
சங்கீத யோகியான நாத பிரம்மம் ஸ்ரீதியாகராஜர், சங்கீத சாஸ்திரம் பற்றி படைத்துள்ள கீர்த்தனைகள் அனைத்தையும் சங்கீதம் பயிலுபவர்கள் கட்டாயம் அத்யயனம் செய்ய வேண்டும். ஸ்வரம், ராகம்… என்று மட்டும் பார்க்காமல் அவர் அளித்துள்ள சங்கீதத்தின் பரமார்த்தத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அவர் பாடியுள்ள “ஸ்வர ராக சுதா யுரசயுத பக்தி…” என்ற கீர்த்தனையில் மோட்சத்தை அளிக்கக் கூடிய சங்கீத வித்யையை பக்தியில் பயன்படுத்தாமல் எவ்விதம் நிறைய பேர் வீணாக்கி வருகிறார்கள் என்பது பற்றிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதன் நான்காவது சரணத்தில் ஒரு மர்மமான சிந்தனையை அளிக்கிறார் தியாகராஜர்.
“ரஜதகிரீசுடு நகஜகு தெல்பு ஸ்வரார்ணவ மர்மமுலு
விஜயமுகல த்யாகராஜுடெருகே
விஸ்வசிஞ்சி தெலுசுகோ ஓ மனசா
ஸ்வரராக சுதா ரசயுத பக்தி…!”
“ஸ்வரார்ணவ மர்மமு” என்கிறார். அதாவது “ஸ்வர சாஸ்திரத்தின் ரகசியங்கள்”. ஸ்வரம் என்பது ஒரு பெரிய சமுத்திரம் போன்றது. அந்த ஸ்வரக் கடலின் அழகைப் பற்றி யார் கூறினார்கள் என்றால் “ரஜதகிரீசுடு”… அதாவது கைலாச பர்வத அதிபதியான சிவபெருமான். “நகஜகு தெல்பு”…. அதாவது பார்வதிதேவிக்குக் கூறினார்.
சங்கீத சாஸ்திரத்தின் ரகசியங்கள் சிவபெருமானுக்குதான் தெரியும். பரமேஸ்வரனுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள் சாமானியர்களுக்கு தெரியுமா என்ன? இதனைக் கொண்டு சங்கீதம் தனக்குத் தெரியும் என்ற கர்வம் யாருக்காவது இருந்தால் அதனை நீக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகக் கூறுகிறார் தியாகராஜர்.
ஸ்வரம் என்னும் எல்லையற்ற ஞானத்தை பார்வதி தேவிக்கு சிவன் விளக்கினார். அவை சிவனுடைய அருளால் தியாகராஜருக்குத் தெரிந்தது என்று கீர்த்தனையில் கூறுகிறார்.
இங்கு நமக்கு தியாகராஜர் ஒரு சம்பவத்தைப் பற்றி கூறுகிறார். அவர் வாழ்வில் நடந்த ஒரு அனுபவம். தியாகராஜர் சங்கீதக்காரர் மட்டுமல்ல. சிறந்த ராம உபாசகர். பல கோடி ராம மந்திரம் ஜெபம் செய்து சித்தி பெற்ற மகான். அவருக்கு ராம தாரக மந்திரத்தை உபதேசம் செய்தவர் ராமகிருஷ்ணானந்தர் என்ற யதி. மந்திர சாஸ்திரத்தில் ராம தாரக மந்திரங்கள் நிறைய உள்ளன. தியாகராஜருக்கு அவருடைய குரு உபதேசித்த மந்திரம் நாரதர் ஜெபித்து உபாசித்த ராம தாரக மந்திரம்.
நாரதர் உபாஸனை செய்த மந்திரத்தை அளித்ததன் பொருள் என்னவென்றால்… நாரதர் சங்கீத வித்யைக்கு குருவானதால் அவருடைய அருளும், அவர் உபாசித்த ராம மந்திரத்தை ஜபம் செய்வதால் ராமரின் அருளும் கிடைத்து சங்கீதத்தோடு பக்தியிலும் தன் சீடன் சித்தி பெற வேண்டும் என்ற உத்தேசத்தோடு தியாகராஜ சுவாமிக்கு உபதேசம் செய்தார்.

அதனை தியாகராஜர் திருவையாற்றில் பஞ்சநதி க்ஷேத்திரத்தில் ஜபம் செய்து ராமரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். அத்தகைய சித்தி கைவரப் பெற்ற அந்த சமயத்தில் அவருக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. அது என்னவென்றால் ஒரு துறவி வடிவில் நாரத மகரிஷி அவர் முன் தோன்றி ஒரு நூலை அளித்தார். அந்த நூலைத் திறந்து பார்த்து ஆனந்த பரவசம் அடைந்தார் தியாகராஜர். அதில் சங்கீத சாஸ்திரத்தின் ரகசியங்கள் பல விளக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்தபின், “நீங்கள் யார்?” என்று தலை நிமிர்ந்து பார்த்தால் அங்கு அதுவரை இருந்த யதி மாயமாகிவிட்டார். ஆச்சரியமடைந்த தியாகய்யா, “இப்போதுதான் புத்தகம் தந்தார். அதற்குள் எங்கே போனார்?” என்று பார்க்கையில் எதிரில் நாரத முனிவர் தரிசனம் அளித்தார். இது தியாகராஜரின் அனுபவம். இதில் கற்பனை எதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு கீர்த்தனையில் அவரே இதை தெரிவிக்கிறார்.
“மனசார கோரிதி குரு ராயா!
நேடு கனுலார கனு கொண்டி சத்குரு ராயா!
ஸ்ரீநாரத முனி குரு ராயா!”
என்று பாடுகிறார். நாரத மகரிஷியைக் கண்ணாரக் கண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நாரத முனிவரைப் பார்க்க வேண்டும் என்று மனதால் நினைத்தார். அது அன்று நிறைவேறியது என்று ஆனந்த பரவசம் அடைந்தார். அவ்வாறு நாரத மகரிஷியின் மூலம் வந்தது ஸ்வரார்ணவம் என்ற நூல். அந்த நூலில் சங்கீத சாஸ்திரத்தைப் பற்றிய பலப்பல ரகசியங்கள் இருந்தன. அந்த மர்மமான இரகசியங்களை எல்லாம் படித்துப் புரிந்து கொண்டார் தியாகராஜர்.
ஆனால் பிற்காலத்தில் அந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. அது அக்னிக்கு இரையாகி விட்டதாக ஒரு சம்பவம் தியாகராஜரின் வரலாற்றில் காணப்படுகிறது. போகப் பித்தனான சங்கீதக்காரன் ஒருவன் அந்த புத்தகத்தை எப்படியாவது பெற வேண்டும் என்ற ஆசையால் தியாகராஜரின் மூத்த சகோதரரான ஜபேசய்யாவை வேண்டினானாம். அவர் அந்த நூலை தியாகராஜருக்குத் தெரியாமல் எடுக்க முயற்சித்து தியாகராஜரின் பூஜை அறைக்குள் நுழைந்ததும் ஆஞ்சநேய சுவாமியின் சங்கல்பத்தால் திடீரென்று அக்னி மூண்டு அந்த நூல் எரிந்து சாம்பலாகிவிட்டது.
இதன் பொருள் என்னவென்றால் அருகதை அற்றவருக்கு உத்தம வித்யை கிடைக்காது. எத்தனையோ தவம் செய்து தியாகராஜர் பெற்ற ஞானம், எந்த தவமுமற்ற சாமானியனுக்கு எவ்வாறு கிட்டும்? அந்த கிரந்தம் எதற்காக வந்ததோ அதன் பிரயோஜனம் நிறைவேறிவிட்டது. அதனால் மறைந்து விட்டது.
அத்தகைய விஞ்ஞானம் பிரபஞ்சத்திற்கு கிடைக்காமல் போனால் எப்படி? என்று சிலருக்குக் கேள்வி எழலாம். உலகத்தில் எல்லோருக்கும் எல்லா விஞ்ஞானமும் தேவையில்லை. அருகதை உள்ளவர்களுக்கு மட்டுமே விஞ்ஞானம் தேவை!
இங்கு சிறப்பு என்னவென்றால்… தியாகராஜர் சங்கீதத்தின் மர்மங்களை அறிந்து கொண்டதால் அவற்றில் இருந்த அற்புதங்கள் அனைத்தும் தியாகராஜ கீர்த்தனைகளில் வெளிவந்துள்ளன. இந்த கண்ணோட்டத்தோடு தியாகராஜ கீர்த்தனையை பரிசீலிக்க வேண்டும்.
எத்தனையோ பேர் “வாகேயகாரர்கள்” இருந்தாலும், எத்தனை அற்புதமான பாடல்களை எழுதினாலும், தியாகராஜ கீர்த்தனைகளில் இருக்கும் தெய்வீகமோ சாஸ்வத தன்மையோ வேறு யாருக்கும் வராது. அப்படிப்பட்ட சக்தி அவருக்கு ஸ்வரம் குறித்த மர்மங்களை அறிந்ததால் கிடைத்தது. அவர் செய்த கோடிக்கணக்கான ராம தாரக மந்திரத்தின் பலனால் கிடைத்தது.
தனக்குக் கிடைத்த சங்கீத ஞானத்தை மிக மிகப் பணிவோடும் சமர்ப்பண புத்தியோடும் பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் ‘அந்தர் நாத” மார்கத்திலும் அனுஷ்டானம் செய்ததனால் அவர் அத்தகைய சித்தி கைவரப் பெற்றார்.
சிவன் பார்வதிதேவிக்குக் கூறிய ரகசியங்கள் என்றால் அது யோக சாஸ்திரமேயாகும். சாதாரண வித்யையல்ல. எளிதான ஸ..ப..ஸ சங்கீதம் அல்ல அது. யோக சாஸ்திரம். அதனால்தான் “ரஜதகிரீசுடு நகஜகு தெல்பு ஸ்வரார்ணவ மர்மமுலு விஜயமுகல த்யாகராஜுடெருகே!” என்றார்.
“விஜயமுகல” – விஜயம் என்றால் ‘நினைத்ததை சாதித்து முடிக்கும் வெற்றி!’ என்று பொருள். நினைத்ததை செய்து முடித்தார் தியாகராஜர். அதாவது நாரத முனிவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். பார்த்துவிட்டார். அப்படிப்பட்ட தியாகராஜர் கூறுவதை, “விஸ்வசிஞ்சி தெலுசுகோ ஓ மனசா!” என்கிறார்.
சிரத்தையோடு நம்ப வேண்டும். முதலில் எனக்கு அனுபவம் கிடைத்தால் பின்னர் நம்புவேன் என்று கூற கூடாது. நம்பினால்தான் அனுபவம் கிட்டும். அதனால்தான் நம்பிக்கையோடு அறிந்து கொள் என்று கூறுகிறார். “நம்பிக்கையோடு ஆராதனை செய்து பின் அதனை அனுபவத்தில் பெறு” என்ற ஒரு கருத்தை அளிக்கிறார்.
மனதுக்குக் கூறுவது போல் கூறி தன் அனுபவத்தையும் சங்கீத வித்யையின் உயர்வையும் அற்புதமாக உலகிற்களித்த தியாகப் பிரம்மத்திற்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



