும். அதுதான் தற்போது நடக்கிறது.

நாம் எங்கே பிறக்க வேண்டும்? எந்த கலாச்சாரத்தில், எந்த சம்பிரதாயத்தில் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பதை நாம் பிறக்கும்போதே தீர்மானித்து விடுவான் பரமாத்மா. போன ஜென்மங்களின் சாதனைகள் பிற்பாடு வரும் ஜென்மங்களில் தொடரும் என்று கீதை போன்றவை கூறியுள்ள தர்மங்களின் ரகசியம் இதுவே!

நம் மார்கத்தில் இருந்தபடியே பிறர் சாதித்த வித்யைகளின் சூட்சுமங்களை கவனிப்பது, நம் திறமையின் சூட்சுமங்களைப் பிறருக்குக் கற்றுத் தருவது போன்றவற்றை சம்மதித்துள்ளது நம் கலாச்சாரம். காரணம் இது அனைவரும் நினைப்பது போல் ஒரு மதம் அல்ல!

“ஆசார ப்ரபவோ தர்ம:” – கடைபிடிப்பதால் தர்மம் நிலைத்து நிற்கிறதே தவிர பிரச்சாரத்தால் அல்ல!

பிரச்சாரம் செய்வதற்கோ புள்ளி விவரங்களோடு எண்ணிக்கை அதிகமாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆரவாரத்துடன் கூடிய விளம்பரத்திற்கோ மதமாற்றம் செய்து மெஜாரிட்டி அதிகரித்துக் கொள்வதற்கோ மதம் ஒன்றும் அரசியல் கட்சி அல்ல!

எந்த நாட்டின் யூகத்திற்கும் எட்டாத யோக வித்யை, ஜோதிட வித்யை, வைத்திய வித்யை, தந்திர வித்யை, உபாசனை… போன்றவற்றை முழுமையாக பல யுகங்கள் முன்பே பாரதீய ருஷிகள் தரிசித்து பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

காலத்தின் வேகத்தால் வரும் மாற்றங்களால் புதிய வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் வாழ்க்கையின் எல்லைக்குள் வரும். அவற்றை அவரவர் சௌகரியங்களுக்காக அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.

எத்தனை மத மாற்றங்கள் ஏற்படினும் நம் ரத்தத்தில் உள்ள பாரதீயும் போய்விடுமா என்ன? அதனால்தான் புதிய மதங்களுக்குள் புகுந்தாலும் தம் சம்பிரதாயத்தை விட்டுவிடாமல் இங்கிருக்கும் அலங்காரங்கள், பூஜை, கீர்த்தனைகள், தூபதீப ஆராதனை, அபிஷேகம்… போன்ற பழைய வாசனையோடு புதிய வாழ்க்கை வாழ்வதைக் காண்கிறோம். அது இகமும் பரமுமற்ற சர்வ நாசனத்திற்கு வழி கோலும்.

பாரதீய மொழிகளை வக்கிரமாக திருப்பிக் கொண்டு அவர்களின் நூல்களை அந்த மொழியில் போதனை செய்து நெற்றியிலிருந்து பொட்டைத் துடைத்து விட்டதால் மட்டுமே தம் மதத்தை ஸ்தாபித்துவிட்டதாகப் பொருளல்ல!

தங்கள் வாக்கியங்களால் ஏதாவது புது ஸ்பூர்த்திகளை விளைவித்தார்களா? ஆன்மீக வாழ்க்கை வழிமுறையையும் பாரதீய இயல்பான தர்மத்தையும் விட உயர்ந்ததாக வேறு எவரும் எதுவும் அளித்துவிட முடியாது.

ஆனாலும் இந்த நம் கலாசாரத்தின் மீது தாக்குதல் விபரீதமாகப் பெருகி வருகிறது. சுதந்திரம் வரும் முன்பு அயலார் நம் நாட்டை ஆண்டார்கள். தற்போது அயலாரின் கலாச்சாரத்தால் அரசாளவேண்டும் என்று பார்க்கிறார்கள். இதற்கு இங்குள்ள அரசாட்சி வழிமுறைகள் சிம்மதுவாரங்களைத் திறந்துவிட்டுள்ளனர். காரணம் நம் கலாச்சாரத்தைப் பற்றி ஏதுமறியாத பேதமையோடு அரசாள்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள வழிமுறைகளே!

சேர்ந்து வாழ்வது வேறு! சேர்த்துக் கொண்டு வாழ்வது வேறு! ஒருவரை ஒருவர் கெளரவித்துக் கொண்டு, “மா வித்விஷாவஹை !” – “நாம் பரஸ்பரம் துவேஷித்துக் கொள்ள வேண்டாம்” என்ற முறையில் வாழும் சமன்வயமான கருத்தொற்றுமை, சகிப்புத் தன்மை நம் நாட்டிற்கு உள்ளது. அதனால்தான் இந்த நீச்சமான வழிகளெல்லாம் செல்லுபடியாகின்றன.

மதமாற்ற எதிர்ப்பை சட்டரீதியாக ஏற்படுத்துவதற்கு தூய உள்ளத்தோடு முயற்சியை அரசாங்கங்கள் கையிலெடுக்காவிட்டால் இந்த தாக்குதல்கள் இது போலவே தொடர்ந்து கொண்டிருக்கும். இந்த விஷம் பரவுவதை தாங்க இயலாமல் ஆங்காங்கே பொறுமையின்மையால் துர்மரணங்கள் நிகழ வழிவகுக்கும்.

எனவே சரியான புரிதல் உள்ள முடிவு அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டும்! புரிதலோடு கூடிய கண்ணோட்டம் மக்களிடம் விழித்தெழ வேண்டும்!!
சுபம்!!!

தெலுங்கில்: – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: – ராஜி ரகுநாதன்
(ருஷி பீடம் – விசிஷ்ட சஞ்சிகை – 2019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe