
லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமம் இது. இந்த நாமத்தால் லலிதா பரமேஸ்வரியை குங்குமத்தாலும் புஷ்பத்தாலும் பூஜை செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைக்க கூடாது.
இதில் மானுட வாழ்க்கையோடு தொடர்புடைய மிக அற்புதமான செய்திகள் உள்ளன.
“மைத்ரீ முதலான நற்குணங்கள் மூலம் கிடைக்கக் கூடியவள்!” என்று இந்த நாமத்திற்குப் பொருள்.
நல்ல பண்பாடு இருந்தால்தான் இறைவன் நமக்கு கிடைப்பான் என்பது இதன் கருத்து. அது அம்பாளாகவோ, வேங்கடேஸ்வர ஸ்வாமியாகவோ, சிவனாகவோ… யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தெய்வம் ஒன்றேயானாலும் பல வடிவங்களிலும் பல பெயர்களாலும் வழிபடப்படுகிறான். இது ஒன்றை அறிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
தெய்வ அருள் கிடைக்க வேண்டுமென்றால் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த லலிதா நாமம் தெரிவிக்கிறது.
“மைத்ரி ஆதி வாசனா” அதாவது மைத்ரீ முதலான நற்குணங்கள் இருக்க வேண்டும். “முதலான” என்றால் நமக்குத் தோன்றுவதை எல்லாம் இங்கு எடுத்து வந்து எழுதக்கூடாது.
‘மைத்ரீ முதலான’ என்றால் என்ன என்பதை சாஸ்திரம் கூறுகிறது. பதஞ்சலி முனிவர் அளித்த யோக சாஸ்திரம் இதற்கு பதிலளிக்கிறது. யோக சாஸ்திரத்தில் கூறுகிறார் மைத்ரீ முதலான வாசனைகள் என்றால் நான்கு லட்ணசங்கள். இந்த நான்கு குணங்களும் ‘மைத்ரி ஆதிவாசனைகள்’.
இவை இருப்பவர்களுக்கு இறைவன் வசமாவான்.
அதாவது தம்மில் உள்ள ஈஸ்வர சக்தியை யார் சக்தியை அறிந்து கொள்வார்கள் என்றால் இந்த நான்கு நற்குணங்களும் உள்ளவர்களே!
இந்த நான்கும் என்ன என்பதை இப்போது பார்ப்போம்!
இவை உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகப்படும் குணங்கள். மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை பதஞ்சலி யோக சாஸ்திரத்தில் எடுத்துக் கூறுகிறார். லலிதா சஹஸ்ரநாமமும் இதையே கூறுகிறது. யோக சாஸ்திரம் என்பது நம் ஆன்மீக விஞ்ஞானத்தில் இன்றியமையாதது என்பதை அறிய வேண்டும். ஆன்மீக சாதனை என்றாலே யோகம் தானே?
இப்போது அந்த நான்கும் என்ன என்பதைக் காண்போம்! மைத்ரீ, முதிதா, கருணை, உபேக்ஷை என்று நான்கு குணங்களைக் கூறுகிறார்.
படைப்பில் மானுட உறவுகள் நான்கு விதங்களாக இருக்கும். ஒன்று, நம்மோடு சமமான நிலையில் உள்ளவர்கள். இரண்டு, நம்மைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். மூன்று, நம்மை விட குறைந்த நிலையில் இருப்பவர்கள். நான்கு, நம்மைப் பிடிக்காதவர்கள் அல்லது நமக்குப் பிடிக்காதவர்கள்.
இந்த நான்கு வித உறவுகளே முக்கியமாக மனித உலகில் நிலவுகின்றன.

முதலாவது… நம்மோடு சமமான நிலையில் உள்ளவர்கள். வியப்பு என்னவென்றால் சில விஷயங்களில் சிலர் நம்மோடு சமமாக இருப்பார்கள். சில விஷயங்களில் சிலர் நம்மை விட உயர்வாக இருப்பார்கள். சில விஷயங்களில் சிலர் நம்மை விடத் தாழ்வாக இருப்பார்கள். இதனை அறிய வேண்டும். செல்வத்தால் சமநிலையில் இருக்கும் சிலர் கல்வியில் உயர்வாக இருப்பார்கள். அனைவரும் அனைத்திலும் சிறப்பாக எப்போதும் இருக்க முடியாது.
சமமும் சமமின்மையும் படைப்பிலும், உலகியல் வாழ்க்கையிலும் சகஜம். இதனை உணர வேண்டும்.
அப்படியிருக்கையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
நம்மோடு சமமான நிலையில் உள்ளவர்களிடம் சினேகத்தோடு பழக வேண்டும். இது உயர்ந்த சொல். ஒரே துறையில் சிலர் நண்பர்களாக இருப்பார்கள். அதிலும் சிலர் உயர்வாகவோ சிலர் தாழ்வாகவோ தென்படலாம். நம் எண்ணம் மட்டும் சினேக பாவனையோடு விளங்க வேண்டும். சமமான நிலையில் இருப்பவர்களிடம் நட்பு பாராட்ட வேண்டும்.
நம்மை விட உயர்வான நிலையில் இருப்பவர்களிடம் “முதிதா” என்ற பாவனையை கைக்கொள்ளவேண்டும் . முதலில் மைத்ரீ பாவனை. அடுத்தது முதிதா பாவனை. முதிதா என்றால் மகிழ்ச்சி. நம்மை விட உயர்வாக உள்ளவர்களைக் கண்டு மகிழவேண்டும். அவர்களாவது சிறப்பாக வாழட்டும் என்று திருப்திப்பட வேண்டும்.
அடுத்து… நம்மை விடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ளவேண்டும்.
கருணை என்றால் அவர்களைப் பார்த்து வருந்துவது அல்ல! அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களை பார்த்து இரக்கப்பட்டு உதவி செய்ய வேண்டும். ஆனால் இரக்க குணத்தை வெளிப்படுத்தாமல் உதவி செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக எண்ணி உதவ வேண்டும். இது மிகவும் இன்றியமையாத அம்சம்.
நான்காவது “உபேக்ஷை”. பிடிக்காதவர்களிடம் எப்படி இருக்க வேண்டும்? நமக்குப் பிடிக்காதவர்கள் என்று யாரையும் நாம் எண்ணக் கூடாது. ஆனால் நம்மைப் பிடிக்காத சிலர் இருப்பார்கள். அவர்களிடம் உபேக்ஷையாக இருக்க வேண்டும். அதாவது உதாசீனமாக இருக்க வேண்டும். அவர்களை பற்றி நினைக்கவே கூடாது என்கிறார்.
மைத்ரீ, முதிதா, கருணை, உபேக்ஷை என்ற நற்குணங்கள் இயல்பாக மனிதனுக்கு வராது. யாரோ ஒரு சில மகான்களிடம் இந்த நற்குணங்கள் இயல்பாக இருக்குமே தவிர சாதாரண மனிதன் சாதனை மூலம் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதைக்கப்போது நம்மை நாம் பரிசீலனை செய்து கொண்டு இத்தகு சத்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை அபிவிருத்தி செய்து கொள்வதால் என்ன பயன் என்று கேட்டால் நல்ல பண்பாடு நம்மிடம் வளரும்போது சித்தம் சுத்தமாகிறது. சுத்தமான சித்தத்தால் இறைவனை நாம் அறியமுடியும்.
ரியலைசேஷன் என்று இதைத்தான் கூறுவார்கள்.
நம்முள்ளே உள்ள பரமாத்மாவை வெளிப்படுத்திக் கொள்வது…. சாக்ஷாத்காரம் பெறுவது… என்பது இதுபோல் நல்ல பண்பாடு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்!
ஆன்மீகப் பயிற்சி என்றால் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதே! அது வளரும் போது நாம் சமுதாயத்தைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறுகிறது.
இப்போது கூறிய மைத்ரீ, முதிதா, கருணை,உபேக்ஷை… இந்த நான்கிலும் அன்பே பிரதானமாக இருக்கிறது. பிரேம பாவனை நான்கு கிரணங்களாக வெளிப்படுகிறது.
“ப்ரேம ரூபா ப்ரியங்கரீ” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் படிக்கிறோம்.
அன்பே இறைவனின் வடிவம். அதனால் இறைவனின் ரூபத்தை அறிய வேண்டுமானால் இந்த நான்கு வித நற்குணங்களையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அவற்றின் மூலம் இறைவனை சாட்சாத்காரம் பெறவேண்டும்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்.



