
சாதாரணமாக வேதாந்த ஞானத்தை முதுமையில் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் ஒதுக்கி வைப்பார்கள். மேலும் முதியோர் மட்டுமே வேதாந்தம் பேச வேண்டும் என்ற பிரமை கூட பொதுவாக மக்களிடம் காணப்படுகிறது.
ஆனால் சிறுவயதிலிருந்தே வேதாந்தத்தைக் கற்றுத் தந்தால் அது சிறந்த தனி மனித ஆளுமையை ஏற்படுத்தும். ஏனென்றால் வேதாந்தம் வழியே கிடைக்கும் ஞானத்தால் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? உலகை எவ்வாறு பார்க்க வேண்டும்? என்பவற்றை அறிய முடியும்.
அதன் மூலம் ‘சர்வம் பகவத் சொரூபம்’ அனைத்திலும் இறைவன் அந்தர்யாமியாக நிறைந்துள்ளான். நம்மில் உள்ளதும் அதே பரமாத்மாவே என்ற புரிதல் ஏற்படும். உண்மையில் பரமாத்மாவைத் தவிர பிரபஞ்சத்தில் வேறு ஒன்று இல்லை என்பது தெரியவரும். அத்தகைய புரிதல் ஏற்பட்டால் இனி வேற்றுமை உணர்வு நீங்கி விடும்.
வேற்றுமைகள் உடலில் இருக்குமே தவிர சைதன்யத்தில் இருக்காது. ஒரு மனிதருக்கு தலைவலி ஏற்பட்டதென்றால் அடுத்தவருக்கும் தலைவலி வர வேண்டும் என்று அல்ல! அவரவர் தலை அவரவருடையது. அவரவர் வலியும் அவரவருடையதே! ஆனால் சைதன்யம் என்று பார்க்கும் போது அனைவரும் சமமே! இதனை அறிந்து கொண்டால் ஒருவரிடம் விருப்பு, மற்றவரிடம் வெறுப்பு போன்றவை இருக்காது.
சுகமும் துக்கமும் இப்போதைய நம் செயல்களால் வருகிறது என்பதைவிட முற்பிறவிகளின் வினைகளால் வந்து வாய்க்கின்றன என்கிறது சாஸ்திரம். அதனால் சுகம் விளைந்தால் மகிழ்வதும் துக்கம் விளைந்தால் வருந்துவதும் தேவையற்றது. மகிழ்ச்சியில் பொங்குவதும் துக்கத்தால் வருந்துவதும் கூட சரியான வழிமுறையல்ல! திடமான சித்தம் எவ்வாறு இருக்குமென்றால் சுகம் துக்கம் இரண்டையும் சகித்துக் கொள்வதில்தான்!
இதுவே “ஸ்தித ப்ரக்ஞனின் லக்ஷணம்” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதை இரண்டாவது அத்தியாயத்தில்.
“து:கேஷ்வனுத்விக்னமனா: சுகேஷு விகதஸ்ப்ருஹ” !
வீதராக பயக்ரோத: ஸ்திததீர் முனிருச்யதே !”
அத்தகைய ‘ஸ்தித ப்ரக்ஞ நிலை’ என்பதை ஆதர்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் அதனையே இலக்காகக் கொண்டு சந்தோஷம் ஏற்பட்டால் துள்ளுவதும் வருத்தம் ஏற்பட்டால் துவளுவதும் ஏற்படும்போது உடனுக்குடன் இந்த ஸ்லோகத்தை மனதில் நினைத்து, மனதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நிரந்தரம் இப்படிப்பட்ட வேதாந்த வாக்கியங்களை நினைத்துக் கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
வேதாந்த வாக்கியம் அச்சத்திற்கும் மோகத்திற்கும் ஆளாகாமல் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் நம் கடமையை சுயநலம் இல்லாமல் முழுமையாக நிறைவேற்றுவதற்கான சக்தியை அளிக்கிறது. இதனை அறிய வேண்டும்! இப்படிப்பட்ட புரிதலே உண்மையான ஆன்மீக ஞானம்! அதற்கான வழிமுறையை வியாசபகவான் புராணங்களில் விவரித்துள்ளார்.
முதலில் ஒரு சத்குருவை சரணடைய வேண்டும். பக்தி பாவனையோடு அவரையே இறைவனாக எண்ண வேண்டும். அதற்காக அவருடைய உருவப் படத்தை வைத்துக்கொண்டு பஜனை செய்ய வேண்டும் என்பதல்ல. இறைவனிடம் எத்தனை கௌரவமும் பக்தியும் இருக்குமோ குருவிடமும் அதே போல் இருக்க வேண்டும். அதற்காக குரு என்ற பெயரில் புதிதாக ‘கல்ட்’ எதையும் உருவாக்கி இறைவனும் குருவும் ஒன்றே என்ற கருத்துக்கு தவறான வடிவம் கொடுக்கக் கூடாது. இதனை அறிய வேண்டும்!
எனவே, “யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ” என்று கூறியுள்ளது போல் இறைவனிடமும் குருவிடமும் கௌரவம் கொண்டு அப்படிப்பட்ட பக்தி மூலம் இறையருளைப் பெறுவதற்கு ஆன்மீக சாதனையில் ஈடுபட்டால் தீவினைகளும் மனதில் உள்ள மலினங்களும் விலகிப் போகும். அஞ்ஞானம் அழிந்து போகும். அகம்பாவம் கரைவதற்கு குருவை சரணடைவது மிகவும் முக்கியம்.
பகவானின் அருளுக்காக சாதனை செய்து வந்தால் மனம் தூய்மை அடைகிறது. மனம் நிர்மலமானால் நம்முள் உள்ள பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும். நம்மில் உள்ள இறைவனை அறிந்தவுடன் பிரபஞ்சம் அனைத்தும் பரமாத்மாவாக தெரிந்துகொள்ள முடியும். எங்கும் நிறைந்திருப்பது இறைவன் ஒருவனே என்று அறிந்து கொண்டபின் ஒன்றின் மீது விருப்பமும் மற்றொன்றின் மீது வெறுப்பும் இல்லாமல் அனைத்தும் இறைவன் மேல் ஏற்படும் ப்ரீத்தியாக மாறும்.
“சுபம் லப்த்வா ந ஹ்ருஷ்யேத குப்யேல்லப்த்வா சுபம் ந ஹி !
த்வந்த்வேஷு சமதா யஸ்ய ஞானவான் உச்யதே ஹி ஸ: !”
ஞானி என்று யாரை கூற வேண்டும் என்றால் ஆயிரம் புத்தகங்கள் படித்தவர்… நூறு புத்தகங்களை நினைவில் வைத்திருப்பவர்… கடகடவென்று பார்க்காமல் அவற்றை ஒப்பிப்பவர்…. இவர்களை ஞானி என்று கூறலாமென்று நினைத்தால் அது முட்டாள்தனம். எதனாலென்றால் வெறும் சாஸ்திரஞானம் ஞானமல்ல!
உண்மையான ஞானி எப்படிப்பட்டவர் என்றால், “சுபம் லப்த்வா ந ஹ்ருஷ்யேத” – நன்மை விளைந்தவுடன் மகிழ்ந்து துள்ளாமல் இருப்பவர். “குப்யேல்லப்த்வா சுபம் ந ஹி” – நினைத்தது நடக்கவில்லை என்றும் எதிர்பாராத துயரம் நடந்து விட்டதென்றும் சினம் கொள்ளாமல் இருப்பவர் யாரோ, இருமைகளில் சமபுத்தியோடு யார் இருப்பாரோ அவரையே ஞானி என்பார்கள்.
சமபுத்தியை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். யோகங்கள் அனைத்திலும் பெரிய யோகம் சமத்துவம்! இதனை அறிய வேண்டும். இருமைகளால் பாதிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் படைப்பில் இருமைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்! அதனால் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்கு ஆன்மீக சாதனையில் ஈடுபடவேண்டும்.
ஒருமுறை நினைத்தால் நடந்துவிடாது. சமத்துவம் சிறிது சிறிதாக சாதகனுக்கு பயிற்சியால் கிட்டக் கூடியது. அவ்வாறின்றி, “இன்று நினைத்தோம். செய்ய முடியாமல் போய் விட்டது. அதனால் ஆன்மீக சாதனையை விட்டுவிடலாம்” என்று எண்ணாமல் நாளை செய்ய முடியாமல் போனாலும் நாளை மறுநாளாவது செய்து பார்க்கலாம் என்ற தன்னம்பிக்கையோடு தொடர்ந்து சாதனை செய்தபடியே இருக்க வேண்டும்.
ஏனென்றால் எவ்வாறு பிறந்தோமோ அவ்வாறே நாம் வாழ்ந்து வரவில்லை. நம்மை நாம் பண்படுத்திக் கொண்டே வருகிறோம். அதேபோல் இதுவரை நாம் சுகம் துக்கம் லாபம் நஷ்டம் போன்ற எண்ணங்களைக் கொண்டு துள்ளுவதும் துவளுவதுமாக வாழ்ந்து விட்டோம். இனி மேலாவது குரு வாக்கியங்களின் மேல் நம்பிக்கை வைத்து இறை நம்பிக்கையை ஆதாரமாக கொண்டு இறைவனை உபாசனை செய்து கிரமமாக நல்ல நடத்தையை பழகிக் கொண்டு இருமையை வெல்ல முடிந்தால்… அந்த “த்வத்வாதீதம்” என்ற சமத்துவத்தை சாதிக்க முடிந்தால்… இகத்திலேயே மோட்சம் கிடைத்துவிடும்.
அப்படிப்பட்ட சமத்துவத்தை அளிப்பதே உண்மையான பக்தி! பக்தி மார்க்கம் கூட இந்த எண்ணத்தை உருவாக்குவதற்காக ஏற்பட்டதே! ஏனென்றால் பக்தி என்பது அகங்காரத்தை நீக்குவதற்கு காரணமாகிறது. அதனால்தான் பகவத் கீதையில் பக்தர்களின் இயல்பு பற்றி கூறும்போது,
“ஸம: சத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோ: !
சீதோஷ்ண சுக து:கேஷு சம: சங்க விவர்ஜித: !!
துல்ய நிந்தாஸ்துதிர் மௌனீ சந்துஷ்டோ யேன கேன சித் !
அநிகேத: ஸ்திரமதிர் பக்திமான் மே ப்ரியோ நர: !”
என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. எப்படிப்பட்ட பக்தன் தனக்கு பிரியமானவன் என்று கூறுகையில், “சமபுத்தி கொண்டவனே பிரியமானவன்!” என்கிறார். அதாவது பக்தனானாலும் சமபுத்தி உள்ளவனாக இருக்க வேண்டும். ஞானியானாலும் சமபுத்தி உள்ளவனாக இருக்க வேண்டும். எனவே சமபுத்தி கொண்டவனே உண்மையான ஞானி, உண்மையான பக்தன்!
“தனயந்து அகில பூதமுலந்து ஒகபங்கி சமஹிதத்வம்புன ஜரகுவாடு” (கவி போத்தனாவின் தெலுங்கு பாகவதம்) என்று பிரகலாதனை வர்ணிக்கிறார் சுக யோகீந்திரர்! தன்னிடமும் பிறரிடமும் சமபுத்தி கொண்டுள்ளவன், ஹித புத்தி கொண்டுள்ளவனாதலால் பிரகலாதன் பாகவதோத்தமன் என்று அழைக்கப்படுகிறான்.
அதனால் துள்ளாமலும் துவளாமலும் பேலன்ஸ் எனப்படும் சுயகட்டுப்பாடோடு இருப்பதற்கு கற்கவேண்டும். தர்மத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க வேண்டுமே தவிர சுகத்திற்காக, துக்கத்திலிருந்து தப்பிச் செல்வதற்காக தன் நிலையில் இருந்து வழுவி விடக்கூடாது.
இது நமக்கு ஆதர்சமாக வேண்டும்! இது நம் வாழ்க்கை வழிமுறையாக வேண்டும்! அத்தகைய சக்தியை அருளும்படி மகரிஷிகளை வேண்டி வணங்குவோம்!
தெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
(இத்துடன் இந்த ருஷி வாக்கியம் தொடர் நிறைவு பெறுகிறது)



