விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் “அன்னமன்னாத ஏவச” என்ற நாமம் காணப்படுகிறது. “அன்னம், அன்னாத:” – அன்னமும் விஷ்ணுவே! அன்னாதனும் விஷ்ணுவே! அதாவது உணவும் இறைவனின் சொரூபம்! உணவு உண்பவனும் இறைவனின் சொரூபம்! என்ற இரண்டு நாமங்கள் இதில் உள்ளன.
நாமங்களின் பெயரால் வியாச பகவான் நமக்கு அளித்துள்ள உயர்ந்த விஞ்ஞானம் விஷ்ணு சஹஸ்ரநாமம்! இவ்விரண்டையும் பற்றி யோசித்துப் பார்த்தால் பிரபஞ்சம் முழுவதும் இவ்விரண்டாலும்தான் நிறைந்துள்ளது என்பதை அறிய முடியும். அன்னம் – அன்னாதன்.
இதே கருத்தை தைத்திரீய உபநிஷத், “அஹமன்ன மஹமன்ன மஹமன்னம்….. அஹமன்னாதோ… அஹமன்னாதோ…. அஹமன்னாத: !” என்ற வாக்கியங்களால் கூறுகிறது.
அதாவது அன்னமும் நானே! அன்னாதனும் நானே! இங்கு ‘அஹம்’ என்ற சொல் பரமாத்மாவை உத்தேசித்து கூறப்படுகிறது.
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் அஹம் என்ற சொல்லால் இறைவனையே குறிப்பிடுகிறார்.
“அஹம் வைஸ்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹ மாஸ்ரித: !
ப்ராணாபான சமாயுக்த: பசான்யன்னம் சதுர்விதம் !!
“அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசயஸ்ரித: !
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாம்ந்த ஏவச !!”
இவ்வாறு பல இடங்களில் அஹம் என்ற பதம் காணப்படுகிறது. இங்கு அஹம் என்பது ‘நான்’ என்ற எண்ணத்தில் கூறப்படுகிறது. இந்த ‘நான்’ என்பது மனிதன் தன்னைத்தானே நினைக்கும் ‘நான்’ என்றல்லாமல் ‘ஈஸ்வர சைதன்யமே நான்’ என்ற பாவனையை உணர வேண்டும். ஏனென்றால் இது உபநிஷத் பதம்.
அன்னம், அன்னாதன் – முதலில் இவை பற்றி ஆராய்ந்து பின் ‘அஹம்’ பற்றி ஆலோசிப்போம்!
அன்னம் என்றால் அனுபவிக்கப்படும் பதார்த்தம். அன்னாதன் என்றால் அனுபவிப்பவன். அதாவது உண்ணப்படுவது அன்னம். தின்பவன் அன்னாதன். தின்னப்படுவதும் தின்பவனும் கூட இறைவனின் சொரூபங்களே என்ற பாவனையை இங்கு காண்பிக்கிறார் ருஷி.
இங்கு நாம் புசிக்கும் உணவு வகைகள் மட்டுமே அன்னம் என்பதல்ல பொருள். அனுபவிக்கப்படும் பிரபஞ்சம் முழுவதுமே அன்னம்! அனுபவிக்கும் ஜீவன் அன்னாதன். இது இதன் பொருள்!
ஒவ்வொரு ஜீவனும் இந்த பிரபஞ்சத்தில் அனுபவித்துக் கொண்டே இருக்கிறான். அனுபவங்கள் இரண்டு விதம். சுகம், துக்கம். ஜீவன் சுக, துக்கங்கள் இரண்டையும் பிரபஞ்சத்திலிருந்து பெறுகிறான். ஒரு ஒலியைக் கேட்டால் ஆனந்தம் ஏற்படுகிறது. வேறொரு ஒலியைக் கேட்டால் துயரம் ஏற்படுகிறது.
அதேபோல் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்…. இந்த பஞ்ச தன்மாத்திரைகளால் ஜீவன் சுகங்களையும் துக்கங்களையும் அனுபவிக்கிறான். ஜீவன் துக்கத்திற்குக் காரணமான பஞ்ச தன்மாத்திரைகளை விரும்புவதில்லை. சுகத்தை விளைவிக்கும் பஞ்ச தன்மாத்திரைகளை மட்டும் விரும்பி வரவேற்கிறான். ஆனால் ஜீவனின் விருப்பு வெறுப்புகளுக்கு தக்க வருபவையல்ல அவை! ஜீவனின் கர்மவினைப்படி வரும்… போகும்!
எனவே நாம் அனுபவிக்கும் பிரபஞ்சம் அனைத்தும் மட்டுமின்றி இந்த பஞ்ச தன்மாத்திரைகளும் கூட அன்ன சொரூபமே! இதனை நான் அனுபவிக்கிறேன் என்று யாரொருவன் நினைக்கிறானோ அவன் ஜீவன்! ஆயின் இவ்விதம் எத்தனை எத்தனையோ ஜீவர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவருமே அன்னாதர்களா? என்று கேட்டால் இந்த அன்னாதர்கள் கூட அன்னமாக மாறுகிறார்கள்!
எவ்வாறெனில் ஒருவன் ஏதோ ஒன்றை அனுபவிக்கிறான் என்றால் அவனைக் கூட இன்னொரு ஜீவன் அனுபவிப்பான்! ஒன்றையொன்று தின்று வளர்கிறது இந்த பிரபஞ்சம் என்பதைக் காண்கிறோம்! ஒருவன் ஒன்றைத் தின்றால் அவனை இன்னொருவன் தின்கிறான். இதனை நாம் விலங்கு பறவை இனங்களில் கூட பார்க்கிறோம்.
அதேபோல் பிரபஞ்சத்தை நாம் அனுபவிக்கிறோம் என்றால் நம்மைக் கூட பிரபஞ்சம் அனுபவித்து வருகிறது என்பதே உண்மை! எனவே அன்னம் அன்னாதன் ஆகிறது. அன்னாதன் அன்னம் ஆகிறான்.
பிரபஞ்சம் அனைத்தும் அன்னம் அன்னாதன் தத்துவத்தால் ஆனது. இதனை அறிய முடிந்தால் அன்னம் அன்னாதன் என்ற இரண்டு பாகங்களாகத் தென்படும் பிரபஞ்சம் முழுவதும் பரமேஸ்வர சொரூபமே என்பதை உணரலாம்.
“ஈசாவாஸ்யம் இதம் சர்வம்…!” எனப்படும் கருத்தும் இதனையே தெரிவிக்கிறது. இதே விஷயத்தை, ‘அன்ன மன்னாத ஏவச !’ என்று விஷ்ணு சஹஸ்ரநாமமும் கூறுகிறது. தைத்ரீய உபநிஷத் கூட கூறுகிறது.
அனுபவிக்கப்படும் பிரபஞ்சம் அனுபவிக்கும் ஜீவன் இவ்விரண்டுமே பகவத் சொரூபம்! அனுபவிக்கப்படும் பதார்த்தம் இருப்பதால் அனுபவிப்பவன் உள்ளானா? அல்லது அனுபவிப்பவன் இருப்பதால் அனுபவிக்கப்படும் பதார்த்தம் உள்ளதா? இதனை ஆலோசிக்கவேண்டும்.
இவ்விரண்டும் ஒன்றின் மீது ஒன்று ஆதாரப்பட்டுள்ளதாகவே தென்படுகிறது. உண்மையில் அனுபவிக்கும் ‘நான்’ இருந்தால்தான் பிரபஞ்சமும் இருக்கும். ‘நான்’ என்பதே இல்லாத இல்லாதபோது பிரபஞ்சம் அனுபவத்திற்கே வராதல்லவா? எனவே தீர்க்கமாக ஆலோசித்தால் நம்மை நாமே அனுபவித்து வருகிறோம் என்பது புரியும்.
உதாரணத்திற்கு ஒருவித ஒலி ஒருவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்னொருவருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ஒலியில் எந்த மாற்றமும் இல்லை. அதே ஒலிதான். அனுபவத்தில்தான் வேறுபாடு உள்ளது.
இதனைக் கொண்டு அனுபவம் தனி மனித தொடர்புள்ளதா? வஸ்து தொடர்புள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும் சப்தத்தில் சுகமோ துக்கமோ ஏற்படுத்தும் குணம் இல்லை. அந்த ஒலியைக் கொண்டு சுகப்படுவதோ துயரப்படுவதோ ஜீவனின் எண்ணத்தில் உள்ளது.
இனி ‘அஹம்’ எனும் ‘நான்’ பற்றி பார்ப்போம்:
“நானே அன்னத்தின் வடிவிலும் அன்னாதனின் வடிவிலும் இருப்பவன்” என்கிறார் பகவான். இங்கு ‘நான்’ என்ற சொல்லின் பொருள் தனிப்பட்ட மனித அகங்காரம் அல்ல. ஒவ்வொரு மனிதனிடமும் ‘நான்’ என்ற உணர்வாக உள்ளது ஈஸ்வர சைதன்யமே! அந்த ஈஸ்வர சைதன்யமே அன்னத்தின் வடிவிலும் அன்னாதனின் வடிவிலும் வெளிப்படுகிறது. இந்த கருத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தால், பிரபஞ்சம் அனைத்தும் இறைவனின் சொரூபம் என்பதை உணர்வோம்.
நாம் அனுபவிக்கும் பதார்த்தங்களில் உள்ளதும் இறைவனே! அதனை அனுபவிக்கக் கூடிய சக்தியாக நம்மில் இருப்பதும் இறைவனே! “ஒவ்வொரு உயிரிலும் இருந்தபடி அன்னத்தை நானே புஜிக்கிறேன்!” என்கிறார் மகாவிஷ்ணு.
அப்போது நானே உண்ணுகிறேன் என்று கூறுவது யார்? நாம் உணவை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறோம். அதனால் நாம் சாப்பிட்டோம் என்போம். ஆனால் வாயில் விழுந்த உணவை உள்ளே ஜீரணிக்கச் செய்வது யார்? ஜடராக்கினி வடிவத்தில் உள்ள நாராயணனே! இங்கு உணவின் வடிவில் இருக்கும் நாராயணன், உள்ளே ஜடராக்கினி வடிவத்திலும் இருந்தாலொழிய சாப்பிட்டது ஜீரணமாகாது.
அப்படியிருக்கையில் இந்த ‘நான்’ என்பது யார்? அது வெறும் பயனற்ற அகங்காரம் என்பது தெளிவு! எனவேதான் நான் செய்தேன் என்ற உடல் தொடர்பான அகம்பாவம் அஞ்ஞானம் எனப்படுகிறது. பரமேஸ்வரன் நம்மில் ‘அஹம்’ வடிவில் உள்ளான். அவனே இதனை அனுபவிக்கிறான் என்று கிரகிக்க இயலுமானால் அது ஞான அகங்காரமாக மாறுகிறது.
அதனால் “அஹமன்ன மஹமன்ன மஹமன்னம்….. அஹமன்னாதோ…” என்ற தைத்ரீய உபநிஷத் வாக்கியத்திற்கும், “அஹம் வைச்வானரோ பூத்வா” என்ற கீதை வாக்கியத்திற்கும் உள்ள கருத்தொற்றுமையை நாம் பரிசீலிக்க முடிந்தால்…. பதார்த்தத்தில் சக்தியாக இருப்பவனே பதார்த்தத்தை அனுபவிக்கும் சக்தியாகவும் நம்மில் இருக்கிறான் என்பதை அறிய முடிந்தால்….. அந்த சக்தியம் இந்த சக்தியும் கூட இறைவனின் சொரூபமே என்று அறிந்தால்…. இனி நம்முடையதான அகங்காரம் ஈசுவர அர்ப்பணமாகி… அது முழுவதும் கரைந்து காணாமல் போய்விடும்! இதனை அறிய வேண்டும்.
அதனால் சர்வ ஜகத்தும் விஷ்ணு ஸ்வரூபம் என்று அறியக் கூடிய புத்திகூர்மையை இந்த மந்திரத்தின் மூலம் நமக்கு அளிக்கிறார் ருஷி.

எனவே நாம் கண்ணால் பார்க்கும் பிரபஞ்சம், அனுபவிக்கும் பிரபஞ்சம், அனுபவிக்கும் சைதன்யம் இம்மூன்றும் இறைவனே என்று அறிந்து கொள்ளும் போது… ஜீவன், ஜகத் இரண்டும் கூட இறை சொரூபமாக மிகுகிறார்கள்.
அப்போது ஜீவன் என்றும் ஜகத் என்றும் ஜெகதீஸ்வரன் என்றும் மூன்று இல்லை… மூன்றும் இறைவனின் சொரூபமே! என்ற ஏக தத்துவம் புரியவரும். அப்படிப்பட்ட ஏக தத்துவத்திற்கு உபயோகப்படும் மந்திரத்தை தைத்திரீய உபநிஷத்து கூறுகையில்… அதனையே விஷ்ணு சஹஸ்ரநாமம் அளிக்கிறது. அதனையே பகவத்கீதை போதிக்கிறது.
எனவே பகவத் கீதை, உபநிஷத்து, விஷ்ணு சஹஸ்ரம் இம்மூன்றின் ஆதாரமாக அன்ன ரூபமான பிரபஞ்சம், அன்னத்தை சுவீகரிக்கும் ஜீவன் இவ்விரண்டும் இறைவனின் சைதன்யத்திலேயே உள்ளன என்று தெரிந்து கொள்வோம்!
நம்மில் அஹம் வடிவத்திலுள்ளது இறைவனின் சைதன்யமே தவிர உடல் தொடர்பான நிர்வாகமல்ல என்னும் தெளிவு கூட இதன் மூலம் ஏற்படுகிறது!
இவ்விதம் சின்னச் சின்ன சொற்களில் விஸ்தாரமான விஞ்ஞானத்தை அருளிய பாரதீய மகரிஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்




