spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமைகருணைக் காஞ்சி கனகதாரை - பாகம் 6

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 6

ஆயின், அந்தப் பராசக்தி மகாமாயையாக இருப்பதன் விசேஷம், முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கும் ‘என்றைக்கோ வரத்தான் செய்யும்’ என்று நினைக்குமாறேதான் வைத்திருக்கிறாள்! ஆனாலும் அவளே கொஞ்சத்தில் கொஞ்சம் ஞானாம்பாளாக அநுக்ரஹம் செய்திருப்பதில், அன்று அச்சமயத்தில் ‘நாம் எழுதியது வெளி வார வேண்டும்’ என்ற ஆசையும், வரும் என்பதில் திருப்தியும் ஏற்பட்டாலும் பொதுவாக அந்த எண்ணம் எனக்குக் கிடையாது. எழுத்துப் பணி வெளிக்கார்யம் உள்ளுலகிலேயே நிலைப்படுத்துவதற்கு குந்தமாக இருப்பதாகத்தான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆகையால் பெரியவாளின் ஸம்பூர்த்தியான சரித்ரம் இனி என்றோ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, ஸ்வய சரித்ரம் ‘ஸ்வயம்’ பூர்த்தியாக அடிபட்ட நிலையில் நிலைப்பதே முக்யம் என்பது தான் எண்ணமாக உள்ளது. முன்‌கதைக்குத் திரும்புவோம். தாம் ஜீவியவந்தாராக உள்ளபோதே நான் எழுதும் தமது ஜீவிய சரிதம் வருவதில் தமக்கு விருப்பமில்லை என்று கூறிய பெரியவாள் ஏனென்றும் விளக்கினார். அதன்பின், ‘பூராவா வரணும்-கிறது ஒண்ணு. வரது பூராவும் ஸரியாயிருக்கணும்-கறது ஒண்ணு. இது ரொம்ப முக்யம். பெறத்தியார் சொல்லி கேட்டு எழுதறது முழுக்க அப்டி இருக்கும்னு சொல்ல முடியாது. ஒவ்வொத்தன் ஸமாசாரமும் அந்த ஒத்தனுக்கு மட்டுந்தானே முழுக்க ஸரியாத் தெரியும்? ‘முழுக்க’னு சொல்ல முடியாட்டாலும் இங்கே க்லோஸா இருக்கறவா, கூடிய மட்டும் ஸத்யமா இருக்கறவா எழுதியிருக்கறதும், அந்த மாதிரி இருக்கப்பட்டவாளை நீ கேட்டு அவா சொல்றதும் பெரும்பாலும் ஸரியாவே இருக்கும். அதையெல்லாம் பாத்து, கேட்டு, அதை பேஸ் பண்ணி எழுதிண்டு போ. ஆனா, ஃபைனலா எங்கிட்டே காட்டு, என் கண்ணு, புத்தி ஸரியா இருக்கற மட்டும் எங்கிட்டயே கொண்டு வா. பாத்து, ஸரி பண்ணவேண்டி ஏதாவது இருந்தா, பண்றேன்.” எதிர் பாராத இந்த மஹா வரத்துடன், இன்னொரு மஹா வரமும் ஈந்தார். “ என்னையே ஏதாவது கேட்டுக்கணும்னாலும் கேளு; தாராளமாகக் கேளு. நீ கேக்காமயே, எனக்கா என்னவாவது சொல்லணும்னு தோணினாலும் சொல்றேன்.” என்ன இருந்தாலும் இப்படி வராநுக்ரஹத்தைக் கோட்டை விடக்கூடாதென்று தோன்றிவிட்டது போலும்! படுத்துகிற, ஆனாலும் சமர்த்தான குழந்தையின் அழகுப் பார்வையுடன், “இப்படிச் சொன்னதால எல்லாம் சொல்லிவிடுவேன்னு நினச்சுண்டுடாதே!” என்றார். இன்னும் பலவும் அந்த உரையாடலில் உண்டு. ‘இப்போதிக்கு’ இது போதும். ‘நடக்கணும்-னு இருந்தா” மீதம் வருகிறபோது வரும். தம்மையே வாழ்க்கை விவரங்கள் கேட்க அவர் அநுமதித்ததின் பேரில் நான் கேட்ட, எழுதிவைத்துக் கேட்ட ஒன்றுதான் தொடக்கத்தில் கண்ட கணபதி ஆவாஹன மந்திர விஷயம். அதில் பெரியவாளுக்கு முந்தயப் பட்டத்தைத்தான் ‘கலவை சின்னப் பெரியவாள்’ என்று குறிப்பிட்டு இருந்தேன். அவருக்கு முந்தயவர் ‘கலவை பெரிய பெரியவாள்’. இருவருமே கலவையில் ‘ஸித்தி’ ஆனவர்கள் என்பதும் 66-வது பட்டமான பெரிய பெரியவாளுக்குப் பின் அடுத்த பட்டம் எட்டே நாள்தான் பீடம் வகித்து வாழ்வை முடித்தவரென்றும் வாசகர்கள் அறிந்திருபார்கள். அந்த சின்னப் பெரியவர் நமது பூர்வாச்ரமத்தில், நமது மஹா பெரியவாளின் பெரியம்மா புத்திரரே என்பதும் தெரிந்திருக்கலாம். நமது பெரியவாளின் தாய்வழிப் பாட்டனார் திருவையாற்றுக்கு அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் என்ற பெரும் வேத வித்வான். தர்ம சாஸ்திரப் பிரயோகங்களில் வல்லவர். அவருக்கு மூன்று புத்திரர், மூன்று புத்திரி. மூத்த புத்திரி லக்ஷ்மியம்மாளின் ஏக புத்திரரே பிறகு கலவை சின்னப் பெரியவரானவர். லக்ஷ்மியம்மாள் பல்லாண்டுகள் புத்ராபாக்யமின்றி இருந்தாள், அவள் வயிறு திறப்பதற்கு நாகேச்வர சாஸ்திரிகள் ஈச்சங்குடியிலுள்ள லக்ஷ்மிநாராயணப் பெருமாளை வேண்டிக்கொண்டார். பத்தாம் மாதம் மலடியின் மடி நிறைய மணிப் பயல் பிறந்துவிட்டான். மாயப் பெருமாள் எப்படியெப்படி திருவிளையாடல் புரியப் போகிறான் என்று அப்போது யார் கண்டது? அவன் பெயரையே சற்று மாற்றி லக்ஷ்மீகாந்தன் என்று குழந்தைக்கு இட்டார் மாதாமஹர். ‘காந்தன்’ என்றே கூப்பிடுவார்கள். மெய்யாலுமே பாலனிடம் ஒரு வசீகர காந்தம் இருந்தது. காந்ததோடு சந்தமும்! மஹாப் பெரியவாளின் இந்த ஒன்றுவிட்ட அண்ணா- பிற்காலத்தில் அவரது நேர் குரு – பிறந்தது 1890-ல். அதாவது பெரியவாளைவிட அவர் நாலு வயசு மூத்தவர். தாய்வழியில் அக்குடும்பம் பல துறைகளில் மஹா மேதைகளை ஈந்த ஒரு பரம்பரையாகும். கன்னட ஹொய்ஸள ஸ்மார்த்தரில் ஒரு பிரிவே இது. ஹொய்ஸளர் பற்றி நம் ஸ்ரீசரணர் சரித்திரப் பேராசிரியரும் அருஞ்சுவைக் கதாசிரியரும் ஒருங்கே ஆகிப் பல சொன்னதுண்டு. -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe